தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், நாங்கள் சிங்கள தலைவருடன் பேசுவது உகந்ததல்ல; த. வி. கூ. தலைவர் அருண் தம்பிமுத்து
.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆதரவு வழங்குமாறு முன்னிலையில் இருக்கும் நான்கு வேட்பாளர்கள் என்னுடன் தொடர்பு கொண்டார்கள். தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிலைப்பாடானது பேரம் பேசி, ஒப்பந்தங்களை மேற்கொண்டு அதன் மூலமாக தமிழர்களுக்கு ஒரு தீர்வை நோக்கி செல்ல முடியாது என்பது எனது கருத்து. அது மட்டுமல்ல ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்திய இந்த நேரத்திலே நாங்கள் போய் ஒரு சிங்கள தலைவருடன் பேசுவது உகந்ததல்ல என்பதும் எனது நிலைப்பாடு. என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அருண் தம்பிமுத்து தெரிவித்தார்
மட்டக்களப்பில் செய்வாய்கிழமை (27) இரவு இடம் பெற்ற ஊடக சந்திப்பிள் போது அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை தன்னாட்சி, ஒரு நாடு இருதேசம் எனும் விடயங்களில் எனக்கு எந்தவித முரண்பாடும் கிடையாது.
ஆனால் தேர்தல் பகிஷ்கரிப்பு என்ற விடயத்தை நான் ஏற்றுக் கொள்ளவில்லை எமது மக்களின் நிலையை உணர்ந்து, பகிஷ்கரிப்பதன் மூலமாக எமது அரசியலை முன்னெடுக்கலாம் என்பது எனக்கு தெரியாது. ஜனநாயக மரபுகளை நாம் உணர வேண்டும்.
ஈழத் தமிழர்கள் எமது நிலைப்பாட்டை தெழிவாக எடுக்க வேண்டிய காலமாக இருக்கிறது. இருந்தாலும் கூட இந்த ஜனாதிபதித் தேர்தல் தமிழர்களின் ஒற்றுமைக்கு ஒரு ஆரம்ப புள்ளியாகத் தான் நான் பார்க்கின்றேன்.
தெட்டத் தெழிவாக தமிழர்கள் வட்டுக் கோட்டை தீர்மானத்திற்கு கொடுத்த ஆணையின் அடிப்படையில் தெழிவாக கூறி விட்டார்கள் எமது நிலைப்பாடு என்னவென்று. ஆனால் இன்று நாங்கள்
மூன்று சிங்கள தலைவர்கள் தற்போது மிக நெருக்கமான போட்டியில் இருக்கின்றார்கள். யார் வந்தாலும் ஈழத் தமிழர்களுக்கான அரசியலை நோக்கி நாம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கத்தான் வேண்டும்.
தற்போது தமிழர்கள் இந்த ஏட்டிக்கும் போட்டியான நிலையில் இவரைத் தான் ஆதரிக்கப் போகின்றோம் அவரைத்தான் ஆதரிக்கப் போகின்றோம் என்று பின்புறத்தில் பல ஒப்பந்தங்களை மேற்கொண்டு விட்டு அந்த ஒப்பந்தங்கள் அமுல்படுத்தப்படாத நிலைக்கு நாங்கள் செல்ல வேண்டியதில்லை.
கடந்த மூன்று ஜனாதிபதி தேர்தல்களிலே தமிழ் மக்கள் சிங்கள கட்சிகளின் தலைவர்களுக்கு வாக்களித்து அதன் மூலமாக தமிழ் மக்களின் தேசிய பிரச்சனைக்கோ அல்லது போர்குற்றங்கள் மனித உரிமைகள் மீதில் போன்றவற்றுக்கு எதிராக எந்த தீர்வையும் காணவில்லை. எனவே தமிழர்கள் ஒற்றுமையாக ஒருமித்த குரலில் ஒரு தீர்வை நோக்கி செல்ல வேண்டும். அதற்கான சந்தர்ப்பமாக இந்த ஜனாதிபதி தேர்தலை பயன்படுத்திக் கொள்ளலாம். எனவும் அவர் குறிப்பிட்டார்.