சாதனைகள் பலவற்றின் பின்னால் கேணல் ராயு. பாகம் - 04
இந்திய அமைதிப்படைகளின் வன்கொடுமைக்காலத்தில் விசேட பணிக்காக வெளிநாடொன்றுக்கு ராயு தலைவரினால் அனுப்பப்பட்டார்.
சாதனைகள் பலவற்றின் பின்னால் கேணல் ராயு. பாகம் - 04
பல்வேறு துறைகளிலும் ராயு வெளிப்படுத்திய ஆற்றலைத் தலைவர் அவர்களும் அறிந்திருந்தார். எமது விடுதலை இயக்கத்தை வலுவான மரபுப்படையுடன் கூடிய வலிமைமிக்க அமைப்பாகக் கட்டி எழுப்ப வேண்டுமென்ற தன்கனவை நனவாக்கக் கூடியவர்களுள் ஒருவராக ராயுவையும் அடையாளங்கண்டார். அவரை மேன்மேலும் வளர்த்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்தினார். தளபதி லெப்.கேணல் ராதா வீரச்சாவடைந்தபின் ராயுவைத் தன் நேரடிப்பணிகளில் ஈடுபடுத்தினார். அன்றிலிருந்து தன் இறுதி நாள்வரை தலைவரின் தலைவரின் அருகிலிருந்தே ராயு செயற்பட்டார். தலைவரின் அருகிலிருந்து ராயு செயற்பட்ட காலத்தில் போரியலிற் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டன. எமது இனத்திற்குப் பெரும் கேடுகளை விளைவிக்கக் கூடிய தடைகளை உடைக்கும் போதெல்லாம் அவரின் அறிவும் ஆளுமையும் கடின உழைப்பும் பெரும்பங்கு வகித்தன. எமது படைத்துறையின் ஒவ்வொரு வளர்ச்சிப்படிநிலைக்கும் ராயு வலுச்சேர்த்தார். தலைவரின் மீககவனத்துக்குள்ளாகும் படைத்துறைப் பணிகள் ராயுவிடமே ஒப்படைக்கப்பட்டன. படைத்துறை வளர்ச்சிக்கு இன்றியமையாதனவான தொலைத் தொடர்பு, வெடிமருந்து, இலத்திரனியல் ஆகிய பகுதிகளைப் பொறுப்பெடுத்து பெரும் வளர்ச்சி நிலைக்கு இட்டுச்சென்று எமது விடுதலை அமைப்புப் பேரியக்கமாக வளர வழிவகுத்தார்.
இந்தியப்படைகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட “ஜொனி” மிதிவெடியிலிருந்து சிங்களப்படைகளின் “அக்கினிக்கேலா” நடவடிக்கையை முறியடிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட மிதிவெடி, பொறிவெடி வரை, இரண்டாம் ஈழப்போரில் எதிரிகளைக் கலங்கச் செய்த பசீலன் 2000 முதல் மூன்றாம் ஈழப்போரில் எமது மோட்டார், ஆட்லறிப்படைகளைச் செயற்றிறன் மிக்கனவாய் வளர்தெடுத்ததுவரை, எம்மால் நடத்தப்பட்ட முதலாவது கரும்புலித்தாக்குதலுக்கான வெடிகுண்டுத் தயாரிப்பிலிருந்து கடற்புலிகளின் இன்றைய வளர்ச்சி நிலைவரை குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவற்றிலும் இங்கு குறிப்பிட்டுச் சொல்லமுடியாத படைத்துறைப் பணிகள் பலவற்றிலும் தலைவருக்குப் பக்கபலமாய் நின்று செயற்பட்டார்.
இந்திய அமைதிப்படைகளின் வன்கொடுமைக்காலத்தில் விசேட பணிக்காக வெளிநாடொன்றுக்கு ராயு தலைவரினால் அனுப்பப்பட்டார். அவர் திரும்பி வந்தபோது மணலாற்றுக் காட்டுக்குள் தலைவர் இருந்த பகுதியை இந்திய இராணுவத்தினர் சுற்றிவளைத்திருன்தனர். இறுதிப்போர் என மார்தட்டியபடி பெரும்போருக்கான ஆயத்தங்களில் ஈடுபட்டனர் தலைவரை அடைந்த ராயு ஆற்றிய பணிகள் அப்போரின் முடிவைத் தீர்மானிக்கும் காரணிகளுள் முக்கியமானவையாக அமைந்தன.
இந்தியப்படைகளைப் புறமுதுகிட்டோடவைத்த “ஜொனி” மிதிவெடியைத் தலைவரின் வடிவமைப்புக்கேற்ப ராயு உருவாக்கியமை வரலாற்றில் என்றும் அவரை நிலைநிறுத்தும். ஜொனி மிதிவெடியை உருவாக்கியபோது ராயுவின் அருகிலிருந்த போராளி அந்த நாட்களை நினைவு கூறுகிறான்.
“அப்போது அவரிடம் ஒரு சுவிஸ்நைவ் மட்டும்தான் இருந்தது. அதைவிட வேறு எந்த அடிப்படை வசதியும் இருக்கவில்லை. தலைவர் அவர்கள் திட்டத்தைக் கூறி அதன்மூலம் போரில் எவ்வாறு வெற்றிகளை ஈட்டலாம் என விளக்கியபோது அதன்முக்கியத்துவத்தை ராயு அண்ணை புரிந்துகொண்டார். ஜொனியை உருவாக்குவதற்காகத் தன் நித்திரையை மறந்தார். வாளில்லை, உளியில்லை, கத்தியில்லை எனக் காரணங்களைத் தேடாமல் வெற்றியைத் தேடினார். பலமுறை தோற்ற போதும் விடாமல் முயன்று வெற்றி பெற்றார்.”
இந்தியப்படை வெளியேற்றப்பட்ட பின் இரண்டாம் ஈழப்போர்க்காலத்தில் ஆயுதத் தொழிற்சாலைகளுக்குப் பொறுப்பாகவிருந்து பல வெற்றிகளுக்குக் காரணமான உற்பத்திகள் பலவற்றை மேற்கொண்டார். பல இராணுவ முகாம்களின் வீழ்ச்சிக்குக் காத்திரமான பங்களித்த “பசீலன் 2000” அவ்வுற்பத்திகளில் ஒன்றாகும். கோட்டை, மாங்குளம், ஆணையிரவு ஆகிய படைத்தளங்களிலிருந்து தப்பிப்பிழைத்த சிப்பாய்களின் மனதில் “பசிலன் 2000” இன் வெடிப்பதிர்வு எப்போதும் அச்சத்தை ஏற்படுத்தும். கரும்புலித் தாக்குதல் நடவடிக்கைகளிலும் ராயுவால் உருவாக்கப்பட்ட தொழினுட்பங்கள் கடலிலும் தரையிலும் இப்போதும் எதிரியை அச்சுறுத்தியபடியே இருக்கின்றன. இவற்றைவிட இயக்கத்தில் அவ்வப்போது அறிமுகமாகும் புதிய வகை ஆயுதங்கள் ராயுவின் கைபட்டுத்தான் வெளியே வரும்.
இயக்கத்தின் படைத்துறை வளர்ச்சியில் செலுத்திய அதே அக்கைறையைத் தன் பொறுப்பின் கிழ் செயற்பட்ட போராளிகளின் நலனிலும் செலுத்தினார். நாள்தோறும் வெடிமருந்துகளுடன் பணியாற்றும் போராளிகளைப் பாதுகாப்பதற்கான வழிவகைகளைக் கண்டறிவதற்காகப் புத்தகங்களைத் தேசிப்படித்து விடயங்களை நுணிகி ஆராய்ந்து சரியான நடைமுறைகளைச் செயற்படுத்துவதிற் கண்ணாயிருந்தார். எம்மால் உற்பத்தி செய்யப்படும் வெடிமருத்துக் கருவிகள் எமது போராளிகளின் சாதனைக் கானவையாக இருத்தல் வேண்டும். மாறாக எமது அழிவிற்குக் காரணமாக அமையக்கூடாது என்பதில் எப்போதும் அக்கறையாக இருந்தார். குறிப்பாகக் கரும்புலிகளுக்கான வெடிப் பொருட்களைத் தயாரிக்கும் போது, “நாங்கள் ஒவ்வொருவருமே கரும்புலிகள் என்ற உணர்வோடு இருந்துதான் அந்த உற்பத்திகளைச் செய்யவேண்டும். ஒரு கரும்புலியின்ர உயிர் அநியாயமாகப் போகக்கூடாது. அவர்களுக்கான உற்பத்திகள் துல்லியமானவையாக இருக்க வேண்டும்” என்று தன் போராளிகளுக்கு அடிக்கடி கூறுவார். போரில் எமது இழப்புக்களைக் குறைத்து எதிரிக்குப் பெரும் தேசத்தை ஏற்படுத்துவதில் ராயுவின் உழைப்புப் பெரிதும் உதவியது. போருக்கான திட்டங்களை வகுக்கும் போது ஏற்படும் சிக்கல்களைத் தீர்ப்பதற்குத் தலைவர் தெரிவிக்கும் தீர்வுகளை நிறைவேற்றும் வரை அவர் ஓய்வதில்லை, சில வேளைகளில் ராயு தெரிவிக்கும் தீர்வு எளிதானதாகவும் சிக்கனமானதாகவும் இருக்கும்.