திருடப்பட்ட கிழக்கு தமிழர் கூட்டமைப்பு! கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் பங்காளித் தலைவர்களாகவுள்ள பிள்ளையான், கருணா, சதாசிவம் வியாழேந்திரன்! கூட்டு குற்றவாளிகள்.
கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் உண்மையான தலைவர், தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்.

மே மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் இம்முறை பல வரலாற்றுப் பதிவுகளும் இடம்பெறவுள்ளன.அதாவது, உள்ளூராட்சி சபைகளுக்கு அதிகளவான அரசியல் கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள் போட்டியிடும் தேர்தல்,அதிகளவான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்ட தேர்தலாகும்.
நாட்டிலுள்ள 341 உள்ளூராட்சி சபைகளில் 339 உள்ளூராட்சி சபைகளுக்கு இத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 8,300க்கு மேற்பட்ட ஆசனங்களுக்காக 80,000 க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் பல்வேறு அரசியல் கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள் சார்பில் களமிறங்குகின்றனர்.
இதில், சில கூட்டணிகள் வெற்றிகரமாக அமைக்கப்பட்டபோதிலும், பல கூட்டணிகளின் பேச்சுக்கள் தோல்வியடைந்து கூட்டணி முறிவுகளும் இடம்பெற்றுள்ளன. இதில் பிரதான சில தமிழ்த் தேசிய கட்சிகள் தேர்தல் முடிவடைந்த பின்னர் உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்கத் தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால், அப்போது ஏனைய தமிழ்த் தேசிய கட்சிகளுடன் இணைந்த ஆட்சியமைப்பது தொடர்பில் பேசலாம் என்ற திட்டத்துடனும் உள்ளன.
இவ்வாறாக வடக்கு,கிழக்கு மாகாணங்களிலுள்ள உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்ற அமைக்கப்பட்ட கூட்டணிகளில் கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ என்ற கூட்டணி விசித்திர கூட்டமைப்பாக அமைந்துள்ளது.
கிழக்கு மாகாணத்தில் தமிழர் பிரதேசங்களிலுள்ள உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ என்ற கூட்டணியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும்
சிவநேசதுரை சந்திரகாந்தன் (தற்போது சிறையில்) தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, கருணா அம்மான் என அழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (ஆட்கடத்தல்கள், படுகொலைகள் குற்றச்சாட்டுக்களினால் பிரிட்டன் அரசால் தடை விதிக்கப்பட்டவர்) தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி மற்றும் அமல் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் (தற்போது சிறையில்) தலைமையிலான முற்போக்கு தமிழர் கழகம் ஆகிய மூன்று கட்சிகள் உள்ளன.
கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் பங்காளித் தலைவர்களாகவுள்ள பிள்ளையான், கருணா அம்மான் அடுத்தவரான சதாசிவம் வியாழேந்திரன் ஆகிய இந்த மூவரின் மீதும் தமது தலைமைகளை காட்டிக் கொடுத்தல், தமிழ் மக்களுக்குத் துரோகம் செய்தல், குற்றச்சாட்டுக்களை விடவும் படுகொலைகள் ஆட்கடத்தல்கள், பாலியல் துஷ்பிரயோகங்கள், கப்பம் கோரல்கள், மணல் கடத்தல்கள், காணி பிடிப்புக்கள், இலஞ்சம் கோரல், ஊழல் மோசடிகள் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
இதில் பிள்ளையான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜ் ஆகியோரின் படுகொலைகள் தொடர்பாக 2015 அக்டோபர் 14ஆம் திகதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிள்ளையான் சிறையில் இருந்தவாறே 2020 பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்குத் தெரிவானார். இதனையடுத்து, 2020 நவம்பர் 24 அன்று பிணையில் விடுவிக்கப்பட்ட அவர் கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராகப் பதவியேற்றார்.
இந்நிலையில், பிள்ளையான் மீது உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் குற்றச்சாட்டுக்களும் உள்ளன. உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பாக பிள்ளையான் வாக்குமூலங்களையும் அளித்துள்ளார். இத்தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நேர்மையாக நடைபெறுமாகவிருந்தால் பிள்ளையான் மீண்டும் சிறை செல்ல நேரிடும் என்று கூறப்படுகின்றது.
இதற்கிடையில் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்படு காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கடந்த செவ்வாய்க்கிழமை (08) இரவு பிள்ளையான் கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினரால் மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்..
அடுத்தவரான கருணா அம்மான், விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து 2004இல் வெளியேறி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் புதிய அமைப்பை உருவாக்கி அதன் தலைவராகத் தன்னை அறிவித்துக் கொண்டார். அரசின் ஒட்டுக்குழுவானார். இதற்கிடையில் கருணா அணியிலிருந்து பிரிந்து சென்ற பிள்ளையான் அணியினர், மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் அலுவலகங்களைக் கைப்பற்றியதை அடுத்து, 2007 அரசினால் போலிக் கடவுச்சீட்டு வழங்கப்பட்டு, ரகசியமாக லண்டனுக்குச் சென்ற கருணா அம்மான், போலி கடவுச்சீட்டு வைத்திருந்ததாக அங்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.
இந்நிலையில், அரசியலில் நுழைந்த அவர், 2008 அக்டோபர் 7ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல் மூலம் இலங்கை பாராளுமன்றத்தின் எம்.பியாக பதவியேற்றுக் கொண்டார். அதே ஆண்டு தேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டார். பின்னர், மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து, உப தலைவராக பதவியேற்றுக் கொண்டார். இவர், 2010 பாராளுமன்றத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் தேசியப் பட்டியல் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.
பின்னர், மக்கள் செல்வாக்கை இழந்த இவர், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற கட்சியை ஆரம்பித்தபோதும் அரசியலில் ஒதுங்கியே இருந்தார். இவர் மீது பல்வேறு படுகொலைகள், ஆட்கடத்தல்கள், கப்பம் கோரல்கள் உள்ளிட்ட குற்றச் சாட்டுகள் உள்ளன. இவ்வாறான நிலையில்தான் இலங்கையில் கடுமையான மனித உரிமை மீறல்களுக்குக் காரணமாகக் கருதப்பட்ட இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட, இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜகத் ஜெயசூரியா, ஆகியோருடன் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகிய கருணா அம்மானுக்கும் பிரிட்டன் அரசு அண்மையில் தடை விதித்தது.
அடுத்தவர் சதாசிவம் வியாழேந்திரன், தமிழ் மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) உறுப்பினரான இவர், 2015 பாராளுமன்றத் தேர்தலில் புளொட் கட்சியின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்குத் தெரிவானார். 2018 இலங்கை அரசியலமைப்பு நெருக்கடியின் போது, 2018 ஒக்டோபர் 26இல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அப்போது பிரதமராகவிருந்த ரணில் விக்ரமசிங்கவை பதவியில் இருந்து அகற்றி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக அறிவித்தார்.
இதனையடுத்து, மஹிந்த ராஜபக்ஷ தனது பெரும்பான்மையைப் பாராளுமன்றத்தில் நிரூபிக்க வேண்டி ஏற்பட்டது. அப்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மஹிந்த ராஜபக்ஷவின் நியமனத்தினை எதிர்த்த நிலையில், வியாழேந்திரன் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்து கட்சி தாவினார். இவருக்கு
2018 நவம்பர் 2இல் ராஜபக்ஷவின் அரசில் கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான பிரதி அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. பின்னர் 2020ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்
இவருக்கு மஹிந்த அரசில் தபால் சேவைகள், வெகுசன ஊடக, தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இறுதியாக நடந்த தேர்தலில் போட்டியிட முனைந்தபோதும், அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால் போட்டியிடமுடியாத நிலை ஏற்பட்டது.
ஆக, உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை மையமாக வைத்து ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கூட்டமைப்பின் பங்காளித் தலைவர்களாக உள்ளவர்களில் ஒருவரான பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க சிவநேசதுரை சந்திரகாந்தன், கருணா அம்மான் என அழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், அமல் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் ஆகிய மூவரும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களாகவே உள்ளனர்.
அதுமட்டுமல்ல, ‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ எனும் பெயரை முறையற்ற விதத்தில் தமது தேர்தல் அரசியல் தேவைகளுக்காகப் பயன்படுத்தியுள்ளனர். இதனை வன்மையாகக் கண்டிப்பதோடு, மேற்படி கூட்டுக்கு எமது அனுமதியோ அல்லது சம்மதமோ இல்லாமல் ‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ எனும் பெயரைப் பயன்படுத்தியுள்ளதைக் கடுமையாக ஆட்சேபிக்கின்றோம். தொடர்ந்தும் பெயரைப் பயன்படுத்தினால் நீதிமன்றத்தை நாடுவோம் என கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் உண்மையான தலைவர், தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த 15.03.2025 அன்று முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான சிவனேதுரை சந்திரகாந்தன் மற்றும் வியாழேந்திரன் தலைமையிலான தமிழ் மக்கள் வி டுதலைப் புலிகள் கட்சியும் தமிழர் முற்போக்குக் கழகமும் இணைந்து ‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ என்ற பெயரில் ஒரு கூட்டணியை அமைத்துள்ளனர். ஆனால், 2018ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட ‘கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின்’ அரசியல் பிரிவாக ‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ எனும் பெயரிலான அரசியல் கட்சியொன்று தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் தலைமையில் 2018இல் உருவாகி அதற்குத் தேர்தல் ஆணைக்குழுவின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்கான கடிதத் தொடர்பாடல்கள் 2019ஆம் ஆண்டிலிருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எனவே, இந்த ‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ என்ற கூட்டணியின் தலைவர்களும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களாகவும் சிறைகளில் இருந்தவர்களாகவும் இருப்பவர்களாகவும் ‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ம் இன்னொருவரிடமிருந்து திருடப்பட்டதாகவும் உள்ளது.