தன்னிச்சையான முடிவுகளால் அவர்களின் உயிரையும் கண்ணியத்தையும் சமரசம் செய்ய முடியாது.கரோலின் ஜோன்சன், சுவீடன்.
முன்னாள் ஜனாதிபதி கொலையாளிக்கு மன்னிப்பை வழங்கியது மிகப்பெரும் துரோகம்.
ரோயல் பார்க் கொலையாளியை உடனடியாக கண்டுபிடித்து சிறையில் அடைக்கவேண்டும்.
ரோயல் பார்க் கொலையாளிக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை இரத்துச்செய்யும் நீதிமன்றத்தின் உத்தரவை இலங்கையில் பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களிற்குமான குறிப்பிடத்தக்க தீர்ப்பு என கொலை செய்யப்பட்ட சுவீடன் யுவதி இவோன் ஜோன்சனின் குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவான்ஜோன்சனின் குடும்பத்தவர்கள் சார்பில் அவரது சகோதரி கரோலின் ஜோன்சன் விடுத்துள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில்பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களுக்கும் இது ஒரு குறிப்பிடத்தக்க தீர்ப்பு என குறிப்பிட்டுள்ள அவர் தன்னிச்சையான முடிவுகளால் அவர்களின் உயிரையும் கண்ணியத்தையும் சமரசம் செய்ய முடியாது என்பதை இந்த தீர்ப்பு உறுதிப்படுத்துகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
இவான் ஜோன்சனின் கொலையாளிக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய பொதுமன்னிப்பு தன்னிச்சையானது சட்டத்தின்கீழ் செல்லுபடியற்றது என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆழ்ந்த நிம்மதியையும் நீதியையும் தருகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவானின் துயரமான மற்றும் கொடுரமான இழப்பு எங்களின் இதயங்களில் நிரப்ப முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது இது எங்களிற்கு மிகப்பெரிய தொடரும் வலியை ஏற்படுத்தியது என குறிப்பிட்டுள்ள கொலை செய்யப்பட்ட பெண்ணின் சகோதரி முன்னாள் ஜனாதிபதி கொலையாளிக்கு மன்னிப்பை வழங்கியது மிகப்பெரும் துரோகமிழைக்கப்பட்டுள்ளது போன்ற உணர்வை ஏற்படுத்தி எங்களின் வேதனையை மேலும் அதிகரித்தது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த தீர்ப்பு நீதிமற்றும் பொறுப்புக்கூறலின் முக்கியத்துவத்தைமீள வலியுறுத்தியுள்ளதுடன் பொதுமன்னிப்பு போன்ற தீர்மானங்களை ஒரு தனிநபர் தனது விருப்பங்களிற்கு ஏற்ப எடுக்க முடியாது என்பதை வலியுறுத்தியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் அயராது உழைத்து இந்த விவகாரம் முழுவதும் நேர்மையைக் கடைப்பிடித்த நீதித்துறைக்கு நாங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்என அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் கொலையாளியை விரைவாக கண்டுபிடித்து சிறையில் அடைக்க வேண்டியது அவசியம். ; நீதி உண்மையாக வழங்கப்படுவதை உறுதி செய்வதில் இது முக்கியமானது.என அவர் தெரிவித்துள்ளார்.
ஒப்படைப்பு ஒப்பந்தங்களில் உள்ள பலவீனங்களை பயன்படுத்தி நீதியைப் பின்தொடர்வதைத் தடுக்க அனுமதிக்க முடியாது. கொலையாளி எங்கு மறைந்திருந்தாலும் அவர் அவரது செயலுக்காக பொறுப்புகூறலுக்கு உட்படுத்தப்படவேண்டும் -இதில் எந்த பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை.என அவர் தெரிவித்துள்ளார்.