நெதன்யாகுவுடன் சந்திப்பு நடத்துவதற்கு ஜோர்டான் மன்னர் அப்துல்லா மறுப்பு!
சந்திப்பை நடத்துவதன் மூலம் இஸ்ரேலுடன் "வழக்கமான உறவு" நீடிப்பதாக உலகிற்கு காட்ட நெதன்யாகு முயற்சி!
நெதன்யாகுவுடன் சந்திப்பு நடத்துவதற்கு ஜோர்டான் மன்னர் அப்துல்லா மறுப்பு!
மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவுடன் சந்திப்பு ஒன்றை நடத்துவதற்கு ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய பொது ஒளிபரப்பு நிறுவனமான 'கான்' வெளியிட்டுள்ள தகவலின்படி, இரு தலைவர்களுக்கும் இடையே நேரடிச் சந்திப்பு அல்லது தொலைபேசி உரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்ய நெதன்யாகுவின் அலுவலகம் பலமுறை முயற்சித்துள்ளது.
இருப்பினும், ஜோர்டான் மன்னர் அந்த முயற்சிகள் அனைத்தையும் நிராகரித்துள்ளார். இஸ்ரேல் - ஈரான் போர் மற்றும் பாலஸ்தீன விவகாரத்தில் இஸ்ரேல் எடுத்து வரும் கடுமையான நிலைப்பாடுகள் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான இராசதந்திர உறவு தற்போது மிக மோசமான கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, இஸ்ரேல் வசம் உள்ள பாலஸ்தீனக் கைதிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தை இஸ்ரேல் நிறைவேற்றியுள்ளதும், காசா மற்றும் மேற்குக்கரையில் நிலவும் பதற்றமுமே இந்த நிராகரிப்புக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
ஒரு சந்திப்பை நடத்துவதன் மூலம் இஸ்ரேலுடன் "வழக்கமான உறவு" நீடிப்பதாக உலகிற்கு காட்ட நெதன்யாகு முயற்சிப்பதாகவும், அதற்கு இடமளிக்க ஜோர்டான் விரும்பவில்லை என்பதே அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாக அமைந்திருக்கிறது.


