ரணில், சஜித்,அநுரவுக்கு தமிழர் எவ்வாறு வாக்களிக்க முடியும்?
.
ரணில் வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்றுபவர் .சஜித் வடக்கு,கிழக்கில் 1000 விகாரைகளை அமைக்க நடவடிக்கை எடுத்தவர் ,அநுர வடக்கு,கிழக்கு இணைப்பை பிரித்தவர் .இவர்களுக்கு தமிழ் மக்கள் எவ்வாறு வாக்களிக்க முடியும்?இவர்கள் தமிழ் மக்களுக்காக எதனையும் செய்யாதவர்கள் என்பதாலேயே நாம் எமது பிரச்சினைகளை சர்வதேசத்துக்கு எடுத்துச் சொல்ல ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தினோம் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள விடுதியொன்றில் நேற்று புதன்கிழமை தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவாக இலங்கை தமிழரசுக்கட்சியின் கொழும்புக்கிளை நடத்திய சந்திப்பில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில் ,
நான் பிறந்து வளர்ந்தது கொழும்பில், ஆனாலும் எனக்கு தமிழன் என்ற உணர்வும் தமிழ் மீது பற்றும் உள்ளது. அதனால்தான் நான் தமிழ் பொதுவேட்பாளரை தீவிரமாக ஆதரிக்கின்றேன். தமிழ்போத் வேட்பாளர் பா. அரியநேத்திரனுக்கு ஏதிர்வரும் 21 ஆம் திகதி தமிழ் மக்கள் ஒற்றுமையாக ,ஓரணியாக வாக்களிக்க வேண்டும் எனக் கோருகின்றேன்.
13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் தமிழ்மக்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் மீளப்பறிக்கப்பட்டன.அந்த அதிகாரங்களை மீண்டும் வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார். அது தொடர்பில் வர்த்தமானி வெளியிடுவதாகவும் அறிவித்தார்.இவ்வாறு அவர் தமிழ்மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கியபோதும் எதனையுமே நிறைவேற்றியது கிடையாது.இவரின் ஆட்சியிலும் தமிழர்களின் காணி பறிப்பு தொடர்கின்றது.குச்ச வெளியில் தமிழர்களின் காணிகளை ஆக்கிரமித்து வடக்கு கிழக்கு இணைப்பை அற்றுப்போகச்செய்கின்றார்
அடுத்தவர் சஜித் பிரேமதாச. இவர் அமைச்சராக இருந்த போது வடக்கு,கிழக்கில் 1000 பௌத்த விகாரைகளை அமைக்க அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்தவர். அநுர குமார திசாநாயக்க வடக்கு,கிழக்கு இணைப்பை பிரித்த கட்சியை சேர்ந்தவர்.இவர்கள் மூவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.இவர்க மூவரும் தமிழ் மக்களுக்காக எதனையுமே செய்யாதவர்கள். எனவே இவர்களுக்கு தமிழ் மக்கள் எவ்வாறு வாக்களிக்க முடியும்?
தமிழ் மக்களுக்கென பல பிரச்சினைகள் உள்ளன. அவர்களுக்கென தனித்துவமான அடையாளங்கள் உள்ளன.இவ்வாறான நிலையில் இவ்வாறானவர்களுக்கு வாக்களித்து தமிழ் மக்கள் எதனையும் அடைய முடியாது அதனால்தான் நாம் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தினோம். அவர் மூலமாக எமது பிரச்சினைகளை சர்வதேசத்துக்கு எடுத்துச் சொல்லவுள்ளோம் என்றார்.