பாடல்கள் கலை வெளிப்பாடுகள் ஆயுதவாதத்தைத் தூண்டுகின்றன எனக் குற்றம் சாட்டுவது யதார்த்தத்திற்குப் புறம்பானதுமான அணுகுமுறையாகும்!
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி கருத்து!
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி கருத்து:
கலை வெளிப்பாடுகளை மட்டும் குற்றம் சாட்டுவது நடுநிலையற்ற அணுகுமுறை. யாழ்ப்பாணம்: இலங்கையில் மீண்டும் யுத்தச் சூழ்நிலை உருவாகாது என்றும், விடுதலைப்புலிகள் போன்ற ஆயுத இயக்கங்கள் மீண்டும் தோன்ற வாய்ப்பில்லை என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியளித்துள்ள நிலையில், வெறும் பாடல்கள் அல்லது கலை வெளிப்பாடுகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அவை ஆயுதவாதத்தைத் தூண்டுகின்றன எனக் குற்றம் சாட்டுவது நடுநிலையற்றதும் யதார்த்தத்திற்குப் புறம்பானதுமான அணுகுமுறையாகும் என்று கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.
கலை, இலக்கியம் மற்றும் இசை ஆகியவை மக்களின் வரலாறு, நினைவுகள், உணர்வுகள் மற்றும் வாழ்வனுபவங்களைப் பிரதிபலிக்கும் சமூக வெளிப்பாடுகளாகும் என்றும், அவற்றைக் குற்றமாகக் கருதுவதற்குப் பதிலாக அவை தோன்றுவதற்கான சமூக மற்றும் அரசியல் பின்னணிகளைப் புரிந்துகொள்வதே முறையான அணுகுமுறையாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தமிழ் மக்கள் இன்னும் பல தீர்க்கப்படாத பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், நிலப்பிரச்சினை, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், அரசியல் அதிகாரப் பகிர்வு, பொருளாதார முன்னேற்றம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு போன்ற அடிப்படை விடயங்களில் நியாயமான தீர்வுகள் கிடைக்க வேண்டியது அவசியம் என்றார்.
இந்தப் பிரச்சினைகள் முழுமையாகத் தீர்க்கப்படாத வரை மக்களின் உணர்வுகளும் நினைவுகளும் கலை வடிவில் வெளிப்படுவது இயல்பான ஒன்றே என்று விளக்கிய அவர், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் பரஸ்பர புரிதலையும் வலுப்படுத்தும் நோக்கில் தேவையற்ற சர்ச்சைகள் அல்லது ஒருதலைப்பட்சமான குற்றச்சாட்டுகளைத் தவிர்த்து, மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் கவனம் செலுத்துவதே காலத்தின் தேவை என்றும் தெரிவித்தார்.
அவ்வாறான நடவடிக்கைகளே நிலையான சமாதானத்திற்கும் தேசிய ஒற்றுமைக்கும் உறுதியான வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.


