பாரதிராஜா காலடியில் அமர்ந்து அழுத நடிகர் இளவரசு.. இது எப்ப நடந்துச்சு? காரணம் தெரியுமா?.
.

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகர்களில் தனக்கென தனி அங்கீகாரத்தையும் அடையாளத்தையும் உருவாக்கி வைத்துள்ளவர் நடிகர் இளவரசு. ஒளிப்பதிவாளராக சினிமாவில் அறிமுகமாகி, தற்போது குணச்சித்திர நடிகராக வலம் வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட, இளவரசு இயக்குநர் பாரதிராஜா குறித்து பேசினார். இவரது பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
நந்தா பெரியசாமி எழுதி இயக்கிய படம் திரு. மாணிக்கம். சமுத்திரக்கனி கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படம் கடந்த ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தில் நாசர், இளவரசு, தம்பி ராமையா, ஷகிலா, வடிவுக்கரசி என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு படம் மிகவும் பிடித்துப் போகவே, படக்குழுவினரை பாராட்டினார். படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் இளவரசு பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
மேடைக்குச் சென்றதும், மேடையில் இருந்த ஷகிலாவை, கையைப் பிடித்துக் கொண்டு வந்து தனது அருகில் நிறுத்தி, அவரது தோள்மீது கை போட்டு பாராட்டிப் பேசினார். நடிகை ஷகிலாவை ஒரு நடிகர் மேடையில், அவரது தோள் மீது கை போட்டுக்கொண்டு பேசியது இதுவே முதல் முறை என்பதால், ரசிகர்கள் தொடங்கி திரைத்துறையினருக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. ஆனால் ஷகிலா குறித்து அவர் பேசிய விஷயங்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர். அதேபோல், இயக்குநர் பாரதிராஜா குறித்து கேள்வி கேட்கும்போது, இளவரசு மிகவும் சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்து கொண்டார். அது பலருக்கும் ஆச்சரியத்தையும் அதே நேரத்தில் அதிர்ச்சியையும் கொடுத்தது.
பாரதிராஜா குறித்து பேசும்போது, " படத்தில் அவர் நடித்ததை பார்த்து எனக்கு மனமே கலங்கிவிட்டது. நான் 15 ஆண்டுகள் அவருடன் என் வாழ்க்கையை கழித்துள்ளேன். அவர் முன்னால் அமர்வதற்கு பயப்படுவோம். நான் இந்த படத்தின் படப்பிடிப்புக்கு போன போது, அவருக்கு படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அப்படி இருக்கும்போது, எனது படப்பிடிப்பை முடித்துவிட்டு, நான் நேராக அவரைச் சந்திக்க தேனியில் உள்ள அவரது வீட்டுக்கு போனேன். என்னைப் பார்த்ததும் அவர் 'வாயா' என தழுதழுத்த குரலில் அழைத்தார்.
கண்ணீர்: அவரிடம் போனதும், நான் அவரது காலடியில் அமர்ந்து அழுக ஆரம்பித்துவிட்டேன். உடனே அவர் , என்ன எனக் கேட்டார். ஆனால் நான் எதுவும் கூறாமல் அழுது கொண்டு இருந்தேன். எனக்கு கடவுளாக மட்டும் இல்லாமல், எல்லாமாகவும் இருக்கும் பாரதிராஜா சாருக்கு வயதாகிக் கொண்டு போகிறது என்ற எதார்த்தத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் ஏன் அழுகிறாய் எனக் கேட்டதும், நான் எதுவும் கூறாமல், இன்னும் கொஞ்ச நேரம் அங்கிருந்தால் உங்களை கோழையாக்கிவிடுவேன் எனவே, நான் கிளம்புகிறேன் எனக் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டேன்" எனக் கூறினார். பாராட்டு: இவரது பேச்சைக் கேட்ட பலருக்கும் இது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது. பலர், பாரதிராஜாவை தனது மனதில் இந்த அளவுக்கு ஒருவர் யோசிப்பாரா என்ற கேள்வியையும் எழுப்பி வருகிறார்கள். மேலும் இவரது இந்த பேச்சுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.