டொனால்ட் டிரம்ப் ஆவணங்கள் இல்லாத புலம்பெயர்ந்தோரை எங்கு அடைத்து வைக்க திட்டமிட்டுள்ளார்?
,
![](https://www.sankathi.com/uploads/009.webp)
ஆவணங்கள் இல்லாத புலம்பெயர்ந்தோரை தடுப்புக் காவலில் வைப்பதற்காக குவாண்டானமோ விரிகுடாவில் ஒரு மையம் அமைக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதில் 30,000 பேரை தங்க வைத்திருக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கியூபாவில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தில் அமையவுள்ள இந்த மையம் அதன் உயர் பாதுகாப்பு ராணுவ சிறையிலிருந்து தனித்து இருக்கும் என்றும், “அமெரிக்க மக்களை அச்சுறுத்தும் மிக மோசமான சட்டவிரோத குற்றவாளிகளை,” தங்க வைக்கப் பயன்படும் என்றும் அவர் சொல்கிறார்.
“அவர்களை குவாண்டானமோவிற்கு அனுப்பப் போகிறோம்,” என்று புதன்கிழமை டிரம்ப் கூறினார்.
சட்டத்திற்கு புறம்பாக புலம்பெயர்ந்தோரை தங்க வைக்க குவாண்டானமோ விரிகுடா நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை சில மனித உரிமை குழுக்கள் கண்டித்திருந்தன.
குவாண்டானமோ விரிகுடாவிலுள்ள கடற்படை தளம் எதற்கு பயன்படுத்தப்படுகிறது?
கடந்த 2001ஆம் ஆண்டு, செப்டம்பர் 11 அன்று நடந்த தாக்குதலுக்குப் பிறகு கைது செய்யப்பட்டவர்களை அடைத்து வைக்கப் பயன்படுத்தப்பட்டது என்ற வகையில் கியூபாவில் உள்ள இந்த அமெரிக்க கடற்படை தளம் நன்கு அறியப்பட்ட இடம்.
அங்கே ஒரு ராணுவ தடுப்புக் காவல் மையம் மற்றும் அதிபர் ஜார்ஜ் டபிள்யு. புஷ் அரசு நிர்வாகத்தால் “பயங்கரவாதத்தின் மீதான யுத்தம்” எனக் கூறப்பட்ட நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்ட வெளிநாட்டினரை விசாரிப்பதற்காக நீதிமன்றங்களும் இருக்கின்றன.
கடந்த 2002இல் புஷ்ஷால் உருவாக்கப்பட்ட இந்த மையத்தில் தற்போது, 9/11 தாக்குதலின் மூளையாகச் செயல்பட்ட கலித் ஷேக் முகமத் உள்ளிட்ட 15 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். உச்சபட்சமாக சுமார் 800 சிறைவாசிகள் இருந்தனர். அந்த எண்ணிக்கை குறைந்துள்ளது.
பராக் ஒபாமா உள்பட ஜனநாயக கட்சி அதிபர்கள் பலர் அதை மூடுவதாக சூளுரைத்தனர், ஆனால் அவர்களால் அதைச் செய்ய முடியவில்லை.
ஆவணங்களின்றி புலம்பெயர்ந்தோரை வைத்திருக்க தனியாக ஒரு வசதியும் பல பத்தாண்டுகளாக அங்கு உள்ளது.
குவாண்டானமோ மைக்ரண்ட் ஆபரேசன்ஸ் சென்டர் (GMOC) எனப்படும் குவாண்டானமோ புலம்பெயர் செயற்பாட்டு மையம், குடியரசுக் கட்சி, ஜனநாயக கட்சி என இரண்டு நிர்வாகங்களாலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
படகு மூலம் அமெரிக்காவை சட்டவிரோதமாகச் சென்றடைய, குறிப்பாக ஹைத்தி மற்று கியூபாவில் இருந்து முயற்சி செய்து இடைமறிக்கப்பட்டவர்களே இங்கு அதிகம் வைக்கப்பட்டனர்.
“நாங்கள் வெறுமனே தற்போது இருக்கும் புலம்பெயர் மையத்தை விரிவாக்கப் போகிறோம்,” டிரம்பின் ‘எல்லையின் ஜார் மன்னன்’ என அறியப்படும் டாம் ஹோமன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அந்த மையம், ஐசிஇ எனப்படும் குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத்தால் நடத்தப்படும் எனவும் அவர் கூறினார்.
டிரம்ப் என்ன செய்ய விரும்புகிறார்?
திருட்டு அல்லது வன்முறைக் குற்றங்களுக்காக கைது செய்யப்படும் ஆவணங்களற்ற குடியேறிகளை வழக்கு விசாரணை முடியும் வரை சிறையில் வைக்க வேண்டும் என்று சொல்லும் ரைலி சட்டத்தை அங்கீகரித்து கையெழுத்திட்ட பின்னர் டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
வெனிசூவேலாவில் இருந்து குடியேறிய ஒருவரால் கடந்த வருடம் கொல்லப்பட்ட ஜார்ஜியாவை சேர்ந்த நர்சிங் மாணவர் நினைவாகப் பெயரிடப்பட்ட அந்த சட்டத்திற்கு கடந்த வாரம் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. இது அரசு நிர்வாகத்திற்கு சட்ட ரீதியான வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
கடலில் அமெரிக்க கடலோர காவல்படையால் புலம்பெயர்வோர் இடைமறிக்கப்பட்ட பின் நேரடியாக அங்கு கொண்டு செல்லப்படலாம் என்றும் “அதிகபட்ச” தரநிலைகள் பின்பற்றப்படும் எனவும் டிரம்ப் தெரிவித்தார்.
அவரது கூற்றுப்படி, புலம்பெயர்வோரை தடுப்புக் காவலில் வைக்க அமெரிக்காவுக்கு இருக்கும் வசதி புதிய மையத்தால் இரட்டிப்பாகும்.
குவாண்டானமோவில் யார் வைக்கப்படுவார்கள்?
குவாண்டானமோவில் உள்ள புலம்பெயர்ந்தோர் தடுப்புக் காவல் மையம், “மோசமானவர்களிலும் மோசமானவர்களை” வைத்திருக்க பயன்படுத்தப்படும் என நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உள்நாட்டுப் பாதுகாப்பு செயலர் கிறிஸ்டி நோயெம் மற்றும் ஹோமன் இருவருமே வெள்ளை மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசியபோது இதே சொற்றொடரைப் பயன்படுத்தினர்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள உயர் முக்கியத்துவம் வாய்ந்த குற்றங்களைச் செய்த அந்நியர்களை தடுப்புக் காவலில் வைக்க புதிய மையம் கூடுதல் இடவசதி அளிக்கும் எனவும் குடியேற்ற அமலாக்கத் தேவைகளை உறுதி செய்யும் எனவும் வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
டிரம்ப் திட்டத்திற்கு எதிர்வினை என்ன?
“நாங்கள் அவர்களை குவாண்டானமோவிற்கு அனுப்பப் போகிறோம்” என்று டிரம்ப் கடந்த புதன்கிழமை அன்று கூறினார்.
குவாண்டானமோவில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட புலம்பெயர்த்தோரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் டிரம்பின் திட்டம் “அச்சமூட்டுவதாக” சர்வதேச அகதிகள் உதவித் திட்டம் (IRAP) என்ற அமைப்பின் மூத்த மேற்பார்வை வழக்கறிஞர் தீபா அழகேசன், தெரிவித்தார்.
அந்தக் குடியேற்ற மையம் வெகு சிலரை மட்டுமே தங்க வைக்கப் பயன்படுத்தப்பட்டு வருவதாக அவர் நம்புகிறார். இந்த எண்ணிக்கை இரட்டை இலக்கத்தில் மட்டுமே இருக்கும் என ஏபி செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில் அவர் கணித்திருந்தார்.
அந்தத் தளத்தில் 9/11 சம்பவத்திற்குப் பிறகு, அந்த தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த பலருக்கும் சட்ட உதவி அளித்து வரும் நியூயார்க்கைச் சேர்ந்த ‘அரசமைப்பு உரிமைகளுக்கான மையம்’ எனப்படும் சட்ட ஆலோசனை அமைப்பின் செயல் இயக்குநர் வின்ஸ் வாரன், டிரம்பின் முடிவு ‘நம் எல்லோரையும் அச்சமடையச் செய்ய வேண்டும்” எனக் கூறினார்.
“சட்ட மற்றும் சமூகநல சேவை உதவிகள் எட்ட முடியாத தீவு சிறையில் அடைக்கத் தகுதியானவர்களாக குடியேறுபவர்களும், தஞ்சமடைபவர்களும் கருதப்படுகிறார்கள். அவர்களே அமெரிக்காவின் புதிய பயங்கரவாத அபாயமாக சித்தரிக்கப்படுகின்றனர் என்ற தெளிவான செய்தியை இந்த நடவடிக்கை அறிவிக்கிறது” என்று அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.
புலம்பெயர்வோரை கடலில் பிடித்தவுடன் அவர்களை அங்கு “மனிதாபிமானமற்ற” சூழ்நிலையில் ரகசியமாக அடைத்து வைத்திருப்பதாக, 2024இல் வெளியிட்ட அறிக்கையில், சர்வதேச அகதிகள் உதவித் திட்டம் அமைப்பு அரசின் மீது குற்றம் சாட்டியிருந்தது.
இந்த மையம் குறித்த ஆவணங்களைத் தரவேண்டும் என்று தகவல் அறியும் உரிமையின் கீழ், ‘அமெரிக்க உரிமையியல் சுதந்திரத்திற்கான சங்கம்’ என்ற அமைப்பு அண்மையில் கோரிக்கை விடுத்தது.
“அது தடுப்புக் காவல் மையம் அல்ல என்றும் அங்கிருபோர் யாரும் கைதிகள் அல்ல” என்றும் பைடன் நிர்வாகம் பதிலளித்தது. ஆனால் டிரம்ப் நிர்வாகமோ, புதிய விரிவாக்கம் தடுப்புக் காவல் மையமாகவே திட்டமிடப்படுவதாகக் கூறுகிறது.
எவ்வளவு செலவாகும்? எப்போது திறக்கப்படும்?
இந்தப் புதிய மையத்திற்கு எவ்வளவு செலவாகும், எப்போது இந்த மையம் கட்டி முடிக்கப்படும் என்பதில் தெளிவில்லை.
தற்போது இருக்கும் தடுப்புக் காவல் மையத்தை விரிவாக்க நிதியளிக்க வேண்டும் என்ற கோரிக்கை, குடியரசுக் கட்சியினர் உருவாக்கி வரும் செலவுப் பட்டியலில் சேர்க்கப்பட்டு, டிரம்ப் நிர்வாகத்தால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ளை மாளிகையில் இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, உள்நாட்டுப் பாதுகாப்புக்கான செயலர் கிறிஸ்டி நோயெம், “இதற்கான நிதி ஒதுக்கீடு இரண்டு வகைகளில் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அதாவது, இதற்கான பட்ஜெட் தொடர்பான சிறப்பு சட்டங்களை இயற்றுவது, அமெரிக்க நாடாளுமன்றத்தில் அரசுத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கும் செயல்முறை” ஆகியவற்றின் மூலம் பணம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று மட்டும் தெரிவித்தார்.
கியூபாவில் எதிர்வினை என்ன?
கியூபா அதிபர் மிகுவல் டியாஸ்-கனெல் இந்த அறிவிப்பு “மிருகத்தனமான செயல்” என்று கூறியுள்ளார்.
கடந்த 1898ஆம் ஆண்டு நடந்த ஸ்பேனிஷ்- அமெரிக்க யுத்தத்திற்குப் பிறகான காலகட்டத்தில் இருந்து நூற்றாண்டுக்கும் மேலாக குவாண்டானமோ விரிகுடாவை கியூபாவிடம் இருந்து அமெரிக்கா குத்தகைக்கு எடுத்துள்ளது.
அமெரிக்கா ஸ்பெயினை வீழ்த்திய பின்னர் கியூபாவிற்கு சுதந்திரம் கிடைத்தது. ஆனால் கியூபாவின் விவகாரங்களில் தலையிடும் உரிமை மற்றும் கடற்படை தளத்திற்கு நிலம் குத்தகைக்கு எடுக்கும் உரிமை உள்ளிட்ட அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு உட்பட்டே இந்தச் சுதந்திரம் கிடைத்தது.
குவாண்டானமோ விரிகுடா மீது அமெரிக்காவுக்கு கட்டுப்பாட்டை அளிக்கும் குத்தகையில் அமெரிக்காவும், கியூபாவும் 1903ஆம் ஆண்டு கையெழுத்திட்டன.
ஆண்டுக்கு 2000 அமெரிக்க டாலர்கள் தங்க நாணயங்களாக வழங்கபட வேண்டும் என்ற வாடகையின் அடிப்படையில் அமெரிக்காவுக்கு இந்தத் தளம் நிரந்தரமாக குத்தகைக்கு விடப்பட்டது. பின்னர் இந்தத் தொகை 4,085 டாலர்கள் என 1934ஆம் ஆண்டில் மாற்றப்பட்டது. ஆனால் இது பெரும்பாலும் ஓர் அடையாளத் தொகையாகவே இருந்தது.
கியூபா இந்தக் குத்தகையை எதிர்ப்பதுடன், அமெரிக்க செலுத்தும் சொற்ப தொகைகளை பொதுவாக நிராகரித்து வருகிறது.
இந்த முடிவு, “கொடூரமான செயல்” என கியூபாவின் அதிபர் மிகேல் டியாஸ்-கானெல் எக்ஸ் தளத்தில் விமர்சித்ததுடன், அந்தத் தளம், “சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட கியூபா பகுதியில்” அமைந்துள்ளதாகவும் விவரித்தார்.
“சித்திரவதைக் கூடங்கள் மற்றும் கால வரம்பற்ற தடுப்புக் காவல் மையங்கள் உள்ள குவாண்டானமோ கட ற்படைத் தளத்தின் வளாகத்தில் புலம்பெயர்வோரை சிறை வைக்கும் அமெரிக்காவின் முடிவு, மனிதத்தன்மை, சர்வதேச சட்டங்களை அவமதிக்கும் வகையில் உள்ளது,” கியூபா வெளியுறவு அமைச்சர் புரூனோ ரோட்ரிகஸ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.