திருப்பரங்குன்றம் விவகாரம்: அசாதாரண சூழல்... காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் வந்த மதுரை!
,
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்ஹா விவகாரத்தில் இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபடாமல் தடுக்க மதுரை மாநகர் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்ஹாவில் ஆடு, கோழி பலியிடும் விவகாரத்தில் இந்துத்துவ அமைப்புகள் இன்று (பிப்.4) போராட்டம் நடத்தவிருந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை மாவட்ட நிர்வாகம் நேற்று முதல் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை அடுத்து மதுரை மாவட்டம் முழுவதும் காவல்துறை தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட திருப்பரங்குன்றம் முருகன் கோயில் தமிழ் கடவுள் முருகனின் முதற்படை வீடாகும். திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள சிக்கந்தர் தர்ஹாவில் ஆடு, கோழி பலியிட காவல்துறை அண்மையில் தடை விதித்ததை அடுத்து, இஸ்லாமிய அமைப்புகள் அதற்கு எதிராக போராட்டம் நடத்தின. இதனையடுத்து இந்துத்துவ அமைப்புகள் ஜனவரி 4 ஆம் தேதி திருப்பரங்குன்றம் மலையை பாதுகாப்போம் என முழக்கமிட்டு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்தன.
வெறிச்சோடிக் காணப்படும் திருப்பரங்குன்றம் சாலை,
இந்த நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா வெளியிட்ட அறிவிப்பில், "பிப்ரவரி 4ஆம் தேதியன்று இந்து அமைப்பினர் மற்றும் அதன் ஆதரவு அமைப்பினர் திருப்பரங்குன்றம் கோயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், அதற்கு தென் மாவட்டங்களில் இருந்து பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் கலந்து கொள்ள உள்ளதால் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.
இதனிடையே இந்து மற்றும் இஸ்லாமிய அமைப்புக்களைச் சார்ந்தோர் திருப்பரங்குன்றம் மலை குறித்து தங்கள் கோரிக்கையை பல்வேறு கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். இதனால் இந்து மற்றும் இஸ்லாமிய அமைப்பினர் இடையே அசாதாரண சூழல் உருவாக வாய்ப்புள்ளது.
ஆகையால், மதுரை மாவட்டம் மற்றும் மாநகர் முழுவதும் வெளி நபர்கள் வராத வகையில் பிப்.3 காலை 6 மணி முதல் பிப்.4 இரவு 12 மணி வரை 2 நாட்கள் மட்டும் மதுரை மாநகர் மற்றும் மதுரை மாவட்டத்தில் பொது அமைதியை பாதுக்காக்கும் பொருட்டு, மனித வாழ்வு, பொது பாதுகாப்பு மற்றும் பொது அமைதியை கருத்தில் கொண்டும் போராட்டங்கள், கூட்டங்கள் மற்றும் தர்ணாக்கள் போன்றவற்றிற்கு (163 BNSS - 144 CrPC) 144 தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் முருகன் கோயில் நுழைவாயில்