டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கவே முடியாது -மோடி!
முதற்கட்ட விசாரணையில், காரில் வெடிகுண்டுகள் இருந்ததும், உமர் நபி என்பவர் காரை ஓட்டி வந்ததும் தெரிய வந்தது.
டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கவே முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
காரை ஓட்டி வந்த உமர் முகமதுக்கு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தலைநகர் டெல்லியில் நேற்று நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. செங்கோட்டை அருகே உள்ள சிக்னலில் நேற்றிரவு 7 மணியளவில் கார் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் பலி எண்ணிக்கை 13-ஆக உயர்ந்துள்ளது. 16-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக டெல்லி காவல் துறை, என்ஐஏ உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகள் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளன.
முதற்கட்ட விசாரணையில், காரில் வெடிகுண்டுகள் இருந்ததும், உமர் நபி என்பவர் காரை ஓட்டி வந்ததும் தெரிய வந்தது. இந்த குண்டுவெடிப்பில் உமர் நபியும் இறந்துள்ளார். இது ஒருபுறம் இருக்க, இது தற்கொலை தாக்குதலாக இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பூடான் புறப்பட்டு சென்றார். அந்நாட்டின் முன்னாள் அரசரான ஜிக்மே சிங்யே வாங்சக்கின் 70-வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் மோடி கலந்து கொள்கிறார்.
முன்னதாக, பூடான் தலைநகர் திம்புவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் பற்றி ஆவேசமாக பேசினார். "இன்றைக்கு மிக கனத்த இதயத்துடன் இங்கு வந்திருக்கிறேன். டெல்லியில் நேற்று நடந்த பயங்கர சம்பவம் ஒவ்வொரு இந்தியர்களையும் சோகம் அடையச் செய்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களின் குடும்பங்கள் படும் துயரத்தை என்னால் உணர முடிகிறது.
இந்த நேரத்தில் ஒன்றை கூறிக் கொள்கிறேன். டெல்லி குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட அனைவருடனும் ஒட்டுமொத்த தேசமும் உறுதுணையாக நிற்கிறது. இந்த பயங்கர சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது. அவர்கள் நீதிக்கு முன் கொண்டு வரப்படுவார்கள். விசாரணை அமைப்புகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன்" என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
இதன் தொடர்ச்சியாக, பூடான் அரசர் ஜிக்மே கேசர் நாம்கியெல் தலைமையில், டெல்லி குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களுக்காக பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.
பீகாரில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் சமயத்தில், நேற்று இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குண்டு வெடிப்புக்கு சில மணி நேரத்திற்கு முன் நடந்தது என்ன? வெளியான திடுக்கிடும் தகவல்!
கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் தற்கொலைப்படை தாக்குதலா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
டெல்லி செங்கோட்டை அருகே சுபாஷ் மார்க் சந்திப்பில், மெட்ரோ ரயில் நிலையம் அருகே நேற்று மாலை கார் ஒன்று பயங்கர சத்தத்துடன் திடீரென வெடித்தது. இந்த சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்த நிலையில் 2 பெண்கள் உள்பட 20 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து டெல்லி காவல்துறை, எஃப்எஸ்எல், என்ஐஏ மற்றும் என்எஸ்ஜி அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் அதனை ஆய்வு செய்த நிலையில், வெடித்து சிதறிய காரை ஓட்டியது காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியைச் சேர்ந்த மருத்துவர் உமர் முகமது என்பது தெரியவந்துள்ளது. மேலும், அம்மோனியம் நைட்ரேட், எரிபொருள் எண்ணெய் மற்றும் டெட்டனேட்டர்கள் காரை வெடிக்க வைக்க பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதும் விசாரணையில் தெரியந்துள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவம் நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, ஹரியானா மாநிலத்தில் உள்ள ஃபரிதாபாத்தில் மூன்று மருத்துவர்கள் உள்பட எட்டு பேர் அம்மோனியம் நைட்ரேட், பொட்டாசியம் நைட்ரேட் மற்றும் சல்பர் உள்ளிட்டவை அடங்கிய 2,900 கிலோ வெடிபொருட்கள் மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் போலீசாரிடம் சிக்கினர். இந்நிலையில், இவர்களுக்கும் டெல்லி சம்பவத்துக்கு தொடர்பு இருக்க அதிக வாய்ப்பு உள்ளதாக போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். மேலும், காரை ஓட்டி வந்த உமர் முகமது ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து விவரித்த டெல்லி காவல்துறை ஆணையர் சதீஷ் கோல்ச்சா, “செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே சரியாக 6.52 மணியளவில் சிக்னலை மெதுவாக கடந்த ஹூண்டாய் ஐ20 கார் வெடித்து இந்த சம்பவம் நடந்துள்ளது. சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் முகமூடி அணிந்த ஒருவர் காரை இயக்கியுள்ளார். முறைப்படி இந்த காரின் உரிமையாளர் ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்த தாரிக் மற்றும் முன்னாள் உரிமையாளர் முகமது சல்மானை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம்.
இந்த சம்பவத்திற்கும் ஃபரிதாபாத் பயங்கரவாதிகள் வெடிப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டவர்களுக்குத் தொடர்புள்ளதா? என விசாரணை மேற்கொண்டு வருகிறோம். சம்பவத்தை தொடர்ந்து பஹர்கஞ்ச், தர்யாகஞ்ச் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விடுதிகள் மற்றும் முக்கிய இடங்களில் ஆய்வு செய்ததில் சந்தேகத்திற்கிடமான 4 பேர கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என தெரிவித்தார்.


