சீனாவுடனான உடன்படிக்கை இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
.

''இந்திய விஜயத்தை விடவும் மிகவும் ஒரு எதிர்பார்ப்புடனும், உற்சாகத்துடனும் அநுர குமார சீனாவுக்கு போகின்றார். இந்திய விஜயத்தை விடவும் அதிகளவிலான நன்மைகள் கிடைக்கும் என்பது அநுர குமாரவின் நம்பிக்கையாக காணப்படுகின்றது." என கூறுகிறார் மூத்த செய்தியாளரும், அரசியல் ஆய்வாளருமான ஆர்.சிவராஜா.
தொடர்ந்து பேசிய அவர், "ஏனென்றால், சீனாவுடன் இவர்கள் மிக நீண்ட காலமாக நெருக்கமாக செயற்பட்டு வருகின்றார்கள். இந்த விஜயத்துக்கு பிறகு நிறைய உதவிகளை சீனாவிடமிருந்து பெற்றுக்கொள்வார்கள். அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், இந்த விஜயத்துக்கு பிறகு அவர் பிராந்திய ரீதியான சில ராஜதந்திர சவால்களை நிச்சயம் எதிர்கொள்வார்."
"ஏனென்றால், அவர் இப்போது சீனாவுக்கு சென்று அவர் கொடுக்கப் போகின்ற வாக்குறுதிகள், பிராந்திய ரீதியான சில எதிர்வினைகளை ஏற்படுத்தப் போகின்றது. குறிப்பாக சீன கப்பல்கள் இலங்கைக்கு வருவதில் கடந்த காலங்களில் இருந்த பிரச்னை, இந்த விஜயத்தின் பின்னர் அந்த ஆராய்ச்சி கப்பல்கள் இங்கு வருவதற்கு சீனாவுக்கு வசதியான வகையில் அமைந்து விடும் என்பதுதான் மிக முக்கியமான கருத்தாக இருக்கின்றது." என்கிறார்.
இந்தியாவின் முதலீடுகள் இலங்கையில் மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன என்று கூறும் அவர், "அதானியின் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் மீள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. சீனா தற்போது அதேபோன்ற சில வலுசக்தி ஒப்பந்தங்களையும் செய்வதற்கு காத்திருக்கின்றது. இந்தியாவின் ஒப்பந்தங்களை ஒத்ததான விடயங்களை சீனாவுக்கு வழங்குவதாக உறுதி வழங்கி விட்டால், நிச்சயமாக பிராந்திய ரீதியான முறுகல் நிலையை ஏற்படுத்தும்." என்கிறார்
இலங்கை ஜனாதிபதி, தம்முடன் நெருங்கி பழகுகின்றார் என்ற தோற்றப்பாட்டை உலகத்துக்கு வெளிப்படுத்த சீனா முயற்சித்து வருவதாகவும் மூத்த செய்தியாளர் ஆர்.சிவராஜா கூறுகின்றார்.
''எனவே இந்த விஜயத்தை அமெரிக்கா, ஜப்பான், இந்தியா போன்ற நாடுகள் கூர்மையாக அவதானித்துக்கொண்டிருக்கின்றன." என தெரியப்படுகின்றது.