Breaking News
காணி விடுவிப்பு கோரி ஊடக சந்திப்பினை மேற்கொண்டவர்களை அச்சுறுத்திய காவல்துறை!
பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள காணிகளை விடுவிக்க வேண்டும் - ” வலி. வடக்கு காணி விடுவிப்புக்கான அமையம்”

யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் வியாழக்கிழமை பயணம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதியிடம் தமது காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊடகங்கள் ஊடாக கோரிக்கை விடுத்த காணி உரிமையாளர்களுக்கு காவல்துறையினா் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள தமது காணிகளை விடுவிக்க வேண்டும் , பலாலி வீதி கட்டுப்பாடுகள் இன்றி முழுமையாக திறக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை ஜனாதிபதியிடம் ஊடகங்கள் ஊடாக முன் வைக்கும் வகையில் வசாவிளான் சந்திக்கு அண்மையில் ஊடக சந்திப்பொன்றினை ” வலி. வடக்கு காணி விடுவிப்புக்கான அமையம்” எனும் அமைப்பு இன்றைய தினம் வியாழக்கிழமை ஏற்பாடு செய்திருந்தனர்.
குறித்த ஊடக சந்திப்பு ஆரம்பமாக இருந்த சமயம் அவ்விடத்திற்கு சென்ற பலாலி காவல் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான காவல்துறைக் குழுவினர் இவ்விடத்தில் ஊடக சந்திப்பினை நடாத்த முடியாது என ஊடக சந்திப்புக்கு வந்திருந்தவர்களை அச்சுறுத்தி , அவர்களை தனித்தனியே ஒளிப்படங்கள் எடுத்ததுதான் , அவர்களின் பெயர் , அடையாள அட்டை இலக்கம் என்பவற்றை பதிவு செய்தனர். அத்துடன் அங்கிருந்த ஊடகவியலாளர்களையும் ஒளிப்படங்கள் எடுத்து அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டனர். அச்சறுத்தல்களையும் மீறி குறித்த ஊடக சந்திப்பு அவ்விடத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை பலாலி காவல்து நிலைய பொறுப்பதிகாரி இனவாத ரீதியில் செயற்பட்டு வருபவர் எனவும் ,சட்டவிரோதமான முறையில் தையிட்டி கட்டப்பட்டுள்ள விகாரைக்கு எதிரான போராட்டங்களின் போதும் போராட்டக்காரர்களுடன் முரண்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருபவர் என்பதுடன் , விகாரைக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடுவர்களுக்கு எதிராக பாரதூரமான குற்றச்சாட்டுக்களை முன் வைத்து கைது நடவடிக்கைகளை முன்னெடுக்க முற்படுபவர் எனவும் மக்களால் குற்றம் சாட்டப்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

