வளத்தாமலைப் பகுதியில் பிக்கு அடாவடித்தகமாக கையகப்படுத்திய காணிகளை அளவிடும் நடவடிக்கை.
.
திரியாய் வளத்தாமலைப் பகுதியில் பௌத்த பிக்குவின் காணிகளை அளவிடும் நடவடிக்கை நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.
குறித்த பகுதியில் மக்களுடைய உறுதிக் காணிகளை பௌத்த பிக்கு அடாவடித்தகமாக கையகப்படுத்தி விவசாயம் மேற்கொண்டுவருவதாக செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து கிழக்கு மாகாண ஆளுநரின் ஆலோசனைக்கு அமைய அது தொடர்பான விசாரணை குச்சவெளி பிரதேச செயலகத்தில் செயலாளரின் தலைமையில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் வளத்தாமலைப்பகுதியில் உள்ள பௌத்த விகாரைக்காக ஒதுக்கப்பட்டுள்ள 50 ஏக்கர் மற்றும் அரிசிமலை விகாராதிபதியின் தனியார் உறுதிக் காணி என கூறப்படும் 18 ஏக்கர் காணிகளை அளந்து பௌத்த பிக்குவிற்கு கையளித்து ஏனையவற்றை மக்களுடைய விவசாய நடவடிக்கு வழங்குவதாக எட்டப்பட்ட முடிவுக்கு அமைய குறித்த அளவீடு நடவடிக்கைகள் நேற்று புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது குறித்த பகுதியில் சப்தநாக பப்பத வன செனசுன நம்பிக்கைப் பொறுப்பாளர் சபைக்கு 2020.05.26ஆம் திகதியில் இருந்து 30 வருடகால குத்தகையின் அடிப்படையில் காணி ஆணையாளர் நாயகத்தின் 4/10/62767 இலக்கம் கொண்டதும், மாகாண காணி ஆணையாளரின் EP/28/LB/LES/Pooja grant அடிப்படையில் 2020.10.02 வெளியான வர்த்தமானி அறிவித்தலின் மூலம் 20.2342 ஹெக்டேயர் காணி வழங்கப்பட்டிருந்த காணியையும், அப்பகுதியில் அரிசிமலை விகாராதிபதி பானாமூரே திலகவன்ச நாயக்க தேரருக்கு இருப்பதாகக்கூறும் தனியார் உறுதிக்காணி 18 ஏக்கர் காணியையும் அளவிடும் நடவடிக்கைகள் இடம்பெற்றன.