கிளீன் ஸ்ரீ லங்கா: ஆட்சியதிகார முழக்கங்களின் வரலாற்று வழித்தடம் - என்.சரவணன்
.
2025 புத்தாண்டு ‘கிளீன் ஸ்ரீ லங்கா’ முழக்கத்துடன் (Slogan) ஆரம்பித்திருக்கிறது.
ஜனாதிபதி அனுரா குமார திசாநாயக்க அத்திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்து அத்திட்டத்தைப் பிரகனடப்படுத்தி நீண்ட உரையையும் வழங்கினார். அந்நிகழ்வில் பல வெளிநாட்டுத் தூதுவர்களும் இராஜதந்திரிகளும், அரசாங்கத் தலைவர்களும், அதிகாரிகள் பலரும் கூட கலந்துகொண்டிருந்தனர்.
இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான செயலணியொன்றும் உருவாக்கப்பட்டு, அதற்கான காரியாலயம், வேலைத்திட்டம், அனைத்தும் தொடக்கப்பட்டு வேகமாக பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன.
சகல வலதுசாரிக் கட்சிகளும் இவ்வாட்சியைக் கவிழ்ப்பதற்கு மறைமுகமாக அணிதிரண்டபடி நாளாந்தம் அவதூறுகளால் போர் தொடுப்பது எதிர்பாரக்காதவை அல்ல. ‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டம் தொடக்கப்பட்டு இந்த பத்து நாட்களில் முட்டையில் மயிர்பிடுங்க முயற்சிக்கும் போக்கை கவனித்தாலே நமக்கு அவர்களின் கையாலாகாத்தனமும், வங்குரோத்துத் தனமும் எளிமையாகப் புரிந்துவிடும்.
சுதந்திர காலம் தொட்டு முழக்கங்கள்!
“கிளீன் ஸ்ரீ லங்கா” என்பது இன்றைய ஆட்சியின் பிரதான முழக்கங்களில் ஒன்று. இலங்கையின் வரலாற்றில் இவ்வாறான முழக்கங்களை (Slogans) சகல ஆட்சியிலும் கவனிக்கலாம்.
இலங்கை சுதந்திரமடைவதற்கு (பெயரளவில்) ஓராண்டுக்கு முன்னரே சோல்பரி அரசியலமைப்பின் கீழ் இலங்கையின் முதலாவது பாராளுமன்றத் தேர்தல் நடந்துவிட்டது. 1948 இல் இலங்கை சுதந்திர பிரகடனத்தின் போது முதலாவது பிரதமராக டி.எஸ். சேனநாயக்க இருந்தார். இலங்கைக்கு சுதந்திரம் கோராமல் அரசியல் சீர்திருத்தத்தை மட்டுமே கோரிக்கொண்டிருந்த “கரு வெள்ளையர்” (சிங்கள மொழியிலும் “கலு சுத்தோ” என்று இவர்களை விமர்சிக்கும் வழக்கம் உண்டு) குழாமுக்கு தலைமை வகித்தவர்காக டீ.எஸ்.சேனநாயக்க இருந்தார். ஆனால் டி.எஸ்.சேனநாயக்கவுக்கு ஐக்கிய தேசியக் கட்சி 'தேசத்தின் தந்தை' என்ற நாமத்தை சூட்டியது. அதுவே பேச்சுவழக்கில் நிலைபெற்றுவிட்டது. ஜே.ஆர். 1962 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையொன்றில் “1944 இல் கூட இலங்கை தேசிய காங்கிரஸ் சுதந்திரம் கோரவில்லை” என்று ஒத்துக்கொண்டார். (12.07.1962, ஹன்சார்ட் பக்கம் 83).
டி.எஸ். சேனநாயக்கவுக்குப் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த தலைவராக மாறிய பிரதமரான டட்லி சேனநாயக்க "அரிசி தந்த தந்தை" என்று அழைக்கப்பட்டார். அவரது அரசாங்கம் இரண்டு கொத்து அரிசியை இலவசமாக வழங்கியதால் அவ்வாறு அழைக்கப்பட்டார். டட்லிக்குப் அடுத்து பிரதமராக ஆன சேர் ஜோன் கொத்தலாவல மக்கள் செல்வாக்கு இல்லாத நிலையில் அவ்வாறான நாமமெதுவும் சூட்டப்படவில்லை.
1956 ஆம் ஆண்டு எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க 24 மணி நேரத்திற்குள் 'சிங்களத்தை' அரச மொழியாக்குவதாக உறுதியளித்ததன் மூலம் அவர் சிங்கள தேசியவாதிகளின் கதாநாயகனாக ஆனார். சிங்கள பௌத்தத் தேசியவாதமே தன்னை ஆட்சியலமர்த்தும் என்பதை உறுதிசெய்துகொண்ட பண்டாரநாயக்க “சங்க, வெத, குரு, கொவி, கம்கரு” – (மதகுருமார்கள், ஆயுர்வேத வைத்தியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள்) என்கிற அரசியல் முழக்கத்துடன் ஆட்சியிலமர்ந்தார்.
இறுதியில் அவருக்கு ஆதரவளித்த தரப்பினராலேயே அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். பண்டாரநாயக்கவின் இறுதி நாட்களில், அரசியல் அவதானிகள் அவரை பிற்போக்குவாதிகளின் கைதி என்று விமர்சித்தனர். 1956 ஆம் ஆண்டு மக்கள் ஐக்கிய முன்னணியின் அந்த ஜனரஞ்சக முழக்கம் இறுதியில் கைவிடப்பட்டது. 1970 இல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் கைகோர்த்து ஐக்கிய முன்னணி அரசாங்கத்தை அமைத்ததுடன் பிரித்தானிய “டொமினியன்” பெயரைக் கொண்ட பெயரளவிலான “சுதந்திரம்” மாற்றப்பட்டு பிரித்தானிய கிரீடத்துடனான உறவை முடிவுக்கு கொண்டு வந்தார். 1972 ஆம் ஆண்டு குடியரசாக ஆக்கப்பட்டு, குடியரசு அரசியலமைப்பும் கொண்டுவரப்பட்டது.
70இல் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க போட்டியிட்ட போது "எங்கள் அம்மா கிட்ட வருவார். இரண்டு கொத்து அரிசி தருவார்" (அபே அம்மா லங்க எனவா ஹால் சேறு தெக்க தெனவா) என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள் பிரச்சாரம் செய்தனர். இறுதியில் சிறிமாவோ, "நான் சந்திரனில் இருந்தாவது அரிசி கொண்டு வந்து தருவேன்” என்றார். 1976 அளவில் நாட்டின் உணவு பற்றாக்குறை உச்ச அளவுக்கு ஏறி, இறுதியில் அதுவரையான வரலாற்றில் அதிக வெறுப்பை சம்பாதித்த அரசாங்கம் என்பதை 77 தேர்தல் முடிவுகள் புலப்படுத்தின. ஆனால் 1976 உணவுப் பற்றாக்குறை காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆதரவான பேரணி நடத்தியவர்கள் இவ்வாறு கோஷமிட்டு வீதிகளில் சென்றனர்.
" மிளகாய் இன்றி கறி உண்பேன்."
அரிசி இன்றி சோறுன்பேன்.
சர்க்கரை இன்றி தேநீர் குடிப்பேன்.
மேடம் நீங்கள் சொன்னால்
புல்லைக் கூட நாங்கள் உண்போம்"
என்றனர்
அத் தேர்தலில் ஜே ஆரின் ஜனரஞ்சக அரசியல் முழக்கமாக “தர்மிஷ்ட சமாஜய” (நீதியான சமூகம்) என்கிற வாசகத்தை பிரச்சாரம் செய்திருந்தார். ஆனால் மக்கள் தந்த பேராதரவை முறைகேடாக பயன்படுத்தி; தனி ஒருவரின் கையில் அதிகாரங்களைக் குவிக்கக் கூடியதும், அராஜங்கங்களுக்கு வழிவகுக்கக் கூடியதுமான நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிமுறையை உருவாக்கி அநீதியான யாப்பை உருவாக்கினார். திறந்த பொருளாதாரக் கொள்கையைக் கொண்டு வந்ததன் மூலம் நாட்டை முதலாளிகளுக்கு சுரண்டவிட்டு நாடு பெரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் கொண்ட சமூகத்தை ஏற்படுத்தக் காரணமானார்.
1982 ஆம் ஆண்டு நடத்தப்படவேண்டிய பொதுத் தேர்தலையே நடத்தாமலேயே ஆட்சியை நீடிப்பதற்காகாக குறுக்கு வழியில் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் மேலும் ஐந்தாண்டுகளுக்கு ஆட்சியை நீடித்தார். அத்தேர்தலின் முழக்கமாக “இலங்கையை சிங்கப்பூராக ஆக்கிக் காட்டுவேன்” என்றார். அவருக்குப் பின் பிரதமர் பிரேமதாச ஆட்சி அதிகாரத்துக்கு வந்தார்.
“சமாதானம் மலரும், துயரங்கள் முடியும்” (සාමය උදාවෙයි, දුක්ගිනි නිමාවෙයි) என்கிற முழக்கத்துடன் பிரேமதாச ஆட்சியேறினார். இந்திய இராணுவத்தை விரட்டுவது, புலிகளுடன் பேச்சுவார்த்தையை நடத்துவது, வறுமை ஒழிப்பு, பத்து லட்சம் வீட்டுத் திட்டம் என திட்டங்கள் வகுத்தபோதும் அவற்றை நிறைவு செய்வதற்கு முன்னரே அவர் கொல்லப்பட்டார். ஜேவிபியை அடக்குவது என்கிற பேரில் ஏராளமான சிங்கள இளைஞர்களின் படுகொலைக்கு காரணமானார்.
2005 தேர்தலில் மகிந்த வென்றார். அத்தேர்தலில் “ரணில் – புலி கூட்டு” என்று பிரச்சாரம் செய்த அவர் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதாகவும் “மகிந்த சிந்தனை” என்கிற முழக்கத்தையும் பிரகடனப்படுத்தினார். அவ்வாட்சியின் போது யுத்தத்த்தை முடிவுக்கு கொண்டு வந்த தலைவர் என்று அவருக்கு 2010 இல் மேலும் சந்தர்ப்பம் கொடுத்த மக்கள் அமோக வெற்றியை கொடுத்திருந்தனர். இக்காலப்பகுதியில் மகிந்தவின் ஆட்சியில் நடந்த ஊழல், துஷ்பிரயோகம், அராஜகம், அநியாயம் என்பவற்றால் நாடு அதலபாதாளத்தை நோக்கிச் சென்றது. ‘மகிந்த சிந்தனை’ முழக்கம் மகிந்தவின் குடும்பத்துக்கும் ஆதரவாளர்களுக்கும் மட்டுமே பயன்பட்டிருந்தது. ஆனால் சிங்களத் தேசியவாதிகளால் மகிந்த மகாராஜா என்று அழைக்கப்பட்டார்.
மகிந்தவை ஆட்சியில் இருந்து விரட்டுவதற்காக பல தரப்பும் ஒன்றிணைந்து மைத்திரிபால சிறிசேன தலைமையில் “நல்லாட்சி” என்கிற தேர்தல் முழக்கத்தை முன்வைத்து ஆட்சியமைக்கப்பட்டது. “நல்லாட்சி” அரசாங்கம் என்றே அந்த ஆட்சியை அடையாளப்படுத்தும் சொல்லாடல் ஜனரஞ்சக பாவனையாக இருந்தது. “நல்லாட்சி” பாதிவழியிலேயே குழி பறிக்கப்பட்டு மகிந்தவின் கரங்களுக்கு மீண்டும் கைமாற்றப்பட்டது.
யுத்தத்தை வென்று கொடுத்த கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நாட்டைக் கொடுக்கவேண்டும் என்கிற கோஷத்துடன் “ஒரே நாடு, ஒரே சட்டம்” என்கிற முழக்கத்துடன் 69 லட்ச வாக்குகளுடன் அமோக வெற்றியுடன் சிங்கள பௌத்தர்கள் கோட்டபாயவை ஆட்சியில் அமர்த்தினார்கள். தன் சகோதரர்களால் சீரழிக்கப்பட்ட நாட்டை கோட்டாபயவால் சரி செய்ய வேண்டி ஏற்பட்டது. அதற்குள் நாடு குறுகிய காலத்தில் வங்குரோத்து நிலையை எட்டியது. மக்கள் தமது அத்தியாவசிய தேவைகளுக்காக வரலாறு காணாத அளவுக்கு வீதிகளில் வரிசைகளில் நிற்கும் நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியது கோட்டாவின் ஆட்சி.
பல தடவைகள் தேர்தலில் தோற்ற ரணில் விக்ரமசிங்க இலவசமாக ஜனாதிபதிப் பதவியை கோட்டாவிடம் இருந்து பெற்றுக்கொண்டார். எஞ்சிய ஆட்சி காலத்தை நிதி வங்குரோத்து நிலைமையில் இருந்து தற்காலிகமாக நாட்டை பாதுகாப்பவராக தன்னை ஆக்கிக் கொண்டார்.
ஆனால் மக்கள் அதற்காக அவருக்கு 2024 தேர்தலில் வாய்ப்பைக் கொடுக்கவில்லை. மாறாக “மாற்றம்”, “மறுமலர்ச்சி” என்கிற முழக்கத்தையும் “நாடு அனுரவுக்கு” என்கிற முழக்கத்தையும் வரவேற்றார்கள். 76 ஆண்டுகால மக்கள் விரோத ஆட்சி அதிகார முறைமையை முடிவுக்கு கொண்டு வந்தார்கள் மக்கள்.
இவ்வாறான தேர்தல் முழக்கங்களுக்குப் புறம்பாக அரசாங்கங்கள் தமது வேலைத்திட்டங்களாக உப முழக்கங்களை வைப்பதுண்டு. ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் தமது புரட்சிகர மாற்றத்தின் ஆரம்ப காலகட்டங்களில் ஐந்தாடுத் திட்டம், பத்தாண்டுத் திட்டம் என்றெல்லாம் ஏற்படுத்தி மக்களை விழிப்புறச் செய்து மக்களையும் அப்பணிகளில் பங்காளிகளாக்கி அத்திட்டங்களை நிறைவேற்றிய உலக வரலாறுகளைக் கண்டிருக்கிறோம். அவை கலாசார புரட்சியாகயும், பண்பாட்டு மாற்றமாகவும் அறியப்பட்டதர்கான காரணம் அவை கட்டமைப்பு மாற்றத்துக்கான அடிப்படைகளை ஏற்படுத்தியமை தான்.
இன்றைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் ஆட்சிக்கு வந்து இரு மாதங்களில் முன்வைத்தத் திட்டம் தான் “கிளீன் ஸ்ரீ லங்கா” என்கிற வேலைத்திட்டமும். முழக்கமும்.
லீ குவானின் “கீப் கிளீன் சிங்கப்பூர்”
உலக வரலாற்றில் இதற்கு முன்னர் இதே தலைப்பில் சில முன்னுதாரணங்கள் நமக்கு உள்ளன. சிங்கப்பூரின் சிற்பி என்று அறியப்பட்டவரான சிங்கப்பூரின் அன்றைய தலைவர் லீ குவான் "Keep Singapore Clean” (கீப் கிளீன் சிங்கப்பூர்) என்கிற முழக்கத்தின் மூலம் தான் நாட்டைக் கட்டியெழுப்பினார். அவர் 1968 ஆம் ஆண்டு அத்திட்டத்தை தொடங்கியபோது இன்றைய சிங்கப்பூரை எவரும் கற்பனை செய்தும் பார்த்திருக்க மாட்டார்கள்.
லீ குவானுக்கு அன்று இலங்கை ஒரு முன்மாதிரியாக இருந்தது. இலங்கையைப் போல “சிங்கப்பூரை ஆக்கிக் காட்டுவேன்” என்று அன்று அவர் கூறியிருந்தார். ஆனால் இலங்கையோ மோசமான முன்னுதாரண நாடாக ஆக்கப்பட்டது. இனங்களின் உரிமைகளை சரிவரக் கையாளத் தவறியதே இலங்கையின் பின்னடைவுக்குக் காரணமென பிற்காலத்தில் லீ குவான் தெரிவித்தார்.
“சிங்கப்பூர் கிளீன்” திட்டமானது வெறும் தூய்மைத் திட்டமாக பிரகடனப்படுத்தவில்லை. மாறாக கல்வி, விழிப்புணர்வு, மக்களின் பொறுப்புணர்ச்சி பற்றிய நடத்தை மாற்றம், தொழிநுட்ப வளர்ச்சி, கழிவு முகாமைத்துவம் என்பன எல்லாமே அத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டன.
காலப்போக்கில் உலகிலேயே தூய்மையான நாடாக அடையாளம் காணப்பட்டது. மக்களின் வாழ்க்கைத் தரம் வேகமாக உயர்ந்தது. இயற்கை வளம் எதுவுமற்ற சிங்கப்பூர் பிராந்தியத்தில் ஒரு வளர்ச்சியடைந்த நாடாக ஆனதை உலகே வியப்புடன் உற்று கவனித்தது. இன்று அப்பிராந்தியத்திலேயே குறைவிருத்தி நாடுகளின் மத்தியிலோர் வளர்ந்த நாடாக எழும்பியுள்ளது. அண்டைய நாடுகள் தமது நாட்டை ஒரு சிங்கப்பூராக ஆக்குவதற்கு கனவு கண்டனர்.
இறுதியில் 1970 களின் முடிவில் ஜே.ஆர். “இலங்கையை சிங்கப்பூராக ஆக்கிக் காட்டுவேன்” என்று தேர்தலில் வாக்கு கேட்கும் நிலைக்கு இலங்கை உருவாகி இருந்ததை மறந்திருக்க மாட்டீர்கள்.
மோடியின் கிளீன் இந்தியா திட்டம்
2014 ஆம் ஆண்டு மோடி அரசாங்கம் "Swachh Bharat" சுவாச் பாரத் என்கிற கிளீன் இந்தியா திட்டத்தை ஒரு பெரிய திட்டமாகக் கொண்டு வந்தது. ஆனால் அத்திட்டமானது நேரடியாக “தூய்மை”யான இந்தியாவை இலக்கு வைத்து திட்டமிடப்பட்டது. இந்தியா முழுவதும் நெடுங்காலமாக நீடித்து வந்த மலசல வசதியின்மையை தீர்க்கும் திட்டம் இதில் முக்கிய அங்கமாக இருந்தது. இந்தியாவின் சனத்தொகை அதிகரிப்பும், வாழ்விட பெருக்கமும் தூய்மையற்ற ஒரு நிலைக்கு தள்ளிக்கொண்டே சென்றமையை உலக அளவில் கவனிக்கப்பட்டது. இந்தியாவை ஏளனம் செய்வதற்கான காரணியாக இந்நிலைமை வளர்ச்சியடைந்து இருந்தது. தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் கணிசமான அளவு இந்த சிக்கல் தீர்க்கப்பட்டது மட்டுமன்றி இது தொடர்பான விழிப்புணர்வு மக்களிடம் சென்றடைந்தது. தூய்மை இந்தியாவின் அவசியம் பற்றிய தேவை தொடருந்தும் உணரப்படுவதற்கு இத்திட்டம் வழிகோலியது.
“கிளீன் சிறிலங்கா”
இன்றைய “தூய்மை இலங்கை” திட்டத்தின் வடிவம் மேற்படி இரு நாட்டு வடிவங்களில் இருந்து மாறுபட்டது. அதாவது வெறுமனே தூய்மைத் திட்டம் என்பதோடு மட்டுப்படாத; பறந்து விரிந்த திட்டம் இது. இன்னும் சொல்லப்போனால் லீ குவானின் திட்டத்தை விட விரிந்தது என்றே சொல்ல வேண்டும்.
தூய்மை என்பதன் அர்த்தம் விரிக்கப்பட்டு; அரசாங்கம், குடிமக்கள், சிவில் நிர்வாகத்துறை இவற்றின் நடத்தை மாற்றத்தை மைய இலக்காகக் கொண்டது கிளீன் ஸ்ரீ லங்கா திட்டம்.
அரசாங்கம் எத்தனை சிறந்த திட்டங்களைக் கொண்டுவந்தாலும் நடத்தை மாற்றம் (Attitude change) வளர்ச்சியுறாவிட்டால் அதில் எந்தப் பலனும் கிடையாது. எனவே தான் இதில் போலீசார், இராணுவத்தினர் மட்டுமன்றி சிவில் நிர்வாகத்துறையினர், துறைசார் வல்லுனர்கள் என்போரும் இந்த வேலைத்திட்டத்தின் இயக்குனர்களாக ஆக்கப்பட்டார்கள். நீதித்துறைக்கும் இதில் கணிசமான பொறுப்பு உண்டு.
பாதசாரிகள் முறையான கடவையில் கடக்க மாட்டார்களாயின், வீதிகளில் பொறுப்பற்று குப்பைகளை எறிவார்களாயின், வீதிகளில் பொறுப்பற்று வண்டிகளை செலுத்துவார்களாயின், அரசாங்க ஊழியர்கள் மக்கள் வரிப்பணத்தை நிதியையும், நேரத்தையும் துஷ்பிரயோயம் - விரயம் செய்வார்களாயின் எத்தனை சிறந்த ஆட்சியதிகாரம் இருந்தும் எதைத் தான் மாற்ற முடியும்.
தார்மீக கூட்டுப்பொறுப்பு அனைத்துப் பிரஜைக்கும் உண்டு. ஆட்சியை கட்சிகளிடம் கொடுத்துவிட்டு அவர்கள் அனைத்தையும் மாற்றிவிடுவார்கள் என்று கனவு காண முடியுமா. இதில் பிரஜைகளின் கடமையும் பொறுப்பும் என்ன என்பதே இன்றைய கேள்வி. பிரஜைகள் தமது கடமைகளையும், பொறுப்பையும் சரிவர செய்வதன் மூலமே உரிமைகளைக் கோருவதற்கான தார்மீக உரிமையையும் பெறுகிறார்கள்.
அது தேசத்தின் மீதான பிரக்ஞையில் இருந்தே புறப்படும். அந்த பிரக்ஞை செயற்கையாக உருவாக்கக் கூடியதல்ல. பழக்கவழக்க நடத்தைகள் சீரழிந்து போனதற்குப் பின்னால் ஒரு வரலாற்று நீட்சி உண்டு. அதுபோல சமூக, அரசிய, நிர்வாக அமைப்பு முறைக்கும் பங்குண்டு. இந்த கலாசார, பண்பாட்டுப் பரிவர்த்தனையை உருவாக்குவதற்கு படிப்படியான நடத்தை மாற்ற விழிப்புணர்வு அவசியம். உடனடியாக மாற்றிவிடமுடியாது.
கிளீன் சிறிலங்கா திட்டமானது குறைந்தபட்சம் அந்த நடத்தை மாற்ற விழிப்புணர்வுக்கான ஆரம்பத்தை தொடக்கி வைத்திருக்கிறது. அது கூட்டு உணர்வினாலும், கூட்டு முயற்சியாலும், மட்டுமே சாத்தியப்படுத்தலாம்.
தற்போது கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்துக்கு எதிரான அவதூறுப் பிரச்சாரங்கள் எதிர்க் கட்சிகளால் தொடங்கப்பட்டுள்ளன.
”செயல் - அதுவே சிறந்த சொல்” என்பது சே குவேராவுக்குப் பிடித்த வாசகங்களில் ஒன்று. முழுநேர தீவிர செயற்திறன் மிக்க, அர்ப்பணிப்புள்ள ‘சேகுவேரா’ இயக்கமொன்றின் ஆட்சி வேறெப்படி அமையும். இவ்வாட்சியின் மீது கொள்கை ரீதியான பல்வேறு விமர்சனங்கள் யாருக்கும் இருக்கலாம். அவ்வாறு விமர்சனங்களை இப்போது செய்யாதவர்களும் இனி வரும் காலங்களில் விமர்சனங்கள் கண்டனங்களில் இறங்கிவிடுவார்கள். அது அரசியல் நியதி. அந்த நியதிக்கு எந்த ஒரு ஆட்சியையும் விதிவிலக்கில்லை. வெறுப்பை சம்பாதிக்காத எந்த ஆட்சி தான் உலகில் நிலைத்திருக்கிறது.
ஆனால் வரலாற்றில் பல்வேறு விதத்திலும் வித்தியாசங்களைக் கொண்ட ஒரு ஆட்சியென்பது உண்மை. இவ்வாட்சி கொள்கை பிடிப்புள்ள இறுக்கமான ஒழுக்க விதிகளைக் கொண்ட கட்சியால் வழிநடத்தப்படுவது என்பது இலங்கையின் வரலாற்றுக்கு புதியதொன்று. இலங்கைப் பிரஜைகளுக்கு பரீட்சார்த்தமான ஒன்றும் கூட.
பிரதமர் அருணி ஜனவரி 21, 22 ஆகிய திகதிகளில் இதைப் பற்றி பாராளுமன்றத்தில் விவாதங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்திருக்கிறார். இத்திட்டத்தைப் பற்றிய விரிவான விளக்கம் அதன் மூலம் எட்டும் என்று எதிர்பார்ப்போம்.
அதேவேளை அதன் மீதான நியாயமான விமர்சனங்களை முன்வைப்பதன் மூலம் அத்திட்டத்தை நேர்த்தியாக்குவதும் நம் எல்லோருடையதும் கடமை.