காலை விடியமுன்னே இருள் கவிழ்ந்தது! ... இனி நல்ல முடிவோடு விடியட்டும் அவர்களின் காலை.
267 மலையக மாணவர்கள் வரை தற்போது யாழ்ப்பாணத்தில் தங்கிநின்று படிக்கிறார்கள். என்ன செய்ய போகின்றோம் என்ற ஏக்கமே இருளாக படர்கிறது..

காலை விடியமுன்னே இருள் கவிழ்ந்தது…….
யாழ் கொக்குவில் பகுதியில் வீடொன்றில் தங்கியிருந்து படித்துவந்த யாழ் பல்கலைக்கழக மூன்றாம் ஆண்டு அரசியல் விஞ்ஞான மாணவன் தூக்கிட்டு மரணத்தை தழுவுக்கொண்டான்……
10ம் ஆண்டும் 12 ம் ஆண்டும் படித்துவரும் இரு பெண்பிள்ளைகளுக்கு அண்ணனான அவனது பெற்றோர் மலையகத்தில் தேயிலை தோட்ட தொழிலாளிகள்.
எத்தலையோ கனவுகளும் நம்பிக்கையும் சுமந்து இருந்த குடும்பத்தின் ஒட்டுமொத்த உணர்வும் உறைந்துபோக வைத்துள்ளது அவனது மரணம். நண்பர்களையும் யாழ் பல்கலைக்கழக சமூகத்தையும் இடிந்துபோக வைத்து நிற்கிழது அவனது இழப்பு….
காரணம் என்ன என்று தேடிய அனைவருக்கும் இதுவரை கிடைத்துள்ள பதில் ‘வறுமை’.
உறவுகளே… நாங்கள் சிந்தித்துபார்க்க முடியாத துன்பத்தில் இருக்கிறது எமது தேசம்… வெளியே தெரியாது உள்ளே கனன்றுகொண்டு இருக்கிறது கொடிய பசி. எதிர்காலத்தின்மீதும் வாழும் காலத்திலும் எந்த நம்பிக்கையும் இன்றி தடுமாறி நிற்கிறது வாழ்க்கைப்பயணம். எவரும் எதனையும் நின்று நிதானிக்க முடியாத வாழ்க்கையின் ஓட்டம். இன்றும் ஒரு மரணத்தை பரிசளித்து நிற்கிறது.
சாதாரணமாக யாழ்ப்பாணத்தில் தங்கிநின்று படிக்கும் ஒரு மாணவனது இருப்பிட வாடகை 6000 ரூபா, உணவுச்செலவு ஒருவேளை குறைந்தது 300 ரூபா என்று பார்த்தாலும் 9000 ரூபா. இதர செலவுகள் புத்தகம் கொப்பி பேனை என்று பார்த்தால் 5000 ரூபா வரை போக மொத்தமாக மாதம் 21000 ரூபா அடிப்படையாக தேவைப்படுகிறது. இந்த நிலையில் ஒழுங்கில்லாமல் அப்பப்போது கிடைக்கும் மகாபொல போன்ற உதவிகள் ரூபா 6000 போனாலும் மாதம் ஒன்றுக்கு அடிப்படையாக எப்படியும் ரூபா 15000 கட்டாயமாக தேவைப்படுகிறது.
யார் எதை எப்படி சொன்னாலும் , அரசியலில் என்ன புதுமைகள் மாற்றங்கள் வந்தாலும் மலையக மக்களின் அடிப்படை சம்பளம் என்பது மட்டும் மாற்றமடையாது தொடரும் அவலம் மாறப்போவது இல்லை, அந்த மக்களின் வலிஉணர்ந்து வளர்ந்து அரசியலில் அமைச்சராக உயர்ந்தவர்களை கூட மலையகத்தில் இருந்து தூரமாக விலத்தி கடலுக்குள் நிறுத்தி வைத்திருக்கும் அரசியலின் கண்கட்டி வித்தைகள் தனியாக பார்க்க வேண்டிய அவலம்.
மூன்று பிள்ளைகளை கற்பிக்க தாயும் தந்தையும் அட்டைக்கடிக்குள்ளும் ஆய்ந்து வரும் கொழுந்துகள் அறிந்த அவர்களது வலியை எந்த அரசியலும் , எந்த தலைமையும் .. ஏன் சகமனிதர்களாக உள்ள இலங்கைவாழ் எந்த மனிதனும் இன்றுவரை உணர் முடியாமலே உள்ளது.
இந்த அவலங்களின் வெளிப்பாடாக வாழ்வை எதிர்கொள்ள தயங்கி தற்கொலையை தீர்வாக எடுக்கும் அறிவுள்ள மாணவர்களின் செயல்கள் சொல்லும் சமுதாய சீர்கேடு மிகவும் ஆபத்தானது. அந்த மாணவனை கோழை என்றோ அறிவற்றவன் என்றோ கருத்திட்டு கடந்து செல்ல என்னால் முடியவில்லை. காரணம் அவன் மரணத்திற்கு காரணம் வறுமை என்பது உறுதியானால் அதற்கு காரணம் நாங்கள்.
மிகவும் சாந்தமானவன் , மிகவும் கெட்டிக்காரன் , மிகவும் நேர்மையானவன் , மிகவும் பாசமானவன்.. இந்த முடிவை நோக்கி சென்றிருக்கின்றான் என்னும் போது அவனது மனம் சுமந்த வலி எத்தனை கொடியது என்பதை நாங்கள் உணரவேண்டும். அந்த உணர்வின் துணையோடு இந்த அவலம் துடைக்க ஏதாவது செய்ய வேண்டும்.
அவனைப்போலவே எனக்கு தெரிந்த 267 மலையக மாணவர்கள் வரை தற்போது யாழ்ப்பாணத்தில் தங்கிநின்று படிக்கிறார்கள். என்ன செய்ய போகின்றோம் என்ற ஏக்கமே இருளாக படர்கிறது.. நிற்சயம் ஏதாவது செய்தே ஆகவேண்டும்.
இனி ஒரு மரணம் வறுமையால் ஏற்பட கூடாது.
• த.துவாரகன்.