இளம் இசையமைப்பாளருடன் இணையும் சிம்பு.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
ணையத்தில் ட்ரெண்டிங் இசையமைப்பாளராக வலம் வரும் சாய் அபயங்கர், நடிகர் சிம்புவின் 49வது படத்திற்கு இசையமைக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிலம்பரசன் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ’பத்து தல’. கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்திற்கு பின் இரண்டு ஆண்டுகளுக்கு எந்தவித படமும் சிலம்பரசன் நடிப்பில் வெளியாகவில்லை. தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து ’தக் லைஃப்’ திரைப்படத்தில் நடித்துள்ளார் சிலம்பரசன்.
வருகின்ற ஜுன் 5ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக நடிக்கும் படத்தின் அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் அவரது பிறந்த நாளன்று வெளியானது. 'பார்க்கிங்' படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இந்த படத்தை இயக்குகிறார்.
STR 49 என தற்காலிகமாக அழைப்பட்டு வரும் இப்டத்தைப் பற்றி வேறு எந்த தகவலும் வராத நிலையில் அந்த படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் சிம்பு. ’கட்சி சேர’, ’ஆசை கூட’, ’சித்திரி புத்திரி’ ஆகிய சுயாதீன பாடல்களால் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற சாய் அபயங்கர் தான் STR 49 படத்தின் இசையமைப்பாளர் என சிம்பு தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும் அந்த பதிவில், “இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்த புதிய அத்தியாயத்தை இசை மற்றும் புத்துணர்ச்சியுடன் தொடங்குகிறேன். STR 49 படத்திற்கு சாய் அப்யங்கரை வரவேற்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த சாய் அபயங்கர், “திரையில் பார்ந்து வந்த சிம்புவிற்கு தற்போது இசையமைக்க உள்ளேன். வாழ்க்கை இன்று முழுமையடையந்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
சாய் அபயங்கர் ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் தயாரிப்பாளராக அறிமுகமாகும் ராகவா லாரன்ஸின்’பென்ஸ்’, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ’சூர்யா 45’, பிரதீப் ரங்கநாதன் படம் ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். தற்போது நான்காவதாக STR 49 படமும் பட்டியலில் இணைந்துள்ளது.
இவை மட்டுமல்லாமல் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட அட்லீ - அல்லு அர்ஜுன் இணையும் படத்திற்கும் இவர் தான் இசையமைப்பாளர் என தகவல் வெளிவந்துள்ளது. ஒரு படம் கூட வெளியாகாத நிலையில் தொடர்ந்து நான்கு பெரிய பட்ஜெட் படங்களுக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார் சாய் அபயங்கர். திரைத்துறையே இதனை ஆச்சரியமாக பார்த்து வருகிறது.
கடந்த இரண்டு வருடங்களாக சிம்புவின் எந்த படத்தைப் பற்றியும் செய்தி வெளியாகத நிலையில் இந்த ஆண்டு தொடர்ந்து மூன்று படங்களைப் பற்றிய அறிவிப்பை அவர் கொடுத்தார். அவற்றில் உடனடியாக உருவாகி வரும் இந்த ’சிம்பு 49’ படத்தில் அவர் இன்ஜினியரிங் கல்லூரி மாணவராக நடிக்கிறார் என போஸ்டர் மூலம் தெரிய வந்தது. போஸ்டரில் மோஸ்ட் வாண்டட் ஸ்டூடண்ட் என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.
இதனை வைத்து பார்த்தால் கல்லூரிக்குள் நடக்கும் கதையாக இருக்கலாம் எனவும் கூறப்பட்டு வருகிறது. மிகக்குறைந்த காலத்தில் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் எல்லாம் முடித்து உடனடியாக வெளியிட திட்டமிட்டு வருகின்றனர் படக்குழுவினர்.