"மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கவே திருப்பரங்குன்றம் விவகாரம்" - பெ.சண்முகம் குற்றச்சாட்டு!
,
மக்கள் மத்தியில் ஒற்றுமையை சீர்குலைக்கவே திருப்பரங்குன்றம் கோயில் விவகாரத்தை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கையிலெடுத்திருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதாகக் கூறி தமிழ்நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
2025-26-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை கடந்த 1-ம் தேதி மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பீகாருக்கு அளிக்கப்பட்ட கூடுதல் முக்கியத்துவம் மற்ற மாநிலங்களுக்கு வழங்கப்படவில்லை. பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற வார்த்தை கூட இடம்பெறவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். அதே போல், இது மத்திய பட்ஜெட் அல்ல... பீகார் பட்ஜெட் என்று தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்திருந்தார். இதே போல், தமிழ்நாட்டைச் சேர்ந்த பெரும்பாலான அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன.
இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஏழை மக்களுக்கு எதிரான நிதிநிலை அறிக்கையை கண்டித்து இன்று தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
நாடாளுமன்றத்திலும் எங்களது எம்பிக்கள் தமிழ்நாட்டிற்கும், கேரளாவிற்கும் உரிய நிதியை ஒதுக்க வலியுறுத்தி நிச்சயம் குரல் கொடுப்பார்கள்.
தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகமும் இந்த பட்ஜெட்டை எதிர்த்து போராட்டத்தை அறிவித்துள்ளது. நிதிநிலை அறிக்கையில் மாற்றங்கள் செய்யவில்லை என்றால் போராட்டங்கள் தொடரும்.
திருப்பரங்குன்றம் விவகாரம் : மக்களின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார்கள். இதனை தடுக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பரங்குன்றம் மலையில் முருகனும் இருக்கிறான், தர்ஹாவும் உள்ளது. இஸ்லாமியர்களும் இந்துக்களும் பல நூறு ஆண்டுகள் ஒற்றுமையாக அவரவர்கள் வழிபாட்டை செய்து வந்திருக்கிறார்கள். மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்க வேண்டும் என்ற திட்டத்தோடு தான் பிஜேபியும் ஆர்எஸ்எஸும் செயல்பட்டு வருகின்றன.
மதச்சார்பற்ற கட்சிகள் இதில் ஒருமித்து உள்ளார்கள். அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட் என அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து தீர்வு காண வேண்டும். எக்காரணம் கொண்டும் கலவரம் ஏற்படாமல் இருக்க வேண்டும்.
இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேசினார்.