அரசியலமைப்பின் 83 ஆவது சரத்து: திருத்தியமைக்க அமைச்சரவை அனுமதி – மீண்டும் எழுந்துள்ள சிக்கல்
.
அரசியலமைப்பின் 83ஆவது சரத்தின் ஆ பிரிவை திருத்தம் செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் இங்கு கருத்து தெரிவித்த பந்துல குணவர்தன,
அரசியலமைப்பின் 83ஆவது சரத்தின் ஆ பிரிவில் ஆறு வருடங்களுக்கு மே எனக் குறிப்பிடப்பட்டுள்ள சொல்லுக்கு பதிலாக ஐந்து வருடங்களுக்கு மேல் என குறிப்பிட வேண்டுமென்ற அமைச்சரவை யோசனை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் நீதி அமைச்சர் விஜேதாச ஆகியோர் இணைந்து கூட்டான சமர்ப்பித்தனர்.
இந்த யோசனைக்கு கொள்கை ரீதியான அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், விரைவில் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படும். அதன் பின்னர் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும். இந்தத் திருத்தச்சட்டம் சட்டமா அதிபர் திணைக்களத்தால் தயாரிக்கப்பட்டது.” என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அவரசமாக அரசியலமைப்பில் இவ்வாறான திருத்தமொன்றை மேற்கொள்ள வேண்டிய அவசியம் என்னவென எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பியுள்ளளன. இத்திருத்தச்சட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதன் ஊடாக பொது வாக்கெடுப்பொன்றுக்கு செல்லும் நிலை உருவாகலாம் எனவும் எதிர்க்கட்சிகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் மேற்கொள்ளும் இறுதி முயற்சியாகவும் இது இருக்கலாம் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.