'மாணவிகளுக்கு பாலியல் தொல்லை': 2 மாதங்களில் 20-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் 'பணி நீக்கம்'.
பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபட்டவர்களின் சான்றிதழ்கள் அரசாணை 121ன் படி ரத்து செய்ய கல்வித்துறை நடவடிக்கை எடுத்துத்துள்ளது.

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்த 20-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களின் சான்றிதழ்களை ரத்து செய்யும் பணிகளிலும் பள்ளிக்கல்வித்துறை மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் பள்ளிகளில் மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை சம்பவம் நிரூபிக்கப்பட்டால், அவர்கள் டிஸ்மிஸ் செய்யப்படுவதோடு சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எச்சரித்திருந்தார்.
இந்த நிலையில், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றச்சாட்டுகளை 3 ஆண்டுகளில் கணக்கு எடுத்ததில் 238 ஆசிரியர்கள் பாலியல்ரீதியான குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. அதில் 36 சம்பவங்கள் பள்ளிக்கு வெளியே நடைபெற்றவை. இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட 11 ஆசிரியர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், 4 பேர் இறந்துள்ளனர். மற்றவர்களிடம் விசாரணை நடத்தி மார்ச் 10 ஆம் தேதி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமாெழி கூறி இருந்தார்.
இந்நிலையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றச்சாட்டில் திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, புதுக்கோட்டை, விழுப்புரம், தருமபுரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என, 7 ஆசிரியர்கள் கடந்த 2 மாதங்களில் டிஸ்மிஸ் செய்யப்பட்டு உள்ளனர். அதே போல் தொடக்கக் கல்வித்துறையில் 15 ஆசிரியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 3 ஆசிரியர்கள் இறந்துள்ளனர். இவர்களின் சான்றிதழ்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பெற்று ரத்துச் செய்யும் பணியை மேற்கொண்டு வருவதாகவும், தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் 2012 ஆம் ஆண்டில் அரசாணை 121 வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அவர்களுக்கு கடும் தண்டனையான அதாவது கட்டாய ஓய்வு, பணிநீக்கம் போன்ற தண்டனைகள் வழங்கப்படும். அரசுப் பள்ளி ஆசிரியர்களை பொறுத்தவரையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதி 19 (2) இதற்கு பொருந்தும். இவ்விதியை மீறுபவர்களுக்கு மேற்குறிப்பிட்ட தண்டனைகளுள் ஒன்று வழங்கப்பட வேண்டுமென தமிழ்நாடு குடிமைப் பணி (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளில் விதி 8-ல் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபட்டு உறுதி செய்யப்பட்டவர்களின் சான்றிதழ்கள் அரசாணை 121ன் படி ஏற்கனவே ரத்து செய்ய பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துத்துள்ளது.
பள்ளிக்கல்வித் துறையில் ஏற்கனவே பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியர்கள் மீதான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2 மாதங்களில் திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, புதுக்கோட்டை, விழுப்புரம், தருமபுரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு ஆசிரியர் என 7 ஆசிரியர்கள் டிஸ்மிஸ் செய்ய்பட்டுள்ளனர்.
அதே போல் தொடக்கக் கல்வித் துறையில் 15 ஆசிரியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 3 ஆசிரியர்கள் இறந்துள்ளனர். இவர்களின் சான்றிதழ்களை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் பெற்று ரத்துச் செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது'' என, பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.