ஏனைய கட்சிகள் ஆட்சியமைக்கும் உள்ளுராட்சிமன்றங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு பலமுறை சிந்திப்போம்! - அநுரகுமார
கடுமையாகக் கண்டித்துக் கருத்து வெளியிட்ட தர்மலிங்கம் சித்தார்த்தன், - எப்ப தொடக்கம் நீங்களும் நல்லவரானது?

ஏனைய கட்சிகள் ஆட்சியமைக்கும் உள்ளுராட்சிமன்றங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு பலமுறை சிந்திப்போம் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கூறுவது மக்களை அச்சுறுத்துகின்ற நடவடிக்கையாகும் எனச் சுட்டிக்காட்டியுள்ள ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், இத்தேர்தல் விதிமீறல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மன்னாரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்திருக்கும் உள்ளுராட்சிமன்றங்களால் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்படும்போது அவற்றுக்குக் கண்ணை மூடியவாறு நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படும் எனவும், வேறு கட்சிகள் ஆட்சியமைத்திருக்கும் உள்ளுராட்சிமன்றங்களால் சமர்ப்பிக்கப்படும் நிதி ஒதுக்கீட்டு முன்மொழிவுகள் குறைந்தபட்சம் 10 தடவைகளேனும் ஆராயப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
இதனைக் கடுமையாகக் கண்டித்துக் கருத்து வெளியிட்ட தர்மலிங்கம் சித்தார்த்தன், இதுவரை காலமும் எந்தவொரு ஜனாதிபதியும் வெளியிடாத கருத்தை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்டிருப்பதாக சாடினார்.
ஜனாதிபதி என்பவர் இந்நாட்டின் சகல பிரஜைகளுக்கும் பொதுவானவர் எனச் சுட்டிக்காட்டிய அவர், அத்தகைய முக்கிய பொறுப்பில் இருக்கும் நபர் இவ்வாறு கூறுவது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருப்பதாகக் குறிப்பிட்டார்.
அதேபோன்று உள்ளுராட்சிமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் நிலையில், ஏனைய கட்சிகள் ஆட்சியமைக்கும் உள்ளுராட்சிமன்றங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய பலமுறை சிந்திப்போம் எனக் கூறுவது மக்களை அச்சுறுத்துகின்ற நடவடிக்கையாகும் எனச் சுட்டிக்காட்டிய சித்தார்த்தன், ஜனாதிபதியின் இத்தகைய தேர்தல் விதிமீறல் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினார்.
அதுமாத்திரமன்றி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இந்த உரை மூலம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எவ்வாறு செயற்படும் என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.