தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் அவருடைய குடும்பத்தினரும் உயிருடன்!
சில புலம்பெயர் தமிழர்கள் தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர்!’-வேலுப்பிள்ளை மனோகரன்

சில புலம்பெயர் தமிழர்கள் தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர்!’-வேலுப்பிள்ளை மனோகரன்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் அவருடைய குடும்பத்தினரும் உயிருடன் இருப்பதாகச் சொல்லி புலம்பெயர் தமிழர்களில் ஒரு பகுதியினர் மோசடிச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக பிரபாகரனின் மூத்த சகோதரர் வேலுப்பிள்ளை மனோகரன் தெரிவித்திருக்கிறார்.
‘எனது சகோதரர் பிரபாகரனும் அவரது முழுக் குடும்ப உறுப்பினர்களும் தியாகிகளாக மரணமடைந்துவிட்டனர்.
இதை ஏற்றுக்கொள்வது சற்று கஸ்டமான விடயம்தான். என்னுடைய சகோதரரின் குடும்பம் சம்பந்தமாக இந்த மோசடிக்காரர்களின் பிரச்சாரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கின்றேன். அவர்கள் தமது சொந்த நலனுக்காக உங்கள் உணர்வுகளையும், எனது சகோதரரின் பெருமையையும் பயன்படுத்த முனைகின்றனர்’ என மோசடிக்காரர்களின் திட்டங்கள் குறித்து மனோகரன் எச்சரிக்கிறார்.
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் Jaffna Mirror சஞ்சிகைக்கு அளித்த பேட்டியில் அப்பாவி தமிழர்களிடமிருந்து பணம் பெறுவதற்காக பிரபாகரனும் அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலரும் உயிருடன் இருப்பதாக இந்த மோசடிக்காரர்கள் கூறி வருகின்றனர் என மனோகரன் தெரிவித்துள்ளார்.
‘நான் பிரபாகரனின் மூத்த சகோதரர் என்ற வகையில் இந்த அபத்தத்துக்கு முடிவு கட்டுவது எனது கடமை’ என இலங்கையில் உள்நாட்டுப் போர் ஆரம்பிப்பதற்கு முன்னரே 1975 இல் நாட்டை விட்டு வெளியேறி தற்போது டென்மார்க்கில் வாழும் மனோகரன் அந்தப் பேட்டியில் மேலும் தெரிவித்திருக்கிறார்.
போலி துவாரகா
சில மாதங்களுக்கு முன்னர் மேற்கில் வாழும் ஒரு இளம் பெண் தன்னை பிரபாகரனின் மகள் துவாரகா எனப் போலியாகச் சொல்லி புலம்பெயர் தமிழர்களிடம் மில்லியன் கணக்கில் பணத்தைச் சுருட்டியுள்ளார் எனவும் மனோகரன் குறிப்பிடுகிறார். மேலும் அவர்,
‘பிரபாகரனின் மூத்த சகோதரன் என்ற வகையில் பிரபாகரனுக்கும் அவரது குடும்பத்துக்கும் என்ன நடந்தது என்ற உண்மையைத் தெரிவிக்கும் கடமை எனக்கு இருக்கிறது.
நாங்கள் உண்மையைப் பேசாது விட்டால் இந்தப் போலித்தனமான சுயநலமிகளின் பிரச்சாரம் மேலோங்கி மக்கள் அதை நம்பத் தொடங்கி விடுவார்கள்’ எனவும் தெரிவித்துள்ளார்.
2008 வரை தான் அடிக்கடி பிரபாகரனுடன் தொலைபேசியில் உரையாடி வந்ததாகத் தெரிவித்துள்ள மனோகரன், இறுதியாக 2009 மே மாதத்தில் பிரபாகரன் கொல்லப்படுவதற்கு இரண்டு மாதங்கள் முன்னதாக உரையாடியதாகவும் மனோகரன் அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அப்பொழுது பிரபாகரன், ‘நிலைமை கையை மீறிவிட்டது என்று சொன்ன பிரபாகரன், அதன் பின்னர் தன்னுடன் உள்ள பெற்றோரைப் பார்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார்’ எனவும் மனோகரன் கூறியுள்ளார்.
பிரபாகரன் எப்போதாவது புலிகளின் போர் முடிவுக்கு வந்துவிட்டது என்பதை ஏற்றுக் கொண்டாரா என்ற கேள்விக்குப் பதிலளித்த மனோகரன், ‘இல்லை, அவ்வாறு சொல்லவில்லை. பிரச்சினைகள் தலைக்கு மேலே போய்விட்டது என்பதை ஏற்றுக்கொண்ட பிரபாகரன், தாம் போராட்டத்தைத் தொடர்வோம் என்றுதான் கூறினார்’ எனவும் தெரிவித்துள்ளார்.
மேற்கில் வாழும் சில தமிழர்களும், நன்கு பிரபல்யமான இரண்டு புலம்பெயர் தமிழர் அமைப்புகளும் பணம் பெறுவதற்காக பிரபாகரனின் குடும்பம் பற்றி எண்ணற்ற பொய்களைக் கூறி வந்ததாக மனோகரன் குற்றம் சாட்டுகிறார்.
‘இந்த நபர்களும் அமைப்புகளும் தமது ஏமாற்று வேலைகளை அரங்கேற்றுவதற்காக ஒரு வலைப்பின்னலை உருவாக்கி வைத்திருந்தனர்.
அவர்கள் புலம்பெயர் தமிழர்களின் உணர்வுகளைப் பயன்படுத்தி அவர்களிடமிருந்து பணம் பெறுவதற்காக பிரபாகரனின் மகள் துவாரகா உயிரோடு இருப்பதாக போலியாகச் சொல்லி வந்தனர்.
இதன் மூலம் பிரபாகரனின் குடும்பத்துக்கும், தமிழர்களின் இலட்சியத்துக்கும் உதவுவதாக மக்களை நம்ப வைத்து அவர்களிடமிருந்து பெரும்தொகை பணத்தை வசூலித்து வந்தனர்.
இது சுலபமாகத் திரட்டிய பணம். துவாரகா உயிருடன் இருப்பதாகச் சொன்னதன் மூலம், கடினமான வேலைகள் செய்தோ அல்லது வேறு வழிகளில் உழைத்தோ பெற முடியாத பெரும் தொகையான மில்லியன் கணக்கான டொலர்களை அவர்கள் திரட்டிக் கொண்டனர்’ என மனோகரன் சொல்கின்றார்.
இந்த மோசடிப் பேர்வழிகளில் சிறீதரன் என்ற ஒருவர் பற்றிக் குறிப்பிடும் மனோகரன், 2004 இல் இலங்கையில் இருந்து வந்தவர் என்று சொல்லி, அவருக்கு உதவி தேவை என ஒருவரை அவர் அழைத்து வந்ததாக குறிப்பிடும் மனோகரன்,
‘அவருக்கு நான் 25,000 குரோனர் (Kronor) பணம் கொடுத்தேன். பின்னர் தெரிய வந்தது அவர் தமிழ் ஈழத்தில் இருந்து வரவில்லை, இத்தாலியில் இருந்து வந்தவரென்று. நான் இதுபற்றி எனது தம்பி பிரபாகரனுக்கும் தெரியப்படுத்தினேன்’ என்கிறார்.
போர் முடிவுக்கு வந்து, தமது பெற்றோர் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்ற பின்னர் அவர்களுடனான தொடர்புகளை தான் இழந்து விட்டதாக மனோகரன் கூறுகின்றார்.
‘நாங்கள் சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை அது சம்பந்தமான உதவிக்காக அணுகினோம். ஆனால் அவர்கள் எமக்கு உதவ முன்வரவில்லை.
சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் எமது பெற்றோருடன் தொடர்பு ஏற்படுத்தித் தருவதற்கு மறைமுகமாக பணம் கேட்டனர். அவர்கள் இப்பொழுதும் அங்கே நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்றனர்’ என மனோகரன் கூறுகின்றார். அவர்கள் யாரென்பதைக் கூற மனோகரன் மறுத்துவிட்டார்.
மேலும் அவர் கூறுகையில்,
‘யாராவது பிரபாகரனை கௌரவிக்க விரும்பினால், இலங்கையில் வாழும் எமது மக்களுக்கு உதவுவதில் கவனம் செலுத்துங்கள்.
போரினால் பாதிக்கப்பட்ட பல தமிழர்கள் வறுமையால் பாதிக்கப்பட்டு உள்ளதுடன், தமது அன்றாட வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதற்குச் சிரமப்படுகிறார்கள். போரினால் பாதிக்கப்பட்ட இந்த மக்களின் வாழ்க்கையை மீளவும் கட்டியெழுப்புவதற்கு உங்கள் வளங்களையும் முயற்சிகளையும் பயன்படுத்துங்கள். இதைத் தமிழ் சமூகத்துக்குச் செய்வதன் மூலமே எனது சகோதரனின் இலட்சியத்தைப் பாதுகாக்க முடியும்’ எனவும் மனோகரன் தெரிவித்துள்ளார்.
(கொழும்பிலிருந்து வெளியாகும் ‘டெயிலி மிரர்’ (Daily Mirror) பத்திரிகையில் வந்த செய்தியின் சாராம்சம்)