பாகிஸ்தானுக்கு பயணத் தடை விதிக்க டிரம்ப் திட்டம்: அறிக்கை.
தலிபான் பயங்கரவாதி முகமது ஷரிபுல்லாவை கைது செய்வதில் இஸ்லாமாபாத்தின் ஒத்துழைப்பை டிரம்ப் பாராட்டினார்.
பாகிஸ்தான் நாட்டினர் அமெரிக்காவிற்குள் நுழைவதைத் தடுக்கக்கூடிய புதிய பயணத் தடையை டிரம்ப் நிர்வாகம் அறிவிக்க உள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் பாகிஸ்தானின் ஒத்துழைப்பை அவர் பாராட்டிய சில நாட்களிலேயே இந்த திடீர் முடிவு வந்துள்ளது. நாடுகளின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அபாயங்கள் குறித்த அரசாங்க மதிப்பாய்வின் அடிப்படையில், ஆப்கானிஸ்தானுடன் சேர்ந்து பாகிஸ்தானுக்கான பயணத் தடை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இது அடுத்த வாரம் விரைவில் நடைமுறைக்கு வரும் என்று செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் தவிர, பிற நாடுகளும் பயணத் தடை பட்டியலில் இருக்கலாம்.
காங்கிரஸ் உரையில் பாகிஸ்தானை பாராட்டிய டிரம்ப்.
செவ்வாயன்று காங்கிரசில் தனது முதல் உரையின்போது, 2021 ஆம் ஆண்டு காபூல் விமான நிலையத்தில் அமெரிக்க துருப்புக்கள் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா குற்றம் சாட்டிய தலிபான் பயங்கரவாதி முகமது ஷரிபுல்லாவை கைது செய்வதில் இஸ்லாமாபாத்தின் ஒத்துழைப்பை டிரம்ப் பாராட்டினார்.
"இந்த அரக்கனை கைது செய்ய உதவிய பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு நான் குறிப்பாக நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இது அந்த 13 குடும்பங்களுக்கும் மிகவும் முக்கியமான நாள், அவர்களில் பெரும்பாலோர் உண்மையில் எனக்கு நன்றாகத் தெரிந்தவர்கள், அவர்களின் குழந்தைகள் கொல்லப்பட்டனர். மேலும் ஆப்கானிஸ்தானில் அந்த துரதிர்ஷ்டவசமான நாளில் மோசமாக காயமடைந்த பலருக்கும் இது மிகவும் முக்கியமானது" என்று கூறினார்.
முந்தைய ஆட்சி காலத்திலும் சில நாடுகளுக்கு தடை விதித்தார் டிரம்ப்.
ஆப்கானிஸ்தானின் தாலிபான் ஆட்சியாளர்களுக்கு இஸ்லாமாபாத் ஆதரவளிப்பதாகக் கூறப்படுவது குறித்த கவலைகளால் அமெரிக்காவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்தன. இருப்பினும் பாகிஸ்தான் அத்தகைய ஆதரவை மறுக்கிறது. 2017 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற டிரம்ப், ஈரான், ஈராக், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா மற்றும் ஏமன் ஆகிய ஏழு முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளுக்கு பயணத் தடையை அறிவித்தார். பின்னர் அது ஜோ பைடனால் ரத்து செய்யப்பட்டது.