அமைப்பின் வளர்ச்சிக்கு நிழல்கொடுத்த பாரிய ஆலமரம் சொர்ணம் அண்ணா.ஆளுமையின் அருகில் நின்ற போராளியின் நினைவலைகள்
பைப்பைவ் இந்த சங்கேத எண்ணெய்க் கேட்டு கலங்காத எதிரி இருந்திருக்க மாட்டான்.

அன்றொரு நாள் நுழைவாயில் காப்பரணில் கடமையில் நான் காலை 8மணி இருக்கும். ஒரு பஜீரோ வாகனம் என் கண் முன் வந்து நின்றது. ஒரு உயர்ந்த உருவம். பார்த்தாலே நடுங்கும் வாகனத்தை விட்டு இறங்க அதற்க்குள்ளாகவே நாலு மெய்க்காப்பாளர்கள் இறங்கி நிலை எடுத்து நிக்கிறார்கள்.
சாரதி வாகனத்தை பெரியமரம் ஒன்றின் கீழ் மறைவாக விடுகிறார்.(அப்போது இலங்கை வான்படை சர்வசாதாரணமாக பறந்து திரிந்தகாலம்)
எனது காவல் நிலை அருகே வந்த அந்த பெரிய உருவம் அண்ணை என்ன மூட்டில் நிக்கிறார் என்று கேட்டபடி உள்ளே நுழைய முற்படுகிறார்! நான் காப்பு நிலையில் இருந்து வெளியே வந்து அவரை தடுக்கிறேன் அவரும் அடுத்த காலடி எடுத்து வைக்கவில்லை அப்படியே நிக்கிறார்.
நிண்டவர் தம்பியா அண்ணைக்கு சொல்லு நான் பைவ் பைவ்( 55)வந்து இருக்கிறேன் என்று. நான் உடனடியாக தொலைத்தொடர்பு கருவியில் தொடர்பை ஏற்படுத்தி தொடர்பில் இருந்த சக போராளியிடம் சொன்னேன் பைவ்பைவ் வந்து இருக்கிறாராம் அண்ணையை சந்திக்க வேண்டுமாம் அனஸ் அண்ணையை வாசலுக்கு அனுப்ப முடியுமா?
தொடர்பை நிறுத்த அனஸ் அண்ணாவும் வாசலுக்கு வந்து சேர்ந்தார். வந்த அனஸ் அண்ணா சொர்ணம் அண்ணையிடம் அண்ணை அவன் ஒரு புதிய போராளி உங்களைத்தெரியவில்லை குறை நினைக்க வேண்டாம் வாங்கோ என்று உள்ளே கூட்டிக்கொண்டு போன அனஸ் அண்ணை அவரை உள்ளுக்கை விட்டு விட்டு திரும்பி வந்து எனக்கு சொன்னார் தம்பியா இவர்தான் சொர்ணம் அண்ணை உனக்கு தெரியாதோ என்று? இல்லை அண்ணா நான் கேள்வி பட்டு இருக்கிறன் இவர்தான் என்று நான் இதுவரை கண்டது இல்லை இப்படி ஒரு உருவம் தான் என்று நான் கற்பனை கூட பண்ணவில்லை என்று என்று மனதுக்குள் நினைக்க அனஸ் அண்ணா நீ புதிய போராளி இருந்தாலும் கடமையை சரியாக செய்துள்ளாய் என்று சொல்லிவிட்டு உள்ளுக்குள் போய்விட்டார்.
ஒரு இரண்டு மணி நேரம் கடந்து சொர்ணம் அண்ணை சந்திப்பு முடித்து வெளியே வரும் போது காப்பு நிலையில் இருந்த என்னை எட்டி தம்பியா வெளியே ஒருக்கால் வா என்றார்.
வெளியே வந்த நான் அவருக்கு உரிய இராணுவ மரியாதையோடு முகத்தை குனிந்து நின்றேன் முதுகில் ஒரு தட்டு என்னோடை வேலை செய்ய விருப்பமா என்று கேட்டார்? நான் எந்தப்பதிலும் சொல்லவில்லை காரணம் அமைப்பில் எந்த வேலையையும் செய்வோம் என்று தானே உறுதிமொழி எடுக்கிறோம்.
அத்தோடு அவர் சென்று விட்டார். அன்று இரவு நான் கடமை முடிந்து நூலகத்தில் புத்தகம் வாசித்து கொண்டு இருந்தேன் அந்த தங்ககத்தில்உள்ள நூலகத்தில் உள்ள பல நூற்றுக்கணக்கான புத்தகங்கள் ஆங்கில மொழி தமிழாக்கங்கள் உட்பட களத்தில் (ஆரம்பகால பத்திரிகை) விடு*தலைப்பு*லிகள்,சுதந்திரபறவைகள் மற்றும் போராளிகள் விடும் தவறை நகைச்சுவையாக குறிப்பிடும் மாதாந்த சஞ்சிகை, எரிமலை, ஒளிவீச்சு மின்னிதழ், என ஏராளமான பத்திரிகைகள் எனது கடமை தவிர்ந்த நேரங்களில் பொழுது போக்கு அம்சமாகும்.
அங்கு இருக்கும் போது வந்த நிசாம் அண்ணா தம்பி உன்னை அப்பர் ஒருக்கால் வரட்டாம் அப்பர் யார் மனதுக்குள் கேள்வியோடு பிரதான முகாமுக்குள் சென்ற நான் கீழே நின்று இருந்த இன்பம் மாஸ்ரரிடம் மாஸ்டர் நிசாம் அண்ணா அப்பர் கூப்பிட்டதாக சொன்னார் அது யார் என்று கேட்க இன்பம் மாஸ்டர் எந்த தயக்கமும் இன்றி வா என்று மேல்மாடிக்கு கூட்டிக்கொண்டு போனார் போய் அண்ணை நீங்கள் தேடின பொடியன் என்று சொல்லி விட்டுவிட்டு அவர் கீழே இறங்கி விட்டார்.
எனக்குள் ஒரு கலக்கம் சொர்ணம் அண்ணையை வாசலில் மறித்தது தப்போ ஏதாவது தண்டனை தரப்போகிறாரா என்று யோசித்து கொண்டு இருக்கும் போது அண்ணையின் உதவியாளர் மாணவன் என்ற போராளி கறுத்தகொழும்பான் மாம்பழமும் பப்பாசிப்பழமும் வெட்டிக்கொண்டு வந்து தட்டோடு வைத்தான்.
எடுத்து சாப்பிடடா என்ற தனக்கு உரிய பாணியில் சொன்னார். நான் தயங்கி தயங்கி எடுத்து சாப்பிட்டேன்.
டேய் உன்னை இவன் சொர்ணம் தனக்கு தரச்சொல்லி கேக்கிறான் போறியோ? நான் மௌனமாகவே இருக்க நாளைக்கு விடிய உன்ரை உடமைகளை எடுத்து கொண்டு வந்து கீழே நில் அவ்வளவு தான் நான் ஓம் என்று தலையாட்டினேன்.
காலையில் நாலு மணிக்கு எங்கள் அன்றாட காலைக்கடமை பயிற்சி கடமைகள் ஆரம்பமாகும் வழமை போலவே அவற்றை முடித்து விட்டு ஆறு மணிக்கே பிரதான தங்ககத்தில் வந்து நின்று விட்டேன்.
காலை எட்டு மணி இருக்கும் தனது ஜீப்பில் வந்து ஏறுமாறு சொன்னவர் என்னைக்கூட்டிக்கொண்டு நாவற்குழி வெளி தாண்டி சாவகச்சேரி பக்கம் சென்று இன்னொரு முகாம் வாசலை சென்றடைந்தார்.
தான் வருவதை முற்கூட்டியே தொடர்பாடல் கருவி மூலம் சொர்ணம் அண்ணையின் முகாமுக்கு தகவல் வழங்கி இருந்திருக்க வேண்டும்.
வாயில் காப்பை ஜீப் அடைய அந்த காப்பு நிலையில் இருந்த போராளி கதவை திறந்து ஜீப்பை உள்ளுக்கை விட்டார்.
ஜீப்பில் இருந்து இறங்க சொர்ணம் அண்ணா வந்து உள்ளுக்கை கூட்டிக்கொண்டு போனார்.
இந்தாடாப்பா நீ கேட்ட ஆள் இனி இவனை வளர்த்து எடுக்கிறது உன்ரை பொறுப்பு. சில நேரம் நான் உன்னை திருப்பி கேட்பேன் அவனை தா என்று. ???? இரண்டு பேரும் திமிர் பிடித்தவர்கள் என்று முக பாவனையும் புன் சிரிப்பும் சொல்லியது அத்தோடு அண்ணை என்னை ஒப்படைத்து விட்டு சென்று விட்டார்.
அன்றிலிருந்து சொர்ணம் அண்ணையுடன் எனது வி*டுதலைப்பயணம் ஆரம்பமாகியது. ஒரு ஐந்து நாள் ஓய்வு எடு தம்பி அதன் பிறகு உனக்கு நிறைய வேலை இருக்கு என்று சொல்லிவிட்டு சென்று விட்டார். அவரின் உருவத்தை பார்த்ததில் இருந்தே எனக்குள் ஏதோ ஒரு பதட்டம் அவரது பார்வை
அவரது நடை உடை அவரது முரால். நான் இங்கே ஏதாவது தவறு செய்தால் என்ன நடக்கும் என்ற ஒரு பயம்.
ஒரு கிழமை முடிய எனது பெயரை சொல்லி கூப்பிட்டார் சொர்ணம் அண்ணா டேய் நாளையிலை இருந்து நீ செற் படிக்கப்போறாய் இரண்டு வருடத்திற்கு நீ எங்கையும் அசைய ஏலாது!
அதைவிட துண்டு குடுக்க ஏலாது சொந்த பந்தங்களை வேளைக்கு சந்திக்க ஏலாது நான் உனக்கு எந்த நேரம் என்ன செய்ய வேணுமா எல்லாம் செய்வன் ரெடிதானே தலையை ஆம் என்று ஆட்டினேன்.
எனது படிப்பு தொடர்ந்தது முடியும் கட்டம் யாழ் மாவட்டத்தில் சந்திரிக்கா அம்மையார் மேற்கொண்ட முன்னேறி பாய்ச்சல் எமது நடவடிக்கை வேவு அணிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு இருந்தது.
செற் படித்த போராளிகள் கட்டளை மையத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவிருந்து உள்வாங்கப்பட்டு எதிரியின் தொலைத்தொடர்பை உள்வாங்கி அதில் இருந்து எந்த பகுதியால் பிரதான படை நடவடிக்கை ஆரம்பமாகும் என்ற துல்லிய தகவலை பெற்று கட்டளையகத்துக்கு வழங்கும் பெரும் பொறுப்பு அத்தோடு நடவடிக்கை ஆரம்பமாகியவுடன் எதிரியின் கட்டளைமையத்தில் இருந்து நகரும் படையினருக்கு கிடைக்கும் தகவல்களை உள்வாங்கி எங்கள் எறிகணைகள் செலுத்தி நிலைகளை ஒருங்கிணைத்து தகவல்கள் பரி மாறவேண்டும்.அது மட்டுமல்ல எதிரியின் கட்டளை தலைமையகத்துக்கும் நகரும் படையினருக்கும், விமானப்படையினருக்குமான தொடர்பாடலை இடைமறித்து குழப்பவேண்டும்.
அந்த நாளில் இருந்து சொர்ணம் அண்ணை என்னை செற் படிக்க வைத்த
பலன் அவருக்கு கிடைக்க தொடங்கியது. அதன் பிறகு சூரியக்கதிர், முல்லை முகாம் தகர்ப்பு, சத்ஜெய எதிர் நடவடிக்கை என தொடர்ந்த பணி அதன்பிறகு சொர்ணம் அண்ணையால் அதிகாரிகள் பயிற்சி கல்லூரிக்கு அனுப்பி இராணுவ விஞ்ஞானம், கண்ணிவெடி, வேவு கனரகஆயுதம் என அளவற்ற கற்கை.
சொல்லப்போனால் இந்த பெரிய உலகத்தின் ஒரு சிறு துகளை சொர்ணம் என்ற சிறந்த ஆசான் எனக்கும் என்னைப்போன்ற பல நூறு போராளிகளுக்கும் கற்ப்பித்தார், கண் முன்னே காட்டினார்.
கண்டிப்பு, தண்டனை, கட்டளை எல்லாம் நிறைந்த ஒரு குழந்தை என்றே அவரை சொல்ல வேண்டும். நான் எப்படி அவரை கண்டு பதட்டம் அடைவேனோ அது போலவே அவர் எங்கள் சூரியத் தேவனை கண்டு பயப்படுவார். அதை விட நான் இங்கே அண்ணை, அப்பர் என்று குறிப்பிட்டது வேறு யாரும் அல்ல எங்கள் நிதித்துறை பொறுப்பாளர் படைத்துறை செயலாளர் தமிழேந்தி அண்ணா /ரஞ்சித் அப்பா.எங்கள் ரஞ்சித் அப்பாவை கண்டால் கூட சொர்ணம் அண்ணா கதைக்க பயப்படுவார் அவர் மீது அவ்வளவு மரியாதை.
எனக்கு ஒரு உலகத்தை கற்று தந்து, அதிகாரியாக
செற் காறனாக, பல நிலைகளில் வைத்து அழகு பார்த்த எங்கள் சொர்ணம் அண்ணா 15/05 /2009 அன்று எமது உறுதியன் உறைவிடமாக கண்ணை மூடிக் கொண்டார். என்னை மட்டும் அல்ல என்னைப்போன்ற பல போராளிகளை இனம் கண்டு உள்வாங்கி அவர்களுக்கு தகுந்த பயிற்சி வழங்கி அமைப்பின் வளர்ச்சிக்கு நிழல்கொடுத்த பாரிய ஆலமரம் சொர்ணம் அண்ணா. பைப்பைவ் இந்த சங்கேத எண்ணெய்க் கேட்டு கலங்காத எதிரி இருந்திருக்க மாட்டான்.