கமல் ஹாசன் முன்வைக்கப்பட்ட கேள்வி.. நீங்கள் நல்லவரா கெட்டவரா?..
.

கமல் ஹாசன் நடிப்பில் கடைசியாக இந்தியன் 2 திரைப்படம் வெளியாகி மோசமான விமர்சனத்தை பெற்றது. அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தப் படத்துக்கு பிறகு அன்பறிவ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கும் அவர்; அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். அது விக்ரம் படத்தின் இரண்டாவது பாகமகாக இருக்காது என்பதை உறுதியும் செய்திருக்கிறார். இந்நிலையில் அவர் அளித்த பதில் ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.
சினிமாவில் சிறு வயதிலிருந்தே நடித்துவருபவர் கமல் ஹாசன். களத்தூர் கண்ணம்மாவில் தொடங்கிய அவரது திரை பயணம் உதவி நடன இயக்குநர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பல ப்ளாட்ஃபார்ம்களில் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இடையில் அவர் அரசியலில் கவனம் செலுத்தி, மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். ஆனால் அரசியலில் அவர் எதிர்பார்த்த இடம் அவருக்கு கிடைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து தனது தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் ரீ என்ட்ரி கொடுத்தார்.
தரமான கம்பேக்: நீண்ட வருடங்கள் கழித்து கமல் ஹாசன் நடித்ததாலும்; லோகேஷ் கனகராஜின் இயக்கம் என்பதாலும் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவியது. அந்த எதிர்பார்ப்பை படம் முழுவதுமாக பூர்த்தி செய்தது என்றும்; கமல் ஹாசன் நெருப்பு போல் ஸ்க்ரீனில் இருந்ததாகவும் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். மேலும் படமும் விமர்சன ரீதியாக கொஞ்சம் நெகட்டிவ்வை சந்தித்தாலும் வசூல் ரீதியாக செம பாசிட்டிவ்வை பெற்றது. உலகம் முழுவதும் 400 கோடி ரூபாய்வரை வசூல் செய்தது.
படுதோல்வி இந்தியன் 2: விக்ரம் படத்துக்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்தார். ஆனால் அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. தோல்வியை மட்டும் சந்தித்திருந்தால் பரவாயில்லை; ரொம்பவே மோசமான ட்ரோலை சந்தித்துவிட்டதே என்று அவரது ரசிகர்கள் சோகத்தின் உச்சத்துக்கு சென்றனர். அதுமட்டுமின்றி அந்தப் படத்தின் மூன்றாவது பாகமும் உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே அந்த பாகமாவது நன்றாக இருக்குமா என்ற எதிர்பார்த்திருக்கிறார்கள் உலக நாயகனின் ரசிகர்கள்.
மணியுடன் கூட்டணி: இதற்கிடையே மணிரத்னத்துடன் தக் லைஃப் படத்தில் இணைந்திருக்கிறார் கமல். இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதில் கமலுடன் சிம்பு, திரிஷா, விருமாண்டி அபிராமி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். படம் இந்த வருடம் ஜூன் மாதம் ரிலீஸாகவிருக்கிறது. இந்தப் படத்தை முடித்துவிட்டு ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் அன்பறிவ் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோரின் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கிறார்.
கமலின் பதில்: இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கமலிடம் தக் லைஃப் படத்தில் நீங்கள் நல்லவரா கெட்டவரா என்று கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கமல் ஹாசன், "படம் பற்றி எதனையும் சொல்ல முடியாது. போஸ்ட் புரொடக்ஷனில் கடுமையாக படக்குழு உழைத்துவருகிறார். ஒருவேளை படத்தை பற்றி நான் சொல்லிவிட்டால் பிறகு மணிரத்னத்தை நான் சந்திக்கவே முடியாது. கணிதத்தை பொறுத்தவரை ப்ளஸ் முக்கியமா மைனஸ் முக்கியமா. இரண்டுமே முக்கியமல்லவா. நாயகன் படத்தில் ஹீரோ நல்லவனா இல்லை கெட்டவனா என்ற கேள்வி எழுந்தது. தக் லைஃப் படத்தை பொறுத்தவரை அந்தக் கருப்பொருளைத்தான் ஆராய்கிறது. நீங்கள் இந்தப் படத்தை பார்த்து முடித்ததும் ஹீரோ நல்லது மற்றும் கெட்டதின் கலவைதான் என்பதை நீங்கள் உணரும்படி இருக்கும்" என்றார்.