செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து 240-வது எலும்புக்கூடு தோண்டி எடுக்கப்பட்டது!
நேற்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடு ஒரு பதின்ம வயதுடைய ஒருவருடையதாக இருக்கலாம் என சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வு ஆரம்பமாகி நான்கு நாட்களுக்குப் பின்னர், மேலும் ஒரு மனித எலும்புக்கூடு அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், புதைகுழியில் கண்டறியப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 241 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய தினம் (மே 01) மேதினம் மற்றும் முழு பூரணை தினம் என்பதால் அகழ்வுப் பணிகளை அரை நாள் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டு, பணிகள் இடம்பெறுகின்றன.
நேற்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடு ஒரு பதின்ம வயதுடைய ஒருவருடையதாக இருக்கலாம் என சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி. எஸ். நிரஞ்சன் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
"இன்று (நேற்று) ஒரு மனித எலும்புக்கூடு அகழ்ந்து எடுக்கப்பட்டது. இதற்கமைய 241 மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டு 240 அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அகழ்ந்து எடுக்கப்பட்ட 232ஆவது எலும்புக்கூட்டு பதின்ம வயதுடைய ஒருவருடையதாக இருக்கலாம் என சட்ட வைத்திய அதிகாரி குறிப்பிட்டுள்ளார். "
ஏழு மாதங்களுக்குப் பின்னர், 2026 ஏப்ரல் 27, அன்று, யாழ்ப்பாண நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகியது. அகழ்வாய்வின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் நாளான, 29 ஏப்ரல் அன்று, அகழ்வு தளத்தில் கறுப்பு நிற மண் துகள்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.
அகழ்ந்து எடுக்கப்பட்ட கறுப்பு நிற மண்ணை ஆராய்ந்தபோது அதில் ஒரு நாணயக்குற்றி கண்டெடுக்கப்பட்டதாகவும் சட்டத்தரணி வி. எஸ். நிரஞ்சன் தெரிவிக்கின்றார்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரது வழிநடத்தலில் யாழ்ப்பாணம், செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் முதன்முறையாக 2025 மே 15ஆம் திகதி ஆரம்பமாகின.
45 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் 2025 செப்டம்பர் 06ஆம் திகதி மதியம் நிறைவடைந்த போது, மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் உள்ளிட்ட 240 மனித எலும்புக்கூடுகளில் ஒன்றைத் தவிர அனைத்து எலும்புக்கூடுகளும் அகழ்ந்து எடுக்கப்பட்டிருந்தன.
அகழ்வாய்வுத் தளம் இரண்டில் மீட்கப்படாத மனித எலும்புக்கூடு அந்த இடத்திலேயே தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் சட்டத்தரணி நிரஞ்சன் மேலும் தெரிவிக்கின்றார்.
"மனிதப் புதைகுழி ஒன்று, மனிதப் புதைகுழி இரண்டு என அடையாளப்படுத்தப்பட்டே அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன. மனிதப் புதைகுழி இரண்டில் ஏற்கனவே ஒன்பது மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. மனிதப் புதைகுழி ஒன்றில் ஏற்கனவே 231 எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்ட நிலையில் ஒன்று அகழ்ந்து எடுக்கப்படவில்லை. 218 ஆவது மனித எலும்புக்கூடு இதுவரை அகழ்ந்து எடுக்கப்படவில்லை. அது பாதுகாக்கப்படுகிறது.
ஆகவே மேலதிகமாக இன்று (நேற்று) 232ஆவது எலும்புக்கூடு அகழ்ந்து எடுக்கப்பட்டது. செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனித புதைகுழியிலிருந்து மனித எலும்புகளுடன் இதுவரை அகழ்ந்து எடுக்கப்பட்ட ஏனைய பொருட்களுள் பால் போத்தல், பொம்மை உள்ளிட்ட விளையாட்டுப் பொருட்கள், சிறுவர் காலணிகள் மற்றும் பாடசாலைப் பைகளும் உள்ளடங்குகின்றன.


