"அதிமுக்கிய உடன்பாடு" அமெரிக்கா, ஈரான் இடையிலான நீண்டகால பதற்றத்திற்கு முற்றுப்புள்ளி! - டொனால்ட் டிரம்ப்
ஈரானுடனான இறுதி ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாகும் வரை அந்நாட்டின் துறைமுகங்கள் அமெரிக்க கடற்படையின் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டின் கீழ் தொடரும்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான நீண்டகால பதற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் "அதிமுக்கிய உடன்பாடு" எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதுதொடர்பான இறுதி ஒப்பந்தம் இந்த வார இறுதிக்குள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த தகவலை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் மற்றும் அமெரிக்க நலன்கள் தொடர்புடைய இலக்குகள் மீது ஈரான் பல்வேறு பதிலடி நடவடிக்கைகளை மேற்கொண்டதாக செய்திகள் வெளியாகின. இதன் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடுமையான பதற்றநிலை உருவாகியது.
இதற்கிடையில், அமெரிக்காவுடனான மோதலைத் தொடர்ந்து உலகின் முக்கிய கடல் வர்த்தகப் பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியதாக அறிவித்தது. இதனால் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் உயர்வடைந்தன.
பதற்றத்தை தணிக்கும் நோக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதி பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்தது. தற்காப்பு நடவடிக்கையாக ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு பதிலடியாக, அமெரிக்க இராணுவத் தளங்கள் அமைந்துள்ள சில அரபு நாடுகளை குறிவைத்து ஈரான் தாக்குதல்களை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும், ஹோர்முஸ் நீரிணை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க இராணுவ ஹெலிக்கொப்டர் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியாகின. இதற்கு பதிலடியாக ஈரானின் பந்தர் அப்பாஸ், சிரிக், மினாப், குவாசம் தீவு, கொர்ஜன் மற்றும் கார்க் தீவு உள்ளிட்ட பகுதிகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த தாக்குதல்களுக்கு பதிலடியாக குவைத், பஹ்ரைன் மற்றும் ஜோர்தானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் மேற்கொண்டதாகவும், ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடுவதாகவும் அறிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஈரான் மீது மேலும் கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்திருந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தற்போது அந்தத் தாக்குதலை இரத்து செய்வதாக அறிவித்துள்ளார். ஈரானுடன் முக்கியமான ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாகவும், அதனையடுத்து திட்டமிடப்பட்டிருந்த இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்கா, இஸ்ரேல், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், துருக்கி, பாகிஸ்தான், பஹ்ரைன், குவைத், ஜோர்தான் மற்றும் எகிப்து உள்ளிட்ட நாடுகளின் ஒருங்கிணைந்த முயற்சியால் இந்த ஒப்பந்தம் இறுதிவடிவம் பெற்றுள்ளதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஒப்பந்தம் கையெழுத்தாகும் திகதி தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், ஈரானுடனான இறுதி ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாகும் வரை அந்நாட்டின் துறைமுகங்கள் அமெரிக்க கடற்படையின் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டின் கீழ் தொடரும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மத்திய கிழக்கில் நீடித்து வந்த பதற்றத்தை குறைக்கும் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுவதுடன், சர்வதேச சமூகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


