80 வயது மூதாட்டி கழுத்து நெரித்து கொலை ; சந்தேக நபருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
.
80 வயது மூதாட்டி ஒருவரை கழுத்து நெரித்து கொலை செய்த சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட நபரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமாகம நீதிவான் ராஜிந்த ஜயசூரிய உத்தரவிட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட மூதாட்டியின் மருமகனுக்குச் சொந்தமான விற்பனை நிலையம் ஒன்றில் பணிபுரியும் புத்தளம் ஆனமடுவ பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
சந்தேக நபர் சம்பவதினத்தன்று கொட்டாவை – மாலம்பே வீதியில் உள்ள குறித்த மூதாட்டியின் வீட்டிற்கு சென்றுள்ள நிலையில் தனிமையிலிருந்த மூதாட்டியிடம் 10 ஆயிரம் ரூபா பணம் கோரியுள்ளார்.
இந்நிலையில், குறித்த மூதாட்டி பணம் தருவதற்கு மறுப்பு தெரிவித்ததால் சந்தேக நபர் மூதாட்டியின் காதிலிருந்த தோடுகளைக் கழற்ற முயன்றுள்ளார்.
இதன்போது, சந்தேக நபர் மூதாட்டியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதனையடுத்து, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இந்த உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.