Breaking News
தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் கைது: தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம்!
,
ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 10 மீனவர்களை மீண்டும் இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரம் அடுத்துள்ள மண்டபம் கடல் பகுதியில் இருந்து நேற்று (பிப்.2) மீனவர்கள் சுமார் 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகளுடன் கடலுக்கு மீன் பிடி தொழிலுக்காக சென்றனர்.இவர்கள் மன்னார் எல்லைப் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி மண்டபத்தைச் சேர்ந்த ஒரு விசைப்படகு மற்றும் அதிலிருந்து பத்து மீனவர்களையும் சிறை பிடித்து விசாரணைக்காக மன்னார் துறைமுகப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அந்த வகையில் தங்கச்சிமடத்தை சேர்ந்த எபிரான், கட்ரு, டிரோன், பிரசாத், முனியசாமி, சிவா, அந்தோணி, ஃபயாஸ், சேசு மற்றும் மண்டபம் காந்திநகரைச் சேர்ந்த ரவி ஆகிய பத்து மீனவர்களை இலங்கை கடற்படை ஒரு விசைப்படகுடன் சிறைபிடித்துள்ளது.அண்மையில், புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் இருந்து 360 விசைப்படகுகளுடன் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இலங்கை நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ஒரு விசைப்படகையும், அதில் இருந்த 13 மீனவர்களையும் சிறை பிடித்தது. அப்போது மீனவர்கள் தப்பிச்செல்ல முயன்றதாக இரண்டு மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. புதுடெல்லியில் உள்ள இலங்கை தூதரை வரவழைத்து வெளியுறவுத் துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்திருந்தது. கடந்த ஆண்டு தமிழக மீனவர்கள் 554 பேர் மற்றும் 72 விசைப்படகுகள் இலங்கை கடப்படையால் சிறைபிடிக்கப்பட்டனர். பின்னர் படகுகள் அரசு உடைமையாக்கி மீனவர்களை இலங்கை அரசு விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.