ஷேக் ஹசீனாவுக்காக உருவாகும் புதிய கட்சி? பின்னணியில் இந்தியா? வங்கதேசத்தில் வரும் கதறல் சத்தம்
இந்தியாவின் சதியாக உள்ள அவாமி லீக் கட்சியின் மறு வடிவமைப்பை வீழ்த்தலாம்.

வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவுக்கு ஆதரவாக அவாமி லீக் கட்சியை புதுப்பித்து புதிய பெயரில் கட்சி ஒன்று உருவாக்கப்பட உள்ளது. இதற்கான பிளானை இந்தியா போட்டுள்ளது என்று வங்கதேசத்தில் கதற தொடங்கி உள்ளது. இந்த கதறலின் பின்னணியில் உள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:
வங்கதேசத்தில் வெடித்த போராட்டத்தால் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்திய நாட்டில் தஞ்சமடைந்தார். வங்கதேசத்தில் இடைக்கால அரசு செயல்பட்டு வருகிறது. அதன் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் உள்ளார். இவருக்கு கீழ் 16 பேர் ஆலோசகர்களாக உள்ளனர்.
இதில் மாணவர்களின் போராட்டத்தை ஒருங்கிணைப்பு செய்த 2 மாணவர் அமைப்பை சேர்ந்தவர்களும் அடங்குவர். அதில் ஒருவர் நஹித் இஸ்லாம், இன்னொருவர் ஆசிப் மஹ்மூத். இவர்கள் 2 பேரும் ஆலோசகர்களாக செயல்பட்டு வந்தனர். இதில் நஹித் இஸ்லாம் தகவல் ஒலிபரப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையின் ஆலோசகராக இருந்தார்.
சமீபத்தில் நஹித் இஸ்லாம் தனது ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு அவர் புதிய கட்சியை தொடங்கினார். அந்த கட்சியின் பெயர் என்சிபி என்று அழைக்கப்படுகிறது. அதாவது National Citizen Party. தமிழில் கூற வேண்டும் என்றால் தேசிய மக்கள் கட்சி என்று சொல்லலாம். மாணவர்கள் போராட்டத்தை ஒருங்கிணைத்த நஹித் இஸ்லாம், மாணவர்களின் ஓட்டுகளை பெற்று அரசியலில் ஜொலிக்கும் திட்டத்துடன் கட்சியை தொடங்கி உள்ளார்.
இந்நிலையில் தான் தேசிய மக்கள் கட்சியின் தலைமை அமைப்பாளராக (தெற்கு) ஹஸ்னத் அப்துல்லா என்பவர் செயல்பட்டு வருகிறார். இவர் தான் தற்போது கதற தொடங்கி உள்ளார். அதாவது ஷேக் ஹசீனாவுக்காக வங்கதேசத்தில் புதிய கட்சியை தொடங்குகிறது. இது அவாமி லீக் கட்சியை போல் செயல்பட உள்ளது என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது பேஸ்புக் சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது:
‛‛வங்கதேசத்தில் புதிதாக கட்சி தொடங்கப்பட உள்ளது. இது அவாமி லீக் கட்சியின் (ஷேக் ஹசீனா கட்சி பெயர்) மறுவடிவமாக இருக்கும். அவாமி லீக் கட்சியை சேர்ந்த சபீர் உசைன் சவுத்ரி, ஷிரின் ஷர்மின் சவத்ரி மற்றும் பஸில் நூர் தாபோஸ் ஆகியோர் இந்த கட்சியை வழிநடத்துவார்கள். இதில் இந்தியாவின் சதி உள்ளது'' என்று கூறியுள்ளார்.
இப்போது இப்படி கூறியுள்ள ஹஸ்னத் அப்துல்லா ஏற்கனவே இதுபற்றி பேசியிருந்தார். கடந்த 11ம் தேதி டாக்கா கண்டோன்மென்ட்டில் அவர் பேசும்போதும், ‛‛கடந்த ஜூலையில் உங்களின் பலமான மூமெண்ட் வலு சேர்த்தது. இப்போது மீண்டும் எங்களுடன் நிற்கிறீர்கள்.
தெருக்களில் எங்களுடன் சேர்ந்து நிற்கும்போது மீண்டும் இந்தியாவின் சதியாக உள்ள அவாமி லீக் கட்சியின் மறு வடிவமைப்பை வீழ்த்தலாம்'' என்று கூறியுள்ளார். இதன்மூலம் இந்தியா சப்போர்ட்டில் ஷேக் ஹசீனாவுக்காக புதிய கட்சி அங்கு தொடங்க உள்ளதாக நம்நாட்டுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர்கள் அலற தொடங்கி உள்ளனர். ஆனால் இதுபற்றி தற்போது வரை நம் நாடு எந்த கருத்தையும் கூறவில்லை.