Breaking News
டிக்டாக்கிற்கு டிஜிட்டல் ஊரடங்கு! 15 வயதுக்குட்பட்டோருக்கு சமூக வலைதளங்களுக்குத் தடை?
பிரான்சில் டிக்டாக் செயலியால் சிறார்களின் மனநலத்தில் ஏற்படும் பாதிப்புகள்குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நாடாளுமன்ற விசாரணைக் குழு, பிரான்ஸ் அரசுக்கு அதிரடிப் பரிந்துரை!
டிக்டாக்கிற்கு டிஜிட்டல் ஊரடங்கு! 15 வயதுக்குட்பட்டோருக்கு சமூக வலைதளங்களுக்குத் தடை? - பிரான்ஸ் அரசுக்கு நாடாளுமன்றக் குழு அதிரடிப் பரிந்துரை!
பிரான்சில் டிக்டாக் செயலியால் சிறார்களின் மனநலத்தில் ஏற்படும் பாதிப்புகள்குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நாடாளுமன்ற விசாரணைக் குழு, தனது இறுதி அறிக்கையை வெளியிட்டுள்ளது. இளைஞர்களைக் குறிவைத்து, கட்டுப்பாட்டை இழந்து செயல்படும் இந்தச் சமூக வலைதளத்தைக் கட்டுப்படுத்த 43 அதிரடிப் பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.
பல மாதங்களாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், சமூக வலைதளப் பொறுப்பாளர்கள் மற்றும் செயல்பாட்டாளர்களிடம் 95 மணிநேரம் விசாரணை நடத்திய இந்தக் குழு, டிக்டாக் குறித்து கடுமையான முடிவுகளுக்கு வந்துள்ளது.
"டிக்டாக் ஒரு 'குப்பைக் கடல்' (ocean of trash), இது இளைஞர்களைக் குறிவைத்துத் தாக்கும் ஒரு கட்டுப்பாடற்ற வலையமைப்பு. தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்கள் இதில் கொட்டிக் கிடக்கின்றன," என்று அந்த அறிக்கை கடுமையாகச் சாடியுள்ளது.
டிக்டாக்கின் அல்காரிதம், பயனர்கள் எதை விரும்புகிறார்கள் என்பதை விட, எதில் அதிக நேரம் செலவிடுகிறார்கள் என்பதை வைத்தே செயல்படுகிறது. இதனால், அதிர்ச்சியூட்டும் மற்றும் மோசமான உள்ளடக்கங்கள் அதிகமாகப் பரப்பப்படுகின்றன. "பயனர்களின் நலனைவிட, லாபம் ஈட்டுவது ஒன்றே டிக்டாக்கின் ஒரே நோக்கம்" என நரம்பியல் நிபுணர் சர்வான் மௌட்டன் இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
முக்கியப் பரிந்துரைகள்:
இளைஞர்களை 'டிக்டாக் பொறியிலிருந்து' காப்பாற்ற, இந்த ஆணையம் முன்வைத்துள்ள 43 பரிந்துரைகளில் சில முக்கிய அம்சங்கள்:
15 வயதுக்கு கீழ் தடை: 15 வயதுக்குட்பட்ட சிறார்கள், மெசேஜிங் செயலிகளைத் தவிர மற்ற அனைத்து சமூக வலைதளங்களையும் பயன்படுத்தத் தேசிய அளவில் தடை விதிக்க வேண்டும்.
டிஜிட்டல் ஊரடங்கு (Digital Curfew): 15 முதல் 18 வயதுடையவர்களுக்கு இரவு 10 மணி முதல் காலை 8 மணிவரை சமூக வலைதளங்களைப் பயன்படுத்த 'டிஜிட்டல் ஊரடங்கு' அமல்படுத்த வேண்டும்.
பெற்றோருக்குப் புதிய சட்டம்: சமூக வலைதளங்களின் ஆபத்துகள்குறித்துப் பெற்றோர்களுக்குப் பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், "பொறுப்பற்ற பெற்றோர்களுக்காக" 'டிஜிட்டல் அலட்சியக் குற்றம்' (délit de négligence numérique) என்ற புதிய சட்டப் பிரிவை உருவாக்க வேண்டும்.
பள்ளிகளில் கட்டுப்பாடு: பள்ளிகளில் செல்போன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த வேண்டும். குறிப்பாக, மேல்நிலைப் பள்ளிகளில் (lycées) செல்போன்களுக்குத் தடை விதிக்க வேண்டும்.
டிக்டாக் நிறுவனத்தின் மறுப்பு:
இந்தக் குழுவின் முடிவுகளுடன் தாங்கள் உடன்படவில்லையென டிக்டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது. "இந்த அறிக்கை, ஒட்டுமொத்த சமூக வலைதளத் துறைக்கும் பொதுவான பிரச்சினைகளுக்காக டிக்டாக்கை மட்டும் தவறாகக் குற்றம்சாட்டுகிறது. நாங்கள் ஏற்கனவே சிறார்களின் கணக்குகளுக்குப் பலத்த பாதுகாப்பு அம்சங்களை வைத்துள்ளோம். 60 நிமிட நேரக் கட்டுப்பாடு, 16 வயதுக்குட்பட்டோருக்கு மெசேஜிங் வசதியை முடக்குவது போன்ற 50-க்கும் மேற்பட்ட அம்சங்கள் எங்களிடம் உள்ளன," என்று டிக்டாக் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
இந்த அதிரடிப் பரிந்துரைகள் பிரான்சில் சட்டமாக மாறுமா என்பது இனிவரும் காலங்களில் தெரியவரும். ஏற்கனவே 2023-ல் சிறார்களுக்குச் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தப் பெற்றோரின் அனுமதி தேவை என்ற சட்டம் இயற்றப்பட்டும், ஐரோப்பிய ஒன்றிய சட்டச் சிக்கல்களால் அது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


