காட்டுமன்னார்கோவிலில் போட்டியில்லை - திருமாவளவன் அறிவிப்பு!
திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக களம் காண்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் முக்கிய காரணம்.
சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு கூட்டணி ஆட்சியை கோர மாட்டோம் என்பதை ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளோம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் தான் போட்டியிடவில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி, "விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 8 இடங்களில் போட்டியிடுகிறது; 8 இடங்களுக்கான வேட்பாளரை ஏற்கனவே அறிவித்துள்ளோம். நாடாளுமன்ற உறுப்பினராக நான் இரண்டு ஆண்டுகளை நிறைவுச் செய்துள்ளேன். இன்னும் 3 ஆண்டுகள் உள்ளன. வரும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதியில் தான் போட்டியிடவில்லை. தொங்கு சட்டமன்றம் அமையும், கூட்டணி ஆட்சிதான் அமையும் என்ற நோக்கில் தான் தேர்தலில் போட்டியிடுகிறேன் என்று வதந்தி பரப்பினார்கள். இன்னும் சிலர் துணை முதல்வர் பதவியை எதிர்பார்த்து தேர்தலில் போட்டியிடுகிறேன் என்றார்கள். சட்டமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஆசை கடந்த 20 ஆண்டுகளாக எனக்குள் இருந்து வந்தது. அந்த எண்ணத்தின் வெளிப்பாடாக தற்போது தேர்தலில் களமிறங்க திட்டமிட்டு இருந்தேன்.
2006- ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தற்போது காங்கிரஸ் வேட்பாளராக உள்ள செல்வப்பெருந்தகைக்காக நான் போட்டியிடுவதாக இருந்த தொகுதியை விட்டுக்கொடுத்தேன். ஒரு இடம் கிடைத்தாலும் தான் தான் போட்டியிட வேண்டும் என்று விரும்புகிறவர்கள் உள்ள அரசியல் களத்தில் நான் போட்டியிடுவதற்காக நானே கேட்டுப் பெற்ற தொகுதியை வேறு கட்சியின் ஒருவருக்கு வழங்கிய வரலாறு உண்டு. பதவியில் எனக்கு பெரிய பிடிப்பு இல்லை என்பதற்கு இதுவும் ஒரு சான்று.
வரும் சட்டமன்றத் தேர்தல் வழக்கமான தேர்தல் அல்ல; வலதுசாரி இயக்கங்கள் திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருகின்றனர். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியைப் பலவீனப்படுத்தும் எல்லா முயற்சிகளிலும் சங்பரிவாலர்கள் மேற்கொண்டனர். என்னை குறிவைத்து எனக்கு எதிரான, நயவஞ்சகமாக என்னை அந்த கூட்டணியில் இருந்து பிரிக்க முயற்சி செய்தனர்.
திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக களம் காண்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் முக்கிய காரணம். திமுக கூட்டணியைக் காப்பதில் பெரும் முயற்சி செய்துள்ளேன். ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பதை பல ஆண்டுகளாக முழங்கி வந்தோம். நான் தேர்தலில் போட்டியிடப் போகிறேன் என்று தெரிந்தவுடன் ஏதேதோ யுகங்களைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பிரச்சாரம் - பொதுமக்கள் எதிர்ப்பு
ஆனால், இதிலும் சிலர் அரசியல் வெறுப்புணர்வோடு தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். திருமாவளவனுக்கு எப்போதும் பதவி ஆசை இருந்ததில்லை. சட்டமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்றே ஆசைப்பட்டேன். அதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. கூட்டணி ஆட்சியை கோர மாட்டேன் என்பதை ஏற்கனவே தெரிவித்துவிட்டேன்; காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இளையபெருமாளின் மகன் ஜோதிமணி வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார்" என்றார்.
யார் இந்த இளையபெருமாள்?
கடந்த 1979- 1980 வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்தவர் இளையபெருமாள்; பட்டியலினத்தைச் சேர்ந்த இளையபெருமாள் காங்கிரஸ் கட்சியின் முக்கிய ஆளுமையாகத் திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


