கோல் அடித்த வேகத்தில் சுருண்டு விழுந்த எம்பாப்பே! பிரான்ஸ் அணிக்குப் பெரும் பின்னடைவா?
பிரான்ஸ் அணியின் முக்கிய முன்கள வீரர்களான உஸ்மான் டெம்பேலே, மார்கஸ் துராம் போன்றோர் ஏற்கனவே காயத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில், இப்போது எம்பாப்பேயின் காயமும் அணியை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது.
கால்பந்து மைதானம் என்பது ஆனந்தத்திற்கும், அதிர்ச்சிக்கும் பெயர் பெற்றது. நேற்று இரவு நடந்த ரியல் மாட்ரிட் அணிக்கான போட்டியில், சில நிமிடங்களுக்கு முன் கோல் அடித்து ரசிகர்களை ஆனந்தத்தில் ஆழ்த்திய எம்பாப்பே, அடுத்த சில நிமிடங்களில் மைதானத்தில் சுருண்டு விழுந்து ஒட்டுமொத்த கால்பந்து உலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். ஆம், பிரான்சின் செல்லப் பிள்ளை, "லெஸ் ப்ளூஸ்" அணியின் கப்டன் கிலியன் எம்பாப்பேவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
லா லிகா தொடரில் வில்லாரியல் அணிக்கு எதிரான போட்டியில் ரியல் மாட்ரிட் அணிக்காகக் களமிறங்கினார் எம்பாப்பே. போட்டியின் இறுதி கட்டத்தில், தன் அணிக்காக மூன்றாவது கோலை அடித்து வெற்றியை உறுதி செய்தார். அந்தக் கொண்டாட்ட ஈரம் காய்வதற்குள், போட்டியின் 80வது நிமிடத்தில், மைதானத்தின் மையப் பகுதிக்கு அருகே வலது கணுக்காலைப் பிடித்தபடி வலியால் துடித்துச் சுருண்டு விழுந்தார்.
உடனடியாக மருத்துவக் குழுவினர் மைதானத்திற்குள் விரைந்து வர, வலியால் நகர முடியாத எம்பாப்பே, சக வீரரின் உதவியுடன் மைதானத்தை விட்டு வெளியேறினார். அவருக்கு வலது கணுக்காலில் லேசான சுளுக்கு ஏற்பட்டிருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் காயம் ரியல் மாட்ரிட் அணியைவிட, பிரான்ஸ் தேசிய அணியைத்தான் நிலைகுலையச் செய்துள்ளது. காரணம், 2026 உலகக்கோப்பைக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகளில் அசர்பைஜான் மற்றும் ஐஸ்லாந்து அணிகளுக்கு எதிராகப் பிரான்ஸ் அடுத்தடுத்து மோதவுள்ளது.
பிரான்ஸ் அணியின் கப்டனான எம்பாப்பே, இந்தச் சீசனில் தனது விளையாட்டு வாழ்வின்உச்சகட்ட ஆட்டத்திறனுடன் இருக்கிறார். இதுவரை ஆடிய 12 போட்டிகளில் 16 கோல்களை அடித்து, எதிரணிகளைத் திணறடித்து வருகிறார்.
பிரான்ஸ் அணியின் முக்கிய முன்கள வீரர்களான உஸ்மான் டெம்பேலே, மார்கஸ் துராம் போன்றோர் ஏற்கனவே காயத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில், இப்போது எம்பாப்பேயின் காயமும் அணியை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது.
எம்பாப்பே நாளைப் பிரான்ஸ் தேசிய அணியின் பயிற்சி முகாமான கிளேர்ஃபோன்டெய்னில் இணைவார் என்றும், அங்கு அவருக்கு முழுமையான மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. அந்தப் பரிசோதனைகளின் முடிவைப் பொறுத்தே, அவர் வரவிருக்கும் போட்டிகளில் விளையாடுவாரா இல்லையா என்பது தெரியவரும்.
எம்பாப்பே என்ற ஒற்றை வீரரின் காயம், ஒட்டுமொத்த பிரான்ஸ் அணியின் உலகக்கோப்பை கனவையே கேள்விக்குறியாக்கியுள்ளது. அவரது மருத்துவப் பரிசோதனை முடிவுகளுக்காக ஒட்டுமொத்த பிரான்ஸ் மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்களும் பதட்டத்துடன் காத்திருக்கிறார்கள்.


