ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி – சரியான ‘கை’ எது?
.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மூன்று குழுக்களாகப் பிரிந்துள்ளதால், ஜனாதிபதித் தேர்தலில் எந்தக் குழுவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு சட்டமா அதிபரிடம் எழுத்து மூலம் விளக்கம் கேட்டுள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களத்திடம் இருந்து அது தொடர்பில் தீர்மானம் ஒன்று கிடைக்கப்பெற்றவுடன், தேர்தல் ஆணைக்குழு முடிவெடுக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க ரத்நாயக்க தெரிவித்தார்.
எதிர்வரும் தேர்தலில் நடவடிக்கைகளில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியாக நோக்க வேண்டியது எந்தக் குழுவினரை என்ற ஒரு கேள்வி எழுந்தமையினால் சட்ட மா அதிபரின் பரிந்துரைகளை கேட்டறிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரபால சிறிசேன தலைமையிலான குழு, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான குழு மற்றும் அமைச்சர் தயாசிறி ஜயசேகர தலைமையிலான குழு என மூன்று குழுக்கள் உண்டு.
ஸ்ரீலங்கா சுதந்திர் கட்சியின் மைத்திரிபாலவின் குழு ஜனாதிபதி தேர்தலுக்கு வேறொரு வேட்பாளரை முன்னிலைப்படுத்தியுள்ள நிலையில், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் குழு தமது ஆதரவை ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்க தீர்மானித்துள்ளது.
அமைச்சர் தயாசிறி ஜயசேகர குழு எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளது.
இந்நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மைத்திரிபாலவின் குழு முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவையே ஜனாதிபதி வேட்பாளராக முன்வைத்துள்ளது.
கட்சி ஸ்தாபகரின் மகளான முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அமைதியாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.