”உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டுக்கே நன்றி”... கன்னட மொழி விவகாரத்தில் கமல்ஹாசன் உருக்கம்!
கன்னட மொழி விவகாரத்தில் ஆதரவளித்த தமிழ்நாட்டு மக்களுக்கு கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்றான ’நாயகன்’ திரைப்படத்தைக் கொடுத்த மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணி தற்போது ‘தக் லைஃப்’ திரைப்படத்தில் இணைந்துள்ளது. வருகிற ஜுன் 5ஆம் தேதி ’தக் லைஃப்’ திரைப்படம் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
கிட்டத்தட்ட 38 ஆண்டுகள் கழித்து இந்த கூட்டணி இணைந்துள்ளதால் ரசிகர்களிடையே இத்திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது. அது மட்டுமல்லாமல் கமல்ஹாசனுடன் முதன்முறையாக சிலம்பரசனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற ‘தக் லைஃப்’ இசை வெளியிட்டு விழாவில் 'தமிழிலிருந்து பிறந்தது தான் கன்னட மொழி’ என கமல்ஹாசன் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கர்நாடகாவில் ’தக் லைஃப்’ திரைப்படத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதனால் ’தக் லைஃப்’ திரைப்படம் கர்நாடகாவில் திட்டமிட்டப்படி வெளியாகத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று (ஜூன் 4) நடிகர்கள் கமலஹாசன், சிம்பு, அசோக் செல்வன், நாசர் உள்ளிட்ட ’தக் லைஃப்’ படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். இந்நிகழ்வில் பேசிய கமல்ஹாசன், ”எங்களது தக் லைஃப் பயணத்தில் ஆரம்பம் முதல் தாங்கி பிடித்து இங்கு கொண்டு வந்து நிறுத்தியது வரை ஊடகங்களின் பங்கு முக்கியமானது.
இந்தப் படத்தில் பணிப்புரிந்தவர்கள் எல்லோரும் ஏற்கனவே நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டு வந்தவர்கள்தான். தொழில்நுட்ப கலைஞர்கள் முதல் நடிகர்கள் வரை. எங்களது வேலையைப் பற்றி நாங்கள் சொல்வதை விட நீங்கள் பாருங்கள். தமிழ் சினிமாவை புரட்டிபோட வேண்டும் என்பது தான் ஆசை. அதனை செய்ய முயற்சி செய்துகொண்டே இருக்கிறோம். தூக்க முடியாது. கொஞ்சமாக அதை நகர்த்தலாம்.
அதுவும் நாங்கள் விரும்பு திசை நோக்கி என்பதற்கு காரணம் எங்களுக்கு கிடைத்த படை. படை வீரர்கள் நிறைந்த படை இது. நிஜமாகவே வெளிநாட்டில் இருந்து வந்து பணிபுரிந்த கலைஞர்கள். இங்கிருந்தபடி வெளிநாட்டினர் பாராட்டக்கூடிய கலைஞர்கள் என பலரும் என்பது தான். நான் பார்த்த அந்த இளைஞர் மணிரத்னம் தற்போது சினிமா ஞானியாக மாறி உள்ளார்.
அவருடன் பணியாற்றுவது குதூகலமாக இருந்தது. சிறந்த கலைஞர்கள் இந்த படத்தில் பணியாற்றி இருக்கிறார்கள். படத்தின் வியாபரம் வெற்றி பெற வேண்டும். அதேநேரம் சினிமாவும் வெற்றி பெற வேண்டும். அற்புதமான சூழலில் படத்தை எடுத்துள்ளோம்.
எனக்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டுக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது உயிரே உறவே தமிழே என்று சொன்னதற்கான அர்த்தத்தையும் முழுமையாக உணர்கிறேன்” என்றார்.மேலும் பத்திரிகையாளர்களின் கேள்வி பதில் இல்லை என கூறிய கமல்ஹாசன், “பேச வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது. அது 'தக் லைஃப்' பற்றியது அல்ல. அதனைப் பிறகு பேசுவோம். தமிழனாக அதற்கான நேரத்தை ஒதுக்கி தருவது என்னுடைய கடமை” என்று பேசினார்.
முன்னதாக நிகழ்வில் பேசிய நடிகர் அசோக் செல்வன், ”என்னுடைய கனவு நிறைவேறியது மகிழ்ச்சியாக இருக்கிறது. பல ஆளுமைகளுடன் ஒரே படத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. இந்த படம் மூலம் நான் நிறைய கற்றுக்கொண்டேன்” என்றார்.நடிகர் சிம்பு பேசுகையில், “நாளை படம் வெளியாக உள்ளது. நம்பிக்கையுடன் இருக்கிறோம். அனைவரும் முழு உழைப்பை போட்டிருக்கிறோம். கமல்ஹாசன் சிறப்பாக நடித்துள்ளார்” என கூறினார்.
மணிரத்னம் இயக்கியுள்ள ’தக் லைஃப்’ படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெட்சுமி, அசோக் செல்வன், அபிராமி, வடிவுக்கரசி, அலி ஃபைசல், சானியா மல்ஹோத்ரா எனப் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் மணிரத்னம் ஆகிய மூவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.