புதையல் தோண்ட முற்பட்ட இடத்தில் புலிகளின் ஆயுதங்களைத் தேடி அகழ்வு!
மட்டு. மண்முனையில் 8 மணி நேர முயற்சியில் எதுவும் கிடைக்கவில்லை !
புதையல் தோண்ட முற்பட்ட இடத்தில் புலிகளின் ஆயுதங்களைத் தேடி அகழ்வு! மட்டு. மண்முனையில் 8 மணி நேர முயற்சியில் எதுவும் கிடைக்கவில்லை !
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மண்முனை பிரதான வீதியில் ஆலயம் ஒன்றிற்கு அருகாமையில் புதையல் தேடித் தோண்டினர் என்ற சதேகத்தில் சிறுவன் ஒருவன் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், அந்தப் புதையல் தோண்டப்பட்ட இடத்தில் புலிகள் புதைத்த ஆயுதங்கள் இருக்கலாம் என்று கருதி அங்கு அகழ்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
நீதிமன்ற அனுமதி பெற்று பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நேற்று திங்கட்கிழமை தோண்டும் நடவடிக்கை 8 மணித்தியாலங்கள் முன்னெடுக்கப்பட்டநிலையில் எதுவும் கிடைக்காத நிலையில் தோண்டும் நடவடிக்கையை நிறுத்தி அதனை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.
கடந்த மார்ச் 31 ஆம் திகதி இரவு மண்முனை பிரதான வீதியிலுள்ள. ஆலயம் ஒன்றிற்கு அருகாமையில். உள்ள வீடு ஒன்றில் குழு ஒன்று புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட குற்ற விசாரணைபபிரிவுக்கு தகவல் ஒன்று கிடைத்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு. சென்ற பொலிசார் குறித்த வீட்டின். உரிமையாளரான முதியவரான பெண், மொரட்டுவ பிரதேச செயலகப் பிரதம கணக்காளர், ஓய்வு பெற்ற இராணுவ வீரர் மற்றும் மொரட்டுவ, கட்டுகஸ் தோட்டை, இங்கிராக்கொட போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த 8 பேருடன் பொலன்னறுவையை சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் என 9 பேரைக் கைது
செய்ததனர்.
பின்னர் நீதிமன்ற உத்தர வுப்படி அவர்கள் 20 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணை களையடுத்து அங்கு புலிகளின் ஆயுதங்கள் இருக்கின்றன எனப் பொலிஸாருக்கு நம்பகமான தகவல் கிடைத்ததாகக் கூறப்படுகின்றது. அதன் அடிப்படையில் அங்கு தோண்டுவதற்கு கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தரவின் ஆலோசனைக்கு அமைய, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரெத்தினவின் வழிகாட்டலில்,உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ். எம்.யறூஸ் தலைமையில் நேற்று திங்கட்கிழமை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
மாவட்ட தடயவியல் பிரிவு பொறுப்பதி காரி பொலிஸ் இன்ஸ்பெக்டர் கே.ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர்மற்றும் விசேட அதிரடிப்படையினர், தொல்லியல் திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலாளர், கிராம உத்தியோகத்தர் முன்னிலையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது சிறைச்சாலையில் விளக்கமறியில் வைக்கப்பட்டிருக்கும் வீட்டின் உரிமையாளரான வயோதிபப் பெண் அழைத்துவரப்பட்டு கனரக இயந்திரத்தின் மூலம் நிலத்தைத்தோண்டும் நடவடிக்கை காலை 10.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது. சுமார் 10 அடி ஆழத்திற்கு தோண்டப்பட்டு தேடும் நடவடிக்கை மாலை 5 மணிவரை முன்னெடுக்கப்பட்டது. எதுவும் கிடைக்காத நிலையில் தோண்டும் நடவடிக்கையை நிறுத்தி, தோண்டப்பட்ட பகுதியை மீண்டும் மண் போட்டு மூடினர்.


