பத்து பாரிய மோசடிகள், ஊழல்கள் குறித்து விசாரணை; ஜனாதிபதி அநுர முடிவு
.
நாட்டை உலுக்கிய 10 பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்களை விசாரிப்பதற்கான நடவடிக்கையை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னெடுக்க தீர்மானித்துள்ளதுடன் முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான பல பாரிய மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் இந்த வாரம் முதல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் இவை தொடர்பில் பொது மக்களுக்குத் தெரிந்த தகவல்களை மிகவும் இரகசியமாக வழங்குவதற்கான சந்தர்ப்பத்தை வழங்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தேர்தல் மேடைகளில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கையை ஜனாதிபதி முன்னெடுத்துள்ள நிலையில், விவசாயிகளுக்கான மானியத்தை 15 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரமாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில் நாட்டையே உலுக்கிய சுமார் 10 பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்களை வெளிக்கொண்டு வந்து விசாரணைகளை மீள ஆரம்பிக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார். இதன்படி இன்னும் சில தினங்களில் பல சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாக உள்ளன.
குறிப்பாக, மத்திய வங்கி பிணைமுறி மோசடி முதலிடத்தில் உள்ளது. கடந்த காலங்களில் அரசியல் மேடைகளில் ரணில்-அநுர ஒப்பந்தம் தொடர்பில் பேசப்பட்ட நிலையில் மத்திய வங்கி பிணைமுறி தொடர்பில் ஆரம்பம் முதலே மீண்டும் விசாரணை நடத்த புதிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கடந்த இரண்டு வருட அரசாங்கத்தின் போது இடம்பெற்ற பல பில்லியன் பெறுமதியான மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கும் ஏற்கனவே தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், ஜனாதிபதித் தேர்தலுக்கு 3 வாரங்களுக்கு முன்னர், அமைச்சர் ஒருவரின் மனைவி மற்றும் பிள்ளைகளின் கணக்குகளில் பாரிய தொகை வைப்பிலிட்டதாக கூறும் கோப்பு ஒன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கையில் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கொழும்பு 3 இல் ரணில் அரசாங்கத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட ஒருவரால் பல கோடிகள் பெறுமதியான மூன்று ஏக்கர் காணி கொள்வனவு செய்யப்பட்டமை குறித்தும், அதற்கு முன்னர் வாங்கப்பட்ட இதேபோன்ற மற்றொரு காணி பற்றிய தகவல் அடங்கிய கோப்பு தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதற்கு மேலதிகமாக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான பல பாரிய மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் அடுத்த வாரம் முதல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதுடன் பொதுமக்களுக்குத் தெரிந்த தகவல்களை மிகவும் இரகசியமாக வழங்குவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கவும் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.