தெற்கு ஈரானில் தாக்குதல் நடத்திய அமெரிக்க ராணுவம் !
ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்திய அமெரிக்கா!
நேற்று நள்ளிரவு (பாரிஸ் நேரம் இரவு 10:30) தெற்கு ஈரானில் உள்ள பந்தர் அப்பாஸில் (Bandar Abbas) அமெரிக்க படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.இதை ஈரானிய ஊடகங்களும் உறுதிப்படுத்தியுள்ளன. "ஈரானியப் படைகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களிலிருந்து தங்கள் படையினரைப் பாதுகாப்பதற்காக, அமெரிக்கப் படைகள் தெற்கு ஈரானில் தற்காப்புத் தாக்குதல்களை நடத்தியதாகவும் , ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் கண்ணிவெடிகளைப் பொருத்த முயன்ற ஈரானியப் படகுகள் இந்தத் தாக்குதல்களின் இலக்குகளில் அடங்கும்" என்று அமெரிக்க மத்தியக் கட்டளைகம் (CentCom) நேற்று திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதேவேளை தெற்கு ஈரானில் உள்ள ஏவுகணை தளங்கள் மீது தாக்குதல்களை நடத்திய போதிலும், ஈரானுடனான ஒப்பந்தம் இன்னும் சாத்தியமே என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். "இன்று கத்தாரில் சில விவாதங்கள் நடந்தன, எனவே எங்களால் முன்னேற்றம் காண முடியுமா என்று பார்ப்போம். ஆரம்ப ஒப்பந்த உரையின் துல்லியமான வார்த்தைகளைச் சுற்றியே விவாதங்கள் அதிகம் நடப்பதாக நான் நினைக்கிறேன், எனவே இதற்குச் சில நாட்கள் ஆகும்," என்று செவ்வாய்க்கிழமை காலை இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள ரூபியோ ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் கூறினார்.
"அதிபர் ட்ரம்ப் ஒரு ஒப்பந்தத்தை எட்ட தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் ஒரு ஒப்பந்தத்தை முடிப்பார் அல்லது எந்த ஒப்பந்தமும் இருக்காது," என்று அவர் மேலும் கூறினார். ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்தார். "நீரிணைகள் திறக்கப்பட வேண்டும். அவை எப்படியாவது திறக்கப்படும். அங்கு நடப்பது சட்டவிரோதமானது, ஒட்டுமொத்த உலகிற்கும் தாங்க முடியாதது, அது ஏற்றுக்கொள்ள முடியாதது," என்று அவர் குறிப்பிட்டார்.
- சிவா சின்னப்பொடி


