பிரான்ஸ்: நகர மன்றங்கள் (Mairie) வழங்கும் உங்களுக்குத் தெரியாத 10 பயனுள்ள சேவைகள்!
தனிமையைப் போக்கும் சிறப்பு ஏற்பாடுகள்,60 வயதுக்கு மேற்பட்டோருக்கான சிறப்பு வழிகாட்டுதல்.
நகர மன்றங்கள் என்றாலே வெறும் நிர்வாகப் பணிகளுக்கான இடம்தான் என்ற எண்ணம் பலருக்கும் உள்ளது. ஆனால், அதையும் தாண்டி மக்களின் அன்றாட வாழ்க்கையை எளிதாக்கவும், பணத்தை மிச்சப்படுத்தவும் பல அறியப்படாத சேவைகளை அவை வழங்கி வருகின்றன. அவை என்னென்ன என்பதை விரிவாகப் பார்ப்போம்.
1. உள்ளூர் மருத்துவக் காப்பீடு (Mutuelle): ஓய்வூதியதாரர்கள் மற்றும் சுயதொழில் செய்வோருக்கு தனியார் காப்பீட்டுக் கட்டணங்கள் பெரும் சுமையாக இருக்கும். இதைக் கருத்தில் கொண்டு, நாந்தெர் (Nanterre) போன்ற பல நகர மன்றங்கள் மிகக் குறைந்த கட்டணத்தில் உள்ளூர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களை வழங்குகின்றன. சில இடங்களில் வயது வரம்பின்றியும், மருத்துவப் பரிசோதனைகள் (Questionnaire de santé) இன்றியும்கூட இவை வழங்கப்படுகின்றன. மருத்துவமனை, கண் மற்றும் பல் சிகிச்சைகள் இதில் அடங்கும். பிரான்ஸ் காப்பீட்டு அமைப்பின்படி, தனிநபர் காப்பீட்டை விட இதில் 10 முதல் 15 சதவீதம் வரை பணத்தை மிச்சப்படுத்தலாம்.
2. குறைந்த கட்டணத்தில் வீடு மற்றும் வாகனக் காப்பீடு: மாந்த்ரெய் (Montreuil) உள்ளிட்ட சில நகரங்கள் மக்களை ஒன்றிணைத்து, காப்பீட்டு நிறுவனங்களிடம் கூட்டாகப் பேசி மிகக் குறைந்த கட்டணத்தில் வீடு மற்றும் வாகனக் காப்பீடுகளைப் பெற்றுத் தருகின்றன. நகரங்களுக்கு ஏற்ப நிபந்தனைகள் மாறும் என்பதால், சலுகைகளை ஒருமுறை சரிபார்த்துக்கொள்வது அவசியம்.
3. 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான சிறப்பு வழிகாட்டுதல்: பெரும்பாலான நகர மன்றங்களில் 60 வயதைக் கடந்தவர்களுக்கென 'க்ளிக்' (CLIC) எனப்படும் சிறப்புத் தகவல் மையங்கள் உள்ளன. முதியோருக்கான தன்னாட்சி உதவித்தொகை (Apa), மற்றும் முதியோர் உதவித்தொகை (Aspa) பெறுவதற்கான வழிமுறைகளை வல்லுநர்கள் இங்கு விளக்குவார்கள். முதியோர்களின் வீட்டு வேலைகளுக்கான ஆட்களை ஏற்பாடு செய்வது, கணினிப் பயிற்சி மற்றும் ஞாபகமறதியைத் தடுக்கும் பயிற்சிகள் ஆகியவையும் இங்கு உண்டு.
4. நெருக்கடி காலங்களில் உதவும் சமூக நல மையம் (CCAS): திடீர் பணக்கஷ்டம் ஏற்பட்டால், நகர மன்றத்தின் சமூக நல மையம் மூலம் உணவுப் பொருட்கள், அவசர நிதியுதவி மற்றும் உளவியல் ரீதியான ஆலோசனைகளைப் பெறலாம். உதாரணமாக, சலான்ஸ் (Challans) நகரில் உள்ளதைப் போலப் பல நகரங்களில் உளவியலாளர்களை இலவசமாகச் சந்தித்து ஆலோசனை பெறும் வசதி வழங்கப்படுகிறது.
5. தனிமையைப் போக்கும் சிறப்பு ஏற்பாடுகள்: தனியாக வாழ்பவர்கள் 'பாதிக்கப்படக்கூடிய நபர்கள்' (Personnes vulnérables) பட்டியலில் தங்களைப் பதிவு செய்துகொள்ளலாம். பாரிஸ் (Paris) நகரில் இந்த வசதி பரவலாக உள்ளது. கடும் வெயில் காலங்களில் அல்லது பேரிடர் நேரங்களில் நகர மன்றமே இவர்களைத் தொடர்ந்து தொடர்புகொண்டு நலம் விசாரிக்கும். முதியவர்கள் கீழே விழுவதைத் தடுக்க, 24 மணி நேரமும் செயல்படும் அவசர உதவி மையத்துடன் இணைக்கப்பட்ட கைக் கடிகாரம் அல்லது வளையல் கருவிகளை (Télé-assistance) நகர மன்றத்தின் நிதியுதவியுடன் பெறலாம்.
6. நோயாளிகளைக் கவனிப்போருக்கான ஆதரவு: தன்னாட்சியை இழந்த தங்கள் உறவினர்களைத் தொடர்ந்து பராமரிப்பவர்கள் சற்று ஆசுவாசப்படுத்திக்கொள்ளவும், தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளவும் 'கவனிப்போர் தேநீர் சந்திப்புகள்' (Cafés des aidants) நடத்தப்படுகின்றன. இவர்களுக்குச் சிறப்புப் பயிற்சிகள் அளிப்பதோடு, இவர்கள் சற்று ஓய்வெடுக்க நோயாளிகளைச் சிறிது நேரம் காப்பகங்களில் தங்கவைக்கும் வசதிகளும் நகர மன்றங்களால் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
7. இலவச அல்லது குறைந்த கட்டணத்தில் விளையாட்டும் பொழுதுபோக்கும்: குறைந்த செலவில் உடற்பயிற்சி செய்ய விரும்பினால், நகர மன்றங்கள் வழங்கும் இலவச அல்லது சலுகை விலை உடற்பயிற்சி வகுப்புகளில் சேரலாம். துலூஸ் (Toulouse) போன்ற நகரங்களில் முதியோர் மன்றங்கள் மூலம் பல இலவசப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. ஓவியம், இசை, தோட்டக்கலை, தையல் மற்றும் கைவினைப் பொருட்களுக்கான வகுப்புகள் மிகக் குறைந்த கட்டணத்தில் இங்கு வழங்கப்படுகின்றன.
8. சுற்றுச்சூழல் சார்ந்த வாழ்க்கை முறைக்கான உதவிகள்: சுற்றுச்சூழல் சார்ந்த பொருட்களை விலைகொடுத்து வாங்கும் முன் நகர மன்றத்தை அணுகுவது சிறந்தது. வெர்சாய் (Versailles) நகரில் உள்ளதைப் போல, பல நகர மன்றங்களில் இயற்கை உரத் தொட்டிகள் (Composteurs) இலவசமாகவே வழங்கப்படுகின்றன. இது தவிரத் தண்ணீரைச் சிக்கனப்படுத்தும் கருவிகள், மின்சாரத்தைச் சேமிக்கும் உபகரணங்கள் போன்றவையும் கிடைக்க வாய்ப்புள்ளது.
9. இலவசச் சட்ட ஆலோசனைகள்: அண்டை வீட்டாருடன் சிறு பிரச்னையா? சொத்துப் பிரிப்பதில் அல்லது குடும்பத்தில் சிக்கலா? நாந்த் (Nantes) போன்ற பல நகரங்களில் உள்ள சட்ட உதவி மையங்களில் (Points d'accès au droit), வழக்கறிஞர்கள், பத்திரப் பதிவாளர்கள் (Notaires) அல்லது சமரசப் பேச்சாளர்களை இலவசமாகச் சந்தித்து உங்களுக்கான ஆலோசனைகளைப் பெறலாம்.
10. இலவசமாகப் பொருட்களை இரவல் பெறும் வசதி: எந்தச் செலவுமின்றி உபகரணங்களை இரவல் வழங்கும் சேவையும் உள்ளது. உதாரணமாக, ரூயேல்-மால்மேசன் (Rueil-Malmaison) நகரத்து நூலகங்களில் நீங்கள் விலையுயர்ந்த இசைக் கருவிகளை இலவசமாக இரவல் வாங்கிக்கொள்ளலாம். அதேபோல, பல நகர மன்றங்களில் விளையாட்டு உபகரணங்களையும் இலவசமாக இரவல் பெறலாம்.
- சிவா சின்னப்பொடி


