நம்மவர்கள் திரைப்பட வரலாற்றில் திருப்புமுனை "அந்தோனி"
உலகெங்கும் நமது மண்ணின் மணம் கமழும் கலைக்காற்று வீசட்டும் அது நம்மவர்களின் பல்துறை ஆற்றல்களை பேசட்டும்"
நம்மவர்கள் திரைப்பட வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்த போகும் திரைப்படம் "அந்தோனி" எதிர்வரும் மார்ச் 13 முதல் உலகின் பல பாகங்களிலும் திரையிடல்களுக்கு தயாராகி கொண்டிருக்கிறது சுவிஸ் வாழ் கலைவளரி ஓசை ரமணன் அவர்களின் பிரமாண்டமான தயாரிப்பில்,
SUKirthan Christhuraja & Jenosan Rajeswar இயக்க த்தில், இலங்கை, இந்திய, புகலிட, கலைஞர்களின் அற்புதமான நடிப்பில் இசைஞானி இளையராஜா அவர்களின் இசையில் உருவாகியிருக்கிறது "அந்தோனி"
குறிப்பாக தென்னகத்தின் உச்ச நட்சத்திரங்களான கமல், ரஜினி, விஜயகாந்த், மைக் மோகன் என்று தொடங்கி ராமராஜன், புது முகங்கள் என்று யார் படமானாலும் ராக தேவன் இளையராஜாவின் இசையில் என்று ரைற்ரில் கார்ட்டில் வந்தாலே அது வெற்றிதான்! ஆகவே நம்மவூர் பூநாகரி மொட்டைக் கறுப்பன் குத்தரிசியை விற்க தஞ்சாவூர் பொன்னி அரிசியையும்
எங்கள் கலைக்கடையில் போட்டால்தான் படைப்பின் வெற்றியுடன் வணிக வெற்றியை எட்டிப்பிடிக்க முடியும் என்பது எல்லோரும் ஏற்றுக் கொள்ள கூடியதே!
தென்னகத்து சினிமா 3 தசாப்தங்களுக்கு மேலாக புகலிட தமிழ் ரசிகர்களின் ஆதரவிலும் நின்று பிடிக்கிறது என்ற நியாயமும் எங்கள் எல்லோருக்கும் தெரிந்ததே! தென்னிந்திய பிரமாண்டமான தயாரிப்பு நிறுவனங்கள் கைவிட்ட , பல பிரமாண்ட படைப்புகள் அனைத்தையும் புகலிட நம்மவர்கள் தயாரிப்பு நிறுவனங்கள் தயாரித்து அந்த துறையை தக்க வைக்கிறார்கள் என்ற விபரத்தையும் நாங்கள் அனைவரும் அவதானிக்காமலில்லை! புகலிடத்தித்து தமிழர்கள் அங்குள்ள கலைஞர்களை பெருவிழாக்களில அழைத்து அவர்களையும் அத்துறை சார்ந்து இயங்கவைத்து புகலிட மக்களையும் மகிழ்வூட்டி வருவது தொடர்ந்து நடந்து வருவதை கலை நோக்கர்கள் கவனம் கொள்ளாமில்லை.
கலை நோக்கர்களின் கவலையெல்லாம் என்ன தெரியுமோ பிறர் பிள்ளையையும் ஊட்டி வளருங்கள் அது உங்கள் உரிமை! அதேபோன்று உங்கள் பிள்ளையையும் தூக்கி ஊட்டி வளருங்கள் என்பதுதான் அவர்கள் அன்புரிமையுடன் கேட்பது ஆகவே உங்கள் "அந்தோனி" வருகிறான் சந்திக்கி தயாராகுங்கள் எல்லோருடன் இணைந்து எங்கள் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறோம்.
இனி ... கொஞ்சம் சுவாரஸ்ய அலசல்! அந்தோனி கடற்கரை வாழ்வியல் பேசுகிறது! அதற்கு முன்! இலங்கையில் 1964 ஆண்டு தயாரான "ஆழிக்கரையின் அன்புக் காணிக்கை" என்ற திரைப்பம பண கஸ்டம் காரணமாக 10 வருடங்கள் தயாரிப்பு முழுமையடையாமல் கிடப்பில் கிடந்தது. பின்னர் 10 வருடங்களால் " மீனவப் பெண்" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு M.N.M புரொடக்சன்ஸ், "மீனவப் பெண்" என்ற பெயருடன் 1973 ம் ஆண்டு கார்த்திகை மாதம் இலங்கையில் 5 திரையரங்குகளில் திரையிடப்பட்டது. கடற்கரையோடு சேர்ந்த வாழ்வியல் பேசியது. 10 வருடங்கள் கிடப்பில் கிடந்து பின்னர் திரைக்கு வந்ததால் ரசிகர்களால் சுமாரான வரவேற்பையையே இத்திரைப்படம் பெற்றது.
"செம்மீன்" பரபரப்பான மலையாள படம்! 1965 ல் வெளிவந்த மலையாளப் படம்
"செம்மீன் " அதே பெயரில் மலையாளத்தின் மிகப் பெரிய எழுத்தாளரான தகழி சிவசங்கரன் பிள்ளை எழுதிய நாவல். அதன் உரிமையை வாங்கி அதே பெயரில் ஷீலா,மது, சத்யன், என்ற திறமையான 3 நடிகர்களை வைத்து ராமுகாரியட் இயக்கிய படம். மலையாள திரை உலகில் முதன் முறையாக சிறந்த படம் என்ற தேசிய விருதை பெற்ற படம் (K.P.L) மிகச் சிறந்த 100 இந்திய திரைப்படங்களில் செம்மீனுக்கு முக்கிய பங்குண்டு. கண்ணில் ஒற்றிக் கொள்கிற மாதிரியான மார்க்கேஸ் பார்ட்லேயின் ஒளிப்பதிவு!
மேடைகளில் தனது நேர்காணல்களில் தனக்கு பிடித்தமான மூத்த இசையமைப்பாளர்கள் பற்றி இசைஞானி இளையராஜா அவர்கள் குறிப்பிடும் இசையமைப்பாளர்களில் ஒருவரான சலீல் சௌத்ரி அவர்களின் நெஞ்சைத் தொடும் இசை, காதுக் இதமான பின்னணி இசை (கடலக்கர பூநோரி பாடல் அக்கால திரை ரசிகர்களுக்கு நினைவுக்கு வரும்.)
ஒரு சிறு தொய்வு கூட இல்லாத ரிஷிகேஷ் முகர்ஜியின் எடிட்டிங் எல்லாமே செம்மீன் படத்தை படமாக மட்டுமல்ல ஒரு பாடமாகவே ஆக்கிவிட்டது.
இதற்கு முன்னும் சரி பின்னும் சரி தென்னிந்திய படங்களின் கடல் மக்களின் கடல்சார்ந்த விரசமில்லாத ஒரு காதல் காவியம் செம்மீன் அளவு படைக்கப்பட்டிருக்குமா? என்பது கேள்விக்குறியே! என்கிறார்கள் திரைவிமர்சன திரைப்பட அவதானிகள். "செம்மீன்" கதை சுருக்கம் இது தான் கருத்தம்மா ஒரு மீனவப் பெண்.அவளது தந்தை செம்பங்குஞ்சு ஒரு பேராசை பிடித்தவன். மனைவி, மகள் வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்படாமல் பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டவன். அவர்கள் வாழும் கடல்பகுதி, மிகுந்த சட்ட திட்டங்கள் சம்பிரதாயங்கள் உள்ளது. அதிலும் அங்கு மீனவர்களது பல அசைக்க முடியாத நம்பிக்கைகள் உண்டு. அதில் முக்கியமானது பெண்களை பற்றியது. அந்த மீனவ இனத்தைச் சேர்ந்த பெண் தன் இனத்தைவிட்டு வேறு இன ஆணைத் திருமணம் செய்யக்கூடாது. கணவனுக்கு மனைவி துரோகம் செய்தால் கடலுக்கு மீன் பிடிக்க போகும் கணவனை கடல் காவு கொண்டுவிடும். இது கடல் பெண் தெய்வமான கடலம்மாவின் தண்டனை என்று நம்புகிறார்கள்.
"செம்மீன்" திரைப்படம் சிகாகோ பிலிம் விழாவிலும் பிரான்ஸ் C கேன்ஸ் திரைப்பட விழாவிலும் வெற்றிபெற்ற படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை. "வாடைக்காற்று "
1978 ஆண்டு இலங்கையின் பல பாகங்களிலும் திரையிடப்பட்டது. இலங்கையின் பிரபல எழுத்தாளர் செங்கை ஆழியான் அவர்கள் எழுதி 1973 ம் ஆண்டு விரகேசரி பிரசுரமாக வெளிவந்த நாவல். அக்காலத்தில் 5000 பிரதிகள் விற்பனையானது இந்த நாவல். இந்த நாவலையே திரைப்படமாக எடுக்க ஆர்வம் கொண்டார்கள். இது பின்னர் திரைப்படமாக எடுக்கப்பட்டது.
மலையாள செம்மீன் நாவல் எப்படி அதே பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டதோ அதேபோன்றே வாடைக்காற்று நாவலும் அதே பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டது ஒரு சிறப்பான ஒற்றுமை!
வாடைக்காற்று படத்திற்கு திரைக்கதை வசனம் யார் எழுதுவது என்று கேட்கப்பட்டது நாவலாசிரியர் செங்கை ஆழியானிடம் கேட்கப்பட்டது. இன்னொரு பிரபல எழுத்தாளரான செம்பியன் செல்வன் வாடைக்காற்று க்கான திரைப்பட வசனத்தை ஏற்கனவே எழுதி வைத்திருப்பதாக குறிப்பிட்டார் அவர். மேலும் திரைக்கதை வசனங்களை தணியாத தாகம் வானொலி நாடகத்தயாரிப்பாளர் கே.எம் வாசகரும் எழுதினார். திரைப்பட வெளியாகி பலரது பாராட்டை பெற்றது . தினகரனில் 25.04.78 திரு.தம்பி ஐயா தேவதாஸ் எழுதிய விமர்சனத்தில் நாவலின் உயிரோட்டங்களை புரிந்து கொண்டு நாவல் வாசகனும் திரைப்பட ரசிகனும் வேறு பாடு காணத அளவுக்கு திரைப்படத்தை இயக்கியுள்ளார். இயக்குநர் பிறேம்நாத் மொறைஸ் என்று பாராட்டியிருந்தார்.
27.03.78 அன்று அதன் வார வெளியீட்டு ஆசிரியர் திரு.பொன் இராஜகோபால் எழுதிய விமர்சனத்தில், வீரகேசரி பிரசுரமான வாடைக்காற்று நாவல் வாசகர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இப்பொழுது படமாகியும் வெற்றி கண்டுள்ளது. படமாக்கியவர்கள் மண்வாசனையையும் தனித்துவத்தையும் பேணமுற்பட்டதால் இப்படம் வெற்றியாய் அமைந்துள்ளது.
பொருத்தமான நடிகர் தெரிவு, யதார்த்தம் குன்றாத நெறியாள்கை, தனித்துவமான பாணி போன்றவை இப்படத்தின் வெற்றியாகும். இலங்கைத் திரைப்படங்களில் சிறந்த படங்களுக்கு ஜனாதிபதி பரிசு வழங்கப்பட்டது. 1978 ல் தமிழ்ப்படமான வாடைக்காற்று சிறந்த திரைப்படமாக தெரிவுசெய்யப்பட்டது. இப்படத்தில் பொன்னுக்கிழவன் பாத்திரத்தில் நடித்த அமரர் முகத்தார் எஸ்.ஜேசுரட்ணம் அவர்கள் சிறந்த துணை நடிகருக்கான ஜனாதிபதி விருது பெற்றார்.
இத்திரைப்படத்தில் ஜோடியாக டொக்ரர் இந்திரகுமார், ஆனந்தராணி பாலேந்திரா, இன்னொரு ஜோடியாக ஏ.ஈ.மனோகரன் ,சந்திரகலா, மற்றும் அண்ணை றைற் புகழ் K.S.பாலச்சந்திரன்,k.a.ஜவாகர்,லடீஸ்வீரமணி, பிரான்ஸிஸ் ஜனம், வசந்தா , என்று பெரும் நடிக பட்டாளமே இணைந்திருந்தனர். இப்படத்தின் இணை இயக்குநராக K.S.பாலச்சந்திரன் பணியாற்றி இருந்தார்.
இலங்கையில் தயாரான படங்களில் இசைத் தட்டுக்கள் வெளியான முதல் திரைப்படம் வாடைக்காற்று என்ற பெருமையைப் பெற்றது. இதன் பாடல்கள் படம் வெளியாவதற்கு முன்பு இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகி ரசிகர்கள் மனங்களை கவர்ந்தது . அதில் நினைவில் நிற்பது வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலேயே வாழ்க்கையொன்று எங்களுக்கு ஓரத்திலே காலையிலேயே தொழிலுக்காக செல்கின்றோம் அந்த இறைவனைத்தான் நம்பியிங்கு வாழுகின்றோம் " நெஞ்சை விட்டு அகலாத பாடல்,
படத்தின் கதைச் சுருக்கம் இது தான் வருடாவருடம் இலங்கையின் வடபகுதியில் கரையூரிலும் மன்னாரிலும் இருந்து மீனவர்கள் பருவநிலைக்கு ஏற்ப நெடுந்தீவுக்கு மீன்பிடிக் செல்வார்கள்,கடலை நம்பி வாழும் அவர்களின் வெற்றி தோல்விகள், ஆசாபாசங்கள், தொழில் முறைப் பூசல்கள், கிராமத்துப் பெண்களுடன் அவர்களுக்கு உண்டாகும் காதல், அதன் விளைவுகள் போன்றவற்றை மையமாக வைத்தே கதை பின்னப் பட்டிருந்தது. இப்படத்தை 1990 களின் முற்பகுதியில் இந்தியாவிலிருந்து இலங்கை வந்த சுபமங்களா சஞ்சிகையின் ஆசிரியரும், தண்ணீர் தண்ணீர் திரைப்படத்தின் கதாசிரியருமான அமரர் கோமல் சுவாமிநாதன் அவர்கள் வாடைக்காற்று திரைப்படத்தை பார்த்து மகிழ்ந்ததோடு ஒரு மலையாள படத்தை பார்த்தது போன்ற உணர்வை தந்ததாக புகழ்ந்துரைத்தார்.
கடல் வாழ் வாழ்வியலை வெளிப்படுத்தும் தலைப்பில் புதுமை இயக்குநர் சிறிதர் M.G.R யை ,வைத்து இயக்கிய "மீனவ நண்பன் " கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்த "கடல் மீன்கள் " பாரதிராஜாவின் "கடலோரக் கவிதைகள்" "கடல் பூக்கள்" மணிரத்தினத்தின் "கடல்" போன்ற படங்கள் வந்திருந்தாலும் மேல் குறிப்பிட்ட செம்மீன், வாடைக்காற்று, போன்ற படைப்புகள் கடல்சார்ந்த சமூகத்தின் வாழ்வியலை சொன்ன அளவுக்கு கீழே குறிப்பிட்ட படைப்புகள் உன்னதமாக சொல்லவில்லை என்ற ஆதங்கப்படும் தீவிரமான திரை ரசிகனுக்கு சிறப்பான தீனியை "அந்தோனி"வழங்கும் என்று நம்புகிறோம்.
அந்தோனி கதை என்ன ?? திரைப்பட ரசிகன் ஒரு வனின் உளவியல் பார்வையாக !!! காதல் கதையா? தற்காலத்தில் தமிழீழ கடல் தொழிலாளிகளும், தொப்புள் கொடி உறவுகளான தமிழக கடல் தொழிலாளர்களும் எதிர்கொள்ளும் சம்பவங்களா ? இப்படி பல் வகையான ஊகங்களுடன் ரசனை வேகங்களுடன் காத்திருக்கிறார்கள் கலா ரசிகர்கள்! பிரான்ஸில் 14.03.26 திரையிடல் மற்றைய நாடுகளில் 13.03.26 திரையிடல்கள் இலங்கை இந்திய இணைவாக கடந்த காலங்களில்
1) பைலட் பிரேம்நாத்
2)மோகனம் புன்னகை
3) இரத்தத்தின் இரத்தம்
4) நங்கூரம்
5) மாமியார் வீடு
6) நெஞ்சக்கு நீதி
இவைகளை தாண்டி அடிக்கட்டும் அந்தோனி அலை! உலகெங்கும் நமது மண்ணின் மணம் கமழும் கலைக்காற்று வீசட்டும் அது நம்மவர்களின் பல்துறை ஆற்றல்களை பேசட்டும்.
- கே.பி.லோகதாஸ்


