முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு பிடிவாரண்ட்..! சிறுமி பாலியல் வழக்கில் அதிரடி..!!
எடியூரப்பா மீது பலாத்கார புகார் கொடுத்த சிறுமியின் தாய் திடீரென உயிரிழந்தார்.
போக்சோ சட்டத்தின் கீழ், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு பதிவு.
சிறுமி பாலியல் வழக்கில் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு ஜாமினில் வெளியே வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது பெங்களூர் சதாசிவநகர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. தம்மிடம் உதவி கேட்டு வந்த 17 வயது சிறுமியை எடியூரப்பா பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்த நிலையில், இந்த வழக்கை கர்நாடகா மாநில சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே எடியூரப்பா மீது பலாத்கார புகார் கொடுத்த சிறுமியின் தாய் திடீரென உயிரிழந்தார். நுரையீரல் புற்று நோய் காரணமாக அவர் இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. தம் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்யக் கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் எடியூரப்பா மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தம் மீது பொய்யான புகார் அளித்துள்ளதாகவும், இந்த பொய் வழக்கை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
ஆனால் போக்சோ வழக்கின் கீழ் எடியூரப்பாவை கைது செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரர் திடீரென கர்நடகா உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த இரு மனுக்களும் விரைவில் விசாரணைக்கு வர இருக்கும் நிலையில் எடியூரப்பாவை விசாரணைக்கு ஆஜராக சிறப்பு புலனாய்வு குழு சம்மன் அனுப்பி இருந்தது.
ஆனால் தாம் ஜூன் 17-ந் தேதிதான் விசாரணைக்கு வர முடியும் என எடியூரப்பா பதில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சிறுமி பாலியல் வழக்கில் எடியூரப்பாவுக்கு ஜாமினில் வெளியே வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து பெங்களூர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த கர்நாடகா உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா, தேவைப்பட்டால் போக்சோ சட்டத்தின் கீழ் எடியூரப்பா கைது செய்யப்படுவார் என தெரிவித்துள்ளார். இதனால் கர்நாடகா அரசியலில் தொடர்ந்து பரபரப்பு நிலவுகிறது.