Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

தேசியவாதக் கண் கொண்டு, 80 வருடங்களுக்கும் மேலாக இழைக்கப்பட்ட அரசியல் அநீதிகள்! இன்று பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்டு வரும் சிங்களச் சமூகம்!!

தமிழர் பகுதிகளில் விதைக்கப்பட்ட போதைப்பொருள். இன்று தென்னிலங்கையில்!

தமிழர்கள் மீது ஏறி மிதித்த பௌத்த பேரினவாதம்.. இன்று சிங்களவர்களின் வீட்டுக்குள்ளே!
•⁠  ⁠தமிழர்களின் அரசியல் நீதியை 'தேசிய பாதுகாப்பாக' சுருக்கியதன் வரலாற்று விபரீதம்
•⁠  ⁠சட்ட விலக்குரிமை! இலங்கை நீதித்துறை மீதான தார்மீகக் கேள்விகள்!

ஈழத்தமிழ் மக்களுக்கு எதிராக இராணுவத்திற்கும் பௌத்த மத குருமாருக்கும் வழங்கப்பட்ட கேள்வி கேட்கப்படாத சட்ட விலக்குரிமை, இன்று தென்னிலங்கை சிங்கள சமூகத்தைத் தாக்கும் ஒரு அபாயமாக மாறி வருகிறது. ஒரு சிறு அரசியல் தீர்வைக் கூட வழங்க விடாமல் கடந்த 80 வருடங்களாக தடுத்து வந்த பௌத்த குருமார், இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பின் படி, சட்டத்திற்கு கட்டுப்படுத்தப்பட முடியாதவர்களாகவே தொடர்ந்தும் கருதப்பட்டு வருகின்றனர். 

அந்த அதீத அதிகாரமே, இன்று பௌத்த சிறுவர் - சிறுமிகள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்களாகவும், ஊழல்களாகவும், பிணை மோசடிகளாகவும் சிங்களச் சமூகத்திற்குள்ளேயே வெடிக்க ஆரம்பித்துள்ளன. போதைப் பொருள் கடத்தல் - இறக்குமதியில் ஈடுபட்ட பிக்குகள் பலர் கைது செய்யப்பட்டும் வருகின்றனர். போர் இல்லாது ஒழிக்கப்பட்ட 2009 இற்குப் பின்னரும் கூட, தமிழ் சமூகத்தின் ஜனநாயக வழியிலான கூட்டு அரசியல் போராட்ட வடிவத்தையும், தார்மீக ஒழுக்கத்தையும் நசுக்குவதற்காக பயன்படுத்தப்பட்ட ஒரு நுட்பமான கலாச்சாரப் போர் (Cultural Warfare) தான், போதைப் பொருள் பழக்கத்தை விதைத்த உத்தி. 

ஆனால், இன்று அதே போதைப்பொருள் விநியோகக் கட்டமைப்பு மற்றும் இராணுவ நிழல் தென்னிலங்கை சிங்கள இளைஞர்களையும் சீரழித்து வருகிறது. தற்போது, தம் பிள்ளைகள் பாதிக்கப்படுவதால் தான் சிங்களச் சமூகம் விழிக்க ஆரம்பித்திருக்கிறது. ”ஈழத்தமிழர்கள் உட்பட மலையகத் தமிழர்கள், முஸ்லிம்கள் ஆகியோருக்கு, மறுக்கப்படும் அரசியல் நீதி, காலப்போக்கில், சிங்கள சமூகத்தை ஒடுக்கும் நச்சாக மாறும்" என்ற அரசறிவியல் விதியை இலங்கை வரலாறு 2026 ஆம் ஆண்டு தான் சிங்கள மக்களுக்கு நிரூபித்திருக்கிறது. 

80 வருடங்களுக்கும் மேலாக இழைக்கப்பட்ட அரசியல் அநீதிகளை தேசியவாதக் கண் கொண்டும், இலங்கையின் தேசிய பாதுகாப்புடனும் ஒப்பிட்டுப் பார்த்த சிங்களச் சமூகம், இன்று அதன் பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும், இலங்கையில் உண்மையான ஜனநாயகம் மலர வேண்டும் என்றால், தென்னிலங்கைச் சிங்களச் சமூகம் தன் சொந்தப் பாதிப்புகளுக்காக மாத்திரம் தற்காலிகமாக விழிப்படைவதைக் கடந்து, 1948 ஆம் ஆண்டு முதல் தமிழ் மக்களுக்குத் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வரும் வரலாற்று ரீதியான அரசியல் நீதியை ஆழமாகப் புரிந்து கொண்டு களமிறங்குவது இன்றியமையாததாகும்.

ஏனெனில், சமகாலத்தில் பௌத்த மதக் குருமார்களின் தார்மீக வீழ்ச்சி குறித்தும், இராணுவக் கட்டமைப்பின் அதிகார வரம்புமீறல்கள் குறித்தும் தென்னிலங்கைச் சமூகம் கடுமையான கோபத்தைக் கொண்டுள்ளது. ஆனாலம், தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்டு வரும் நீண்டகால 'அரசியல் அநீதியை' ஒரு நியாயமான, தீர்க்கப்பட வேண்டிய கோரிக்கையாக ஏற்றுக்கொள்வதற்கான முதிர்ச்சியை அது இன்னும் பெறவில்லை. 

பேரினவாதச் சிந்தனைக்குட்பட்ட சிங்களச் சமூகம் அந்த மனப்பக்குவத்தை முழுமையாக அடையவில்லை என்றே இன்று துணிந்து சொல்ல முடிகிறது.
குறிப்பாக, 2022 ஆம் ஆண்டு தென்னிலங்கையில் வெடித்த 'அரகலய' எனப்படும் மக்கள் எழுச்சிப் போராட்டம், ஆட்சியாளர்களின் ஊழல் மற்றும் பொருளாதாரத் தவறுகளுக்கு எதிராகச் சிங்கள மக்களை ஒன்று திரட்டியதே தவிர, மாறாக அந்தப் போராட்டக் களத்தில் கூட தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை, இராணுவ மயமாக்கல் நீக்கம் குறித்த நியாயங்கள் எதுவும் முதன்மைப் படுத்தப்படவில்லை.

2009 ஆம் ஆண்டு போர் இல்லாதொழிக்கப்பட்ட பின்னரான சூழலிலும், வடக்கு-கிழக்கு பகுதிகளில் சிவில் நிர்வாகக் கட்டமைப்பிலும், மக்களின் அன்றாட ஜனநாயகச் செயற்பாடுகளிலும் இராணுவத் தலையீடு நேரடியாகவும் மறைமுகமாகவும் தடையின்றித் தொடர்கிறது. 'தொல்பொருள் பாதுகாப்பு' என்ற போர்வையில் முன்னெடுக்கப்படும் நில அபகரிப்புகள், தமிழ் மக்களின் பூர்வீக வாழ்வாதார வெளிகளை திட்டமிட்டுச் சுருக்குகின்றன.

இவற்றுக்கு இணையாக முன்னெடுக்கப்படும் 'பௌத்தமயமாக்கல்' உத்தியானது, தமிழ்-முஸ்லிம் மக்களின் பாரம்பரிய நிலப்பரப்புகளில், தொல்பொருள் திணைக்களம் மற்றும் இராணுவம் - பொலிஸ் கூட்டு அனுசரணையோடு பௌத்த விகாரைகளையும் மதச் சின்னங்களையும் பலவந்தமாக நிறுவுகிறது.  இது, தமிழ் மக்களின் வரலாற்றுத் தாயகக் கோட்பாட்டை (Traditional Homeland) சிதைப்பதற்கும், அப்பகுதிகளின் புவியியல் யதார்த்தத்தை மாற்றுவதற்கும் பேரினவாத அரசால் திட்டமிட்டு அரங்கேற்றப்படும் ஒரு 'மக்கள்தொகை பொறியியல்' உத்தியாகும்.

திட்டமிடப்பட்ட இனப் பரம்பல் மாற்றங்கள், அரச வன்முறைகளுக்கு எதிராக தமிழ் மக்கள் சர்வதேச அரங்குகளில் எழுப்பும் நேர்மையான குரல் ஆகியவற்றை, தென்னிலங்கைச் சமூகமும் அதன் பிரதான ஊடகக் கட்டமைப்புகளும் தொடர்ச்சியாக புறக்கணித்தே (Systematic Denial) வருகின்றன. ஐ நா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்படும் தீர்மானங்களை, தமிழ் மக்களின் அரசியல் நீதிக்கான நியாயங்களாகப் பார்க்காமல், 'இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கும் எதிரான சர்வதேச சதி' என்றே சிங்கள அரசியல் தலைமைகளும் ஊடகங்களும் இன்றுவரை ஒற்றைப் பரிமாணமாக சித்தரித்து வருகின்றன. 

தமிழ் சமூகம் பல தசாப்தங்களாக எதிர்கொண்டு வரும் இந்தக் கட்டமைக்கப்பட்ட வன்முறைகளை அன்று கண்டுகொள்ளாமல் புறக்கணித்த தென்னிலங்கைச் சமூகம், இன்று அதே போன்ற கட்டமைப்புச் சீரழிவுகளைத் தன் சொந்தச் சமூகத்திற்குள் எதிர்கொள்ளும் போது மாத்திரம் வருந்துவது வரலாற்று ரீதியான ஒரு பெரும் முரண்பாடாகும். இந்த வரலாற்று முரண்பாட்டையும், ஒட்டுமொத்த அரச இயந்திரத்தின் சீரழிவையும் தென்னிலங்கை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டிய தார்மீகப் பொறுப்பு, மரபுவழி சிங்கள ஊடகங்களுக்கு (Mainstream Sinhala Media) உண்டு. 

எனினும், இந்த ஊடகங்கள் சுயவிமர்சனம் செய்து கொள்வதற்கு பதிலாக, பேரினவாதக் கோட்பாட்டின் காவலர்களாகவே இன்றும் இயங்குகின்றன. பௌத்த மத தலைவர்கள் பாலியல் குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்படும்போதும், 'போர்க்கால தேசிய வீரர்கள்' எனப் போற்றப்பட்ட அரசியல்வாதிகள் ஊழல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகங்களில் சிக்கும்போதும், சிங்கள ஊடகங்கள் அவர்களைப் பாதுகாப்பதிலேயே கண்ணும் கருத்துமாக உள்ளன. 

சட்டத்தின் பிடியில் இருந்தும், பொதுமக்களின் கடுமையான விமர்சனங்களில் இருந்தும் இக் குற்றவாளிகளைத் தப்பவைப்பதற்கான 'மறைப்பு உத்திகளையே' சிங்கள பிரதான ஊடகங்கள் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றன. இதன் மூலம், அநீதிக்கு எதிரான விழிப்புணர்வை விட, குற்றவாளிகளைப் பாதுகாக்கும் பேரினவாத தேசப்பற்று மாத்திரமே தங்களுக்கு முதன்மையானது என்பதை இந்த ஊடகக் கலாச்சாரம் மீண்டும் நிரூபித்துள்ளது. 

அனுராதபுரம் அட்டமஸ்தானத்தின் தலைமைத் தேரரான பல்லேகம ஹேமரத்ன போன்ற உயர் நிலை பௌத்த குருமார், சிறுவர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளில் கைதாகி, அரசியல் செல்வாக்கின் மூலம் மிக எளிதாக பிணையில் விடுவிக்கப்படும் சமகாலப் போக்குகள், இலங்கையின் நீதித்துறையின் மீதான தார்மீகக் கேள்விகளை எழுப்பியுள்ளன. இவற்றுடன், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புடைய இருபதுக்கும் மேற்பட்ட பௌத்த துறவிகள் மீதான விசாரணைகள் எவ்வித வெளிப்படைத் தன்மையுமின்றி மூடி மறைக்கப்படும் பின்னணி பற்றிய கேள்விகளும் உண்டு. 

ஆகவே, 'ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து இறுதியில் மனிதனைக் கடித்த கதையாக', கடந்த எண்பது வருடங்களாகத் தமிழ் மக்களின் நியாயமான உரிமைகள் மீது ஏறி மிதித்து, பேரினவாதத்தால் வளர்த்தெடுக்கப்பட்ட இந்த வரம்பற்ற அதிகாரச் சீரழிவு, இன்று சிங்களச் சமூகத்தின் 'வீட்டுக்குள்ளேயே' வந்து பேராபத்தாக உருவெடுத்து நிற்கிறது.  ஈழத்தமிழரை ஒடுக்கப் பயன்படுத்தப்பட்ட அதே அடக்குமுறை - சட்ட விலக்குரிமைப் பண்பாடு, இன்று சிங்களச் சமூகத்தின் எதிர்காலத்தையே சிதைத்துக் கொண்டிருக்கிறது. 

இந்தக் கசப்பான உண்மையை சாதாரண சிங்கள மக்களை விட, பிரதான சிங்கள அரசியல் கட்சிகளும், மரபுவழி சிங்கள ஊடகங்களும் முதலில் சுய விமர்சனத்துடன் உணர்ந்து கொள்ள வேண்டும். அந்த ஆழமான புரிதலின் மூலமே, இலங்கையில் அனைத்து இனங்களுக்குமான உண்மையான ஜனநாயகத்தையும் அரசியல் நீதியையும் நிலைநாட்ட முடியும்.

- அ.நிக்ஸன்