கொழும்பை மையப்படுத்தி இடம்பெற்ற இறுதி தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள்: பெருந்திரளாக கலந்துகொண்ட மக்கள்
.
இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவுசெய்யும் தேர்தல் நாளைமறுதினம் சனிக்கிழமை நடைபெற உள்ளது.
தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகிவிட்டதாக கூறியுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு, அமைதிக்காலத்தில் உரிய விதிமுறைகளை பின்பற்றி தேர்தலில் வாக்களிக்குமாறும் கோரியுள்ளது.
இதேவேளை, நாடு முழுவதும் பொலிஸாரும், முப்படையினரும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். தேர்தல் கடமைகளுக்காக 63ஆயிரம் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இறுதி பிரச்சாரக் கூட்டம் நேற்று இரவு கொழும்பு கிராண்பாஸ் பகுதியில் இடம்பெற்றது.
இந்தக் கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு ரணில் விக்ரமசிங்கவுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் இறுதி பிரச்சாரக் கூட்டம் கொழும்பு மருதானை பகுதியில் இடம்பெற்றது.
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாக்கவின் இறுதி பிரச்சாரக் கூட்டம் நுகேகொடை பகுதியில் இடம்பெற்றதுடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் பிரச்சாரக் கூட்டம் கெஸ்பேவயில் இடம்பெற்றது.
இதேவேளை, ஏனைய சில ஜனாதிபதி வேட்பாளர்களும் தமது இறுதி பிரச்சாரக் கூட்டத்தை கொழும்பை மையப்படுத்தியே நடத்தியிருந்தனர்.
இன்று நண்பகல் முதல் மௌனக்காலமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், இக்காலப்பகுதியில் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.