ரணிலின் புதிய இலக்கு: தமிழ், முஸ்லிம் வாக்குகள் கிடைக்குமா?
.
எதிர்வரும் செம்படம் 21ஆம் திகதி நடைபெற உள்ள 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிகாக இலங்கையில் உள்ள பல தூதரகங்கள் நேரடியாக பணியாற்றி வருவதாக தெரியவருகிறது.
மேற்குலக நாடுகளின் ஆதரவு ரணிலுக்கு பலமாக இருப்பதாலும், ரணில் ஊடாக பல்வேறு செயல்பாடுகளை எதிர்காலத்தில் முன்னெடுக்கலாம் என்ற அடிப்படையிலும் இலங்கையில் உள்ள இராஜதந்திரிகள் ரணிலுக்கு ஆதரவாக பணியாற்றி வருகின்றனர்.
2 மில்லியன் சிறுபான்மை வாக்குகளை பெற்றுக்கொள்வது ரணிலின் திட்டமாக உள்ளது. அதற்காக அவர் பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்படுவதுடன், சிறுபான்மை வாக்குகளை பெறுவதற்கான கட்டமைப்புகளையும் பிரதேச மட்டத்தில் பலப்படுத்தி வருகிறார்.
வடக்கு, கிழக்கு, பெருந்தோட்டப்பகுதிகள் உட்பட நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழும் பகுதிகளில் தமக்கான ஆதரவு தளத்தை அதிகரித்துக்கொள்வதற்கான நகர்வுகளில் ஈடுபட்டுள்ள ரணில் தரப்பு, சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் உட்பட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து வருவதாக தெரியவருகிறது.
தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் அதிகமான தொடர்புகளை பேணிவரும் இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களில் பணியாற்றும் இராஜதந்திரிகள் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக பல்வேறு களப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஒட்டுமொத்தமாக 2 மில்லியன் தமிழ், முஸ்லிம் வாக்குகளை பெற்றால் இலகுவாக வெற்றிபெற்றுவிடலாம் என்பது ரணிலின் திட்டமாக உள்ளதாகவும் தெரியவருகிறது.