தைவானை சுற்றி வளைக்கும் சீனா? உற்று கவனிக்கும் அமெரிக்கா.. திடீர் பதற்றம்! என்னதான் நடக்கிறது! Read more at: https://tamil.oneindia.com/news/international/china-surrounds-taiwan-with-military-drills-sparking-tensions-692169.html
தைவானை தனது நாட்டின் ஒரு பகுதி என வலியுறுத்தும் சீனா!

தைவானை அச்சுறுத்தும் வகையில் சீனா ராணுவம் இன்று அந்த குட்டி தீவைச் சுற்றிப் பாதுகாப்பு பயிற்சிகளை மேற்கொள்ளத் தனது ராணுவம், கடற்படை, விமானப் படையை அனுப்பியுள்ளது. தைவான் இதுவரை சுயாட்சி கொண்ட பகுதியாக இருக்கும் நிலையில், அதை தன்னுடன் இணைத்து கொள்ளும் முயற்சியின் ஒரு பகுதியாகவே சீனா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
சீனாவுக்கு அருகே அமைந்துள்ள குட்டி தீவு தைவான். என்ன தான் தைவானை தன்னை தானே சுதந்திரமான நாடு என அறிவித்துக் கொண்டாலும் கூட உலகின் பல நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் அதைச் சுதந்திர நாடாக ஏற்கவில்லை. அதேநேரம் தைவான் சுயாட்சி கொண்ட பகுதியாகவே இயங்கி வருகிறது.
சீனா- தைவான்
இருப்பினும், தைவானை தனது நாட்டின் ஒரு பகுதி என வலியுறுத்தும் சீனா, அதை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரத் தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே தைவானைச் சுற்றிப் போர் விமானங்கள் மற்றும் கடற்படை கப்பல்களை நிறுத்துவதைச் சீனா தொடர்ச்சியாகச் செய்து வருகிறது. இந்த விவகாரத்தில் சீனாவுக்கும் தைவானுக்கும் இடையே பல காலமாகவே மோதல் இருந்து வருகிறது. இந்தச் சூழலில் தான் தைவானைச் சுற்றிப் பாதுகாப்பு பயிற்சிகளை மேற்கொள்ளச் சீனா தனது ராணுவம், கடற்படை, விமானப் படையை அனுப்பியுள்ளது. இது தைவானில் உள்ள பிரிவினைவாதிகளுக்கு விடுக்கப்படும் கடுமையான எச்சரிக்கை என்று சீன ராணுவம் தெரிவித்துள்ளது.
சீனா சொல்வது என்ன
இது தொடர்பாக சீன ராணுவத்தின் கிழக்கு கட்டளை செய்தித் தொடர்பாளர் மூத்த கர்னல் ஷி யி கூறுகையில், "கடல் வான் போர் தயார்நிலை, விரிவான மேன்மை, கூட்டு நடவடிக்கை, கடல் மற்றும் தரை இலக்குகள் மீதான தாக்குதல் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தும் வகையில் இந்த போர்ப் பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.சீனாவின் ஆயுதப் படைகள் தைவான் தீவைப் பல திசைகளிலிருந்து நெருங்கி வருகின்றன. சீனாவின் இறையாண்மை மற்றும் தேசிய ஒற்றுமையைப் பாதுகாக்க இது ஒரு சட்டப்பூர்வமான மற்றும் அவசியமான நடவடிக்கை" என்று தெரிவித்தார்.
தைவான் எதிர்ப்பு
சீனாவின் இதுபோன்ற நடவடிக்கைகள் சமீப காலமாக அதிகரித்துள்ள நிலையில், இதைத் தைவான் கடுமையாக எதிர்த்து வருகிறது. குறிப்பாகச் சீனாவை வெளிநாட்டு எதிரி என குறிப்பிடும் தைவான் அதிபர் லாய் சிங்-டே, சீன உளவுப்படை மற்றும் ஊடுருவலை எதிர்த்துப் போராடத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக உறுதியளித்தார். ஆனால், சீனா அதையெல்லாம் பற்றிக் கவலைப்படாமல் தைவானைச் சுற்றி வருகிறது. தைவான் ஜலசந்தியில் நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் சீன ராணுவத்தின் கிழக்கு கட்டளை சர்வதேச ஊடகத்திடம் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளது. தைவானைச் சுற்றியுள்ள பகுதிகளில் கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தைவான் பிரிவினைவாதிகளுக்கு இது ஒரு வார்னிங் என்றும் கூறியுள்ளனர்.
பதற்றம்
கடந்த பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு தைவானை சுற்றி சீனா நடத்தும் மிகப் பெரிய ராணுவ நடவடிக்கை இதுவாகும். தைவானின் தெற்கிலிருந்து சுமார் 40 கடல் மைல்கள் தொலைவில் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களுடன் சீனா போர்ப் பயிற்சியை நடத்துகிறது. தைவான் ராணுவம் இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தனது சொந்த ராணுவத்தைக் களமிறக்கியுள்ளது.
அமெரிக்கா
இதனால் அந்த பிராந்தியத்தில் திடீரென பதற்றம் அதிகரித்துள்ளது. தைவானைப் பொறுத்தவரை அமெரிக்கா தான் மிகப் பெரிய ஆதரவாளராக இருந்து வருகிறது. தைவானுக்கு ஆயுதங்களை வழங்க வேண்டியது அமெரிக்காவின் சட்டப்பூர்வ கடமையாக இருக்கிறது. அதேநேரம் சீனத் தாக்குதலில் இருந்து பாதுகாக்க அமெரிக்கா அதன் ராணுவத்தை நிலைநிறுத்துமா என்பது இப்போது வரையிலும் பெரிய கேள்வியாகவே இருக்கிறது.