நாட்டின் சமாதானம் உறுதிப்படுத்தப்படும் வகையிலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் வகையிலும் புதியதொரு தீர்வுத்திட்டம் தற்போது தேவைப்படுகின்றது. புதிய தீர்வு திட்டம் வரும் வரையில் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை இரத்து செய்ய இயலாது
இலங்கை மக்களின் விருப்பத்திற்கு மாறாகவே இலங்கை – இந்திய ஒப்பந்தம் பலவந்தமாக கைச்சாத்திடப்பட்டது. அந்த ஒப்பந்தம் மீதான எமது எதிர்ப்பு நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை. சுமார் 40 வருடங்கள் கடந்தும் மாகாணச் சபை முறைமையால் வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க வில்லை.
1987 ஆம் ஆண்டில் இருந்த இனப்பிரச்சினை தற்போது பெரும் மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை உள்ளடக்கிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பின் ஊடாக 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் இரத்துச் செய்யப்படும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மேற்கண்டவாறு கூறினார். அவர் வழங்கிய முழுமையான செவ்வி வருமாறு,
கேள்வி: ஜே.வி.பி.யினால் இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து உங்களது நிலைப்பாடு என்ன?
பதில்: எதிர்பாராத சந்தர்ப்பங்களில் தான் பெரும்பாலும் அரசியல் மாற்றங்கள் நிகழும். மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான அரசியல் மாற்றம் இலங்கையில் ஏற்பட பல காரணிகள் தாக்கம் செலுத்தின. சுமார் 76 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்த அரசாங்கங்களுக்கு ஆதரவளித்து பலனற்ற நிலையில் மக்களின் விரக்தி வெளிப்பாடாக இந்த அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பெரும் எதிர்பார்ப்புகளுடன் கோட்டாபய ராஜபக்ஷவை மக்கள் ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தினர். ஆனால் அந்த எதிர்பார்ப்புகள் தோல்வியடைந்தன.
இதனால் மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் ஏற்பட்டன. இறுதியில் ஆட்சியாளர் விரட்டியக்கப்பட்டாலும் போராட்டத்தின் உண்மையான நோக்கம் நிறைவேற்றமடையவில்லை.
மறுபுறம் பொருளாதார நெருக்கடிகள் காணப்பட்ட போதிலும் ஊழல் மோசடிகள் நிறைந்த அரசியல் கலாசாரம் தொடர்பில் நாட்டு மக்கள் கடும் விரக்தி நிலையுடன் இருந்தனர். இதனடிப்படையில் மக்கள் மாற்றத்தை நோக்கி நகர்ந்தனர். இந்த சூழலை வெற்றிக்கொண்டு மக்கள் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்த எம்மால் முடிந்தது.
குறிப்பாக மக்கள் விடுதலை முன்னணி, தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் பரந்துபட்ட அரசியல் கூட்டணியை உருவாக்கியது. மக்கள் எதிர்பார்ப்புகளை பிரதிபலிக்கும் கொள்கைகளை உருவாக்கினோம். அதனை மக்கள் மத்தியில் கொண்டு சென்றோம்.
மக்கள் எம்மை நம்பினார்கள். ஊழல் மோசடிகள் நிறைந்த அரசியல் கலாசாரத்தை மாற்ற வேண்டுமாயின், தேசிய மக்கள் சக்தியை ஆதரிக்க வேண்டும் என்ற உணர்வு மக்களுக்கு ஏற்பட்டது. எமது கட்சியின் ஒழுக்க நெறிகள் மற்றும் கொள்கைகள், ஏனைய சம்பிரதாயபூர்வமான அரசியல் கட்சிகளை மக்களிடமிருந்து ஓரங்கட்டியது.
ஜனாதிபதி தேர்தலில் மக்கள் எமக்கு வாக்களித்த போது சிலர் சந்தேகங்களை கொண்டிருந்திருக்கலாம். ஏனெனில் மக்கள் விடுதலை முன்னணி குறித்து எதிர்தரப்பினர் போலியான பிரசாரங்களை மேடைகளில் முன்னெடுத்திருந்தனர். அவை உண்மையாகலாம் என்ற சந்தேகமே ஜனாதிபதி தேர்தலில் வாக்குகள் சற்று குறையவும் காரணமாக இருந்தது.
ஆனால் பாராளுமன்ற தேர்தலின் போது, நாம் எதிர்பார்த்த மாற்றத்தின் அரசியல் கலாசாரம் இதுவென்று மக்களுக்கு புரிதல் ஏற்பட்டது. எனவே தான் பாராளுமன்ற தேர்தலில் வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் அனைத்து பகுதி மக்களும் எமக்கு பெரும் ஆதரவை வழங்கினர். மட்டக்களப்பு மாவட்டம் மாத்திரமே எமக்கு வெற்றிக்கொள்ள முடியாமல் போனது.
ஆனால் வடக்கு மக்கள் வரலாற்றில் முதல் தடவையாக பிரதேச அரசியல் கட்சிகளை நிராகரித்து தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவை வழங்கியுள்ளனர். இதுவொரு பெரும் வெற்றி மாத்திரமல்ல, இலங்கை அரசியல் வரலாற்றின் திருப்பு முனையாகவும் உள்ளது. நாம் பெற்றுக்கொண்ட 159 ஆசனங்களை விட வடக்கு மக்களின் ஆதரவு எம்மை பொறுத்த வரையில் மதிப்பு மிக்கதாகும்.
கேள்வி: ஜே.வி.பி க்கும் தேசிய மக்கள் சக்திக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?
பதில்:மக்கள் விடுதலை முன்னணி 1965 ஆம் ஆண்டிலிருந்து நாட்டில் அரசியல் நடவடிக்கைளில் ஈடுபடுகிறது. ஜனநாயகம், சமத்துவம் மற்றும் இனவாதம் அற்ற ஒரு அரசியல் மாற்றத்திற்காக அன்றிலிருந்து இன்று வரை ஜே.வி.பி. செயற்படுகிறது. இந்த இலக்கை அடைவதற்கு மக்கள் விடுதலை முன்னணி மாத்திரமல்ல மேலும் பல சக்திகளை இணைத்துக்கொள்ள நினைத்தோம்.
அவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்டதுதான் தேசிய மக்கள் சக்தியாகும். ஆகவே ஜே.வி.பி வேறு, தேசிய மக்கள் சக்தி வேறு அல்ல. இரண்டுமே ஒன்றுதான். ஆனால் கட்சிகள் ஒன்றிணைந்த அரசியல் கூட்டணியாக தேசிய மக்கள் சக்தி செயற்படுவதில்லை. மக்கள் விடுதலை முன்னணிக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையில் கொள்கை ரீதியான வேறுபாடுகள் எதுவும் இல்லை.
கேள்வி: இலங்கையின் பொருளாதாரம் மற்றும் அரசியல் போன்ற துறைகளில் உங்களது கொள்கைகள் எத்தகையது?
பதில்: ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பதாகவே அரசியல் மற்றும் பொருளாதார கொள்கைளை தேர்தல் விஞ்ஞாபனம் ஊடாக வெளிப்படுத்தியுள்ளேம். நாட்டின் பொருளாதாரம் முக்கியமானதொன்றாகும். அதனை வளர்ச்சி நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும். மறுபுறம் பெரும் கடன்சுமை உள்ளது. மக்களின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதுடன் நாட்டின் பொருளாதாரத்தையும் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டும்.
உற்பத்தி பொருளாதாரத்தை நோக்கி நாம் செல்ல வேண்டியதுள்ளது. பொருளாதார நலன்களின் பலன்கள் அனைவரும் சமமாக கிடைக்கப்பெற வேண்டும். அப்போது தான் நாட்டில் வறுமையை ஒழிக்க முடியும். அதே போன்று அரசியல் தலைவர்களும் மக்கள் பிரதிநிதிகளும் மக்களுடன் ஒன்றிணைந்து பணியாற்றுபவர்களாக இருக்க வேண்டுமே தவிர, மக்கள் நிதியில் சொகுசு வாழ்க்கையை வாழ முடியாது.
இவற்றை முறையாக கண்காணித்து நிர்வகிக்க கூடிய வகையில் எமது கொள்கை பிரகடனம் அமைந்துள்ளது. கல்வி, சுகாதாரம் மற்றும் போக்குவரத்து போன்ற துறைகள் குறித்தும் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம். இத்தகைய திட்டங்கள் நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் என்று நம்புகின்றோம்.
கேள்வி: முதலாளித்துவத்தை எதிர்க்கும் கொள்கையுடன் நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறு உயர்த்துவீர்கள்?
பதில்: முதலாளித்துவம் என்று கூறும் போது, எமது நாட்டு மக்களின் உற்பத்திகளுக்கு நியாயமான பலன்கள் கிடைக்கப்பெற வேண்டும். சிறியளவிலான மாற்றங்கள் இருக்கலாம். ஆனால் மக்களின் உழைப்புக்கு நியாயம் கிடைக்கப்பெற வேண்டும்.
ஆனால் மக்களை உதாசீனம் செய்து விட்டு ஓரிருவர் மாத்திரம் பொருளாதார பலன்களை அடைவதை ஏற்க முடியாது. குறிப்பாக ஆட்சியாளர்கள் சொத்துக்களை குவித்துக்கொள்வது முறையல்ல. எனவே நாட்டின் பொருளாதாரம் எமக்கு முக்கியமானதாகும். உற்பத்தியாளர்கள் ஏனைய தொழில் துறையினர் இல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப இயலாது. அனைவரின் பங்களிப்புடனேயே நாட்டின் பொருளாதாரத்தை மீட்க முடியும்.
இதன்போது முதலாளித்துவ பொருளாதாரம் என்று பார்க்க இயலாது. மாறாக நாட்டின் பொருளாதார மீட்சிக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். ஆனால் பொருளாதார நலன்கள் அனைவருக்கும் நியாயமான முறையில் சென்றடைய வேண்டும். அப்போது தான் சமூக நீதி ஏற்படும். அனைவரும் ஒத்துழைக்கும் வகையில் பொருளாதார ஜனநாயகமும் இருக்க வேண்டும். அதேபோன்று அனைவரும் அந்த பலன்கள் அடைய கூடிய வகையில் சமூக நீதியும் காணப்பட வேண்டும்.
கேள்வி: சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை மறுசீரமைப்பாதாக தேர்தலுக்கு முன்னர் கூறியிருந்தீர்கள். இது குறித்து தற்போதைய நிலைப்பாடு என்ன?
பதில் :புதிய மக்கள் ஆணையின் அடிப்படையில் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றோம்.
நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள வரிக்கொள்கைகளை மாற்றுதல் மற்றும் மக்களுக்கு நிவாரணங்கள் வழங்குதல் போன்ற விடயங்களில் எமது அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இந்த விடயங்கள் குறித்து நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம். சாதகமான பதிலளிப்புகள் உள்ளன.
ஆனால் மக்கள் ஒரு விடயத்தை புரிந்துக்கொள்ள வேண்டும். நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கமே முன்னெடுத்தது. நாம் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வில்லை. எனவே நடைமுறையில் உள்ள ஒப்பந்தத்தை தன்னிச்சையாக எம்மால் மாற்ற இயலாது. அவ்வாறு மாற்றியமைத்தால் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கான ஒத்துழைப்புகளை விலக்கிக்கொள்ளும்.
இத்தகைய நிலைமை ஏற்பட்டால், உலக நடுகள் மத்தியில் இலங்கை மீதான நம்பிக்கை மீண்டும் சரிவடைந்து பெரும் நெருக்கடிகள் நாட்டில் ஏற்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. எனவே நாம் விரும்பினாலோ விரும்பா விட்டாலோ நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை முன்னெடுத்து செல்ல வேண்டிய நிலைமை எமது அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது.
கேள்வி: புதிய அரசியலமைப்பில் எவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்த உள்ளீர்கள்?
பதில்: நாட்டில் நடைமுறையில் உள்ள அரசியலமைப்பு 20க்கும் மேற்பட்ட தடவைகள் திருத்தத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதிலிருந்தே அந்த அரசியலமைப்பு நாட்டிற்கு ஒவ்வாதவொன்று என்பது வெளிப்படுகின்றது. எனவே புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவது என்பது கட்டாயமானதாகும்.
இலங்கையின் ஜனநாயகம் மற்றும் மக்களின் அடிப்படை உரிமைகள் பாதுக்காப்படும் வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும். அதேபோன்று, தேசிய ஒற்றுமையை ஏற்படுத்த கூடியதும் அனைத்தின மக்களுக்கும் சமமான உரிமைகள் கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.
வடக்கு மற்றும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வும் புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டும். இது எளிதான விடயமல்ல. எனவே அனைத்தின மக்களின் கருத்தக்களை கேட்டு பாராளுமன்றத்தில் மாத்திரமல்லாது, சர்வஜன வாக்கெடுப்பின் ஊடாக மக்களின் அனுமதியும் புதிய அரசியலமைப்புக்கு கிடைக்கப்பெற வேண்டும். எவ்வாறாயினும் புதிய அரசியலமைப்பு பணிகள் நிறைவடைய கொஞ்சம் காலம் செல்லும். எமது அரசாங்கத்தின் கீழ் நாட்டிற்கு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்.
கேள்வி: இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை எதிர்க்கும் நிலைப்பாட்டில் தொடர்ந்தும் உள்ளீர்களா?
பதில்: இலங்கை – இந்திய ஒப்பந்தம் குறித்த உங்களது கேள்வி சற்று பாராதூரமானதாகும். எனவே இதற்கான எமது பதிலளிப்புகளை பல தரப்புகள் தத்தமது சுய அரசியலுக்காக திரிவுபடுத்தி பிரசாரம் செய்யவார்கள். இருப்பினும் இதனை சற்று தெளிவுப்படுத்த விரும்புகின்றேன்.
தமிழ் இனவாத அரசியல் வடக்கில் காணப்படுகின்றது. மஹிந்த ராஜபக்ஷ உருவாக்கிய சிங்கள இனவாத அரசியல் தெற்கில் உள்ளது. இலங்கை – இந்திய ஒப்பந்தம் குறித்து நாம் எது கூறினாலும், மேற்குறிப்பிட்ட இருதரப்புமே அவர்களின் அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்வார்கள்.
மக்களின் விருப்பத்திற்கு மாறாகவும், அமைச்சரவையில் கூட முன்வைக்காது இலங்கை – இந்திய ஒப்பந்தம் பலவந்தமாக கைச்சாத்திட்டமையினாலேயே அதனை நாங்கம் எதிர்க்கின்றோம். அந்த ஒப்பந்தத்தில் உள்ளடக்கத்தின் ஒன்று தான் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம்.
13 ஆவது அரசியலமைப்பு கொண்டு வரப்பட்டு சுமார் 40 வருடங்கள் கடந்தும் வடக்கு மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வில்லை. இன்றும் 13 ஆவது திருத்தம் குறித்து முரண்பாடான கருத்துக்களே நாட்டில் உள்ளன. எனவே தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வாக கொண்டு வரப்பட்ட 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் வெற்றியளிக்காத விடயம் என்பது நிரூபனமாகியுள்ளது.
ஆகவே நாட்டின் சமாதானம் உறுதிப்படுத்தப்படும் வகையிலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் வகையிலும் புதியதொரு தீர்வுத்திட்டம் தற்போது தேவைப்படுகின்றது. புதிய தீர்வு திட்டம் வரும் வரையில் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை இரத்து செய்ய இயலாது.
ஏனெனில் ஏதேனும் ஒரு தீர்வு திட்டம் கிடைத்திருக்குமாயின் அது மாகாண சபை ஊடாகவே கிடைத்துள்ளதென தமிழ் மக்கள் நம்புகின்றனர். ஆகவே மாற்றுத் திட்டமின்றி மாகாண சபை முறைமையை இரத்து செய்வது என்பது முறையற்றதாகும்.
நாட்டில் மாகாண சபை முறைமை தோல்வியடைந்த விடயமென்பதை எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம். இருப்பினும் அனைத்தின மக்களும் ஏற்றுக்கொள்ள கூடிய வகையிலான தீர்வு திட்டம் முன்வைக்கப்படும் வரை மாகாண சபை முறைiயை இரத்து செய்ய மாட்டோம். புதிய அரசியலமைப்பு ஊடாக சிறந்த தீர்வு திட்டங்கள் முன்வைக்கப்பட்ட பின்னர் 13 ஆவது திருத்த சட்டத்திற்கும் மாகாண சபை முறைமைக்குமான தேவை நாட்டில் இருக்காது.
கேள்வி: தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டால், நாட்டில் மாகாண சபை முறைமை இரத்தாகும் என்றா கூறுகின்றீர்கள் ?
பதில்: ஆம், அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்கின்ற அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டால், மாகாண சபை முறைமைக்கோ அல்லது 13 ஆவது அரசியலமைப்பிற்குமான தேவைப்பாடு நாட்டில் இருக்காது. அது நாட்டிற்கு தேவையும்படாது. மாகாண சபை முறைமை என்பது, எந்த பலனும் அற்ற, நாட்டில் தோல்வியடைந்த ஒரு விடயமாகும்.
எனவே புதிய தீர்வுத் திட்டத்தை முன்வைக்காது மாகாண சபை முறைமையை இரத்து செய்ய மாட்டோம். இந்த விடயத்தை தெளிவாக புரிந்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் தவறான கருத்துக்கள் மக்கள் மத்தியில் பரப்பப்டுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
தமிழ் மற்றும் சிங்கள மக்கள் உட்பட சமூகத்தின் அனைத்து தரப்புகளையும் ஒன்றிணைத்து புதிய அரசியலமைப்பு ஊடாக தீர்வுத்திட்டத்தை நோக்கி எமது அரசாங்கம் நகரும். இருப்பினும் உலகில் எந்தவொரு பிரச்சினையும் அனைத்து காலக்கட்டத்திலும் ஒரே இடத்தில் இருக்காது.
மாறாக பல்வேறு மாற்றங்களுக்கு உட்படும். 1987 ஆம் ஆண்டில் இருந்த எமது இந்த இனப்பிரச்சினை தற்போது பெரும் மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. பிரதேசம் சாராத பொதுவான கட்சிக்கு வாக்களிக்கும் நிலைக்கு தமிழ் மக்கள் மாற்றமடைந்துள்ளனர். அந்த மக்கள் பிளவுபட்டவர்களாக அல்லது தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்துள்ளனர்.
நாட்டில் ஒன்றிணைந்து வாழவும் செயல்படவுமான விருப்பத்தையே தமிழ் மக்கள் எம்மை ஆதரிப்பதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர். இலங்கை அரசியலில் இனவாதம் தோற்கடிக்கப்பட்ட பெரும் வெற்றியாகவே இதனை காணமுடிகிறது.
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதை வடக்கு மக்கள் எளிதாக்கியுள்ளனர். மொழி போன்ற பிரச்சினைகளை அரசியலமைப்பின்றிக்கூட எம்மால் தீர்த்துக்கொள்ள முடியும். எனவே அனைத்தின மக்களினதும் அடையாங்கள் பாதுகாப்பட்டு சம உரிமைகள் உறுதிப்படும் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அதன் உள்ளடக்கங்கள் குறித்து தற்போது கூறயியலாது.
கேள்வி: இறுதிக்கட்டப் போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மீறல்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்து உங்களது கருத்து என்ன ?
பதில்: குறிப்பிட்ட சில விடயங்கள் குறித்து விசரணைகளை துரிதப்படுத்தவும் நடவடிக்கைளை எடுக்கவும் பாதுகாப்பு தரப்புகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளோம். மனிதப் படுகொலைகள் மற்றும் காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்து விசாரணைகள் துரிதப்படுத்தப்படவுள்ளன.
இந்த விசாரணைகளின் போது அரசியல் அதிகாரங்களை நாங்கள் பயன்படுத்த மாட்டோம். அவ்வாறு பயன்படுத்தினால் அரசியல் பழிவாங்கல்களாக சித்தரிப்பார்கள். எனவே நீதி துறைசார்ந்த நிறுவனங்களுக்குஅதுகுறித்த உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
கேள்வி: சீனாவையும் இந்தியாவையும் எவ்வாறு கையாளுவீர்கள் ?
பதில்: இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள பிரச்சினைகள் குறித்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தெளிவான புரிதலுடன் உள்ளது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் முரணான நிலைமை உள்ளது என்பதை நாங்கள் அறிவோம். பிராந்தியத்தில் இரு நாடுகளுமே வலுவான சக்திகளாகும்.
இந்தியாவை பொறுத்த வரை இலங்கையின் அயல் நாடாகும். சீனா, இலங்கையின் நட்பு நாடாகும். அந்த இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினைகளில் நாம் சிக்கிக்கொள்ளாது, இலங்கையின் முன்னேற்றத்திற்காக சீனாவிடமும் இந்தியாவிடமும் உதவிகளை பெற்றுக்கொள்ள நாம் செயற்பட வேண்டும்.
அதேபோன்று இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் எந்தவொரு நடவடிக்கையும் இலங்கையில் இடம்பெறாதவாறு அவதானத்துடன் செயற்பட வேண்டும். ஆனால் இந்தியா விரும்ப வில்லை என்பதற்காக சீனாவுடன் முரண்பட வேண்டிய தேவை எமக்கு கிடையாது.
இராஜதந்திர ரீதியில் அனைத்து நாடுகளுடனும் தொடர்புகளை வலுப்படுத்துவோம். எந்தவொரு நாட்டிற்கு எதிராகவும் மற்றொரு நாடுடன் கூட்டணியமைக்க மாட்டோம். இலங்கையின் இந்த நிலைப்பாட்டை இந்தியாவும் சீனாவும் உணரும் என்று நாங்கள கருதுகின்றோம்.
கேள்வி: இந்தியாவுடனான கடந்த அரசாங்கத்தின் ஒப்பந்தங்களை மறுசீரமைப்பீர்களா?
பதில்: வலுசக்தி தொடர்பான ஒப்பந்தங்கள் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க உள்ளோம். ஏனைய ஒப்பந்தங்கள் குறித்து எமக்கு பிரச்சினைகள் இல்லை. பொதுவாகவே ஒப்பந்தங்கள் குறித்து மீளாய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன.
கேள்வி: வெளிநாடுகளில் உள்ள தமிழர்களின் ஒத்துழைப்புகளை எவ்வாறு பெற்றுக்கொள்வீர்கள்?
பதில்: தமிழ், சிங்களம் என்ற வேறுபாடின்றி உலக நாடுகளில் உள்ள எமது நாட்டு பிரஜைகள் அனைவரையும் இலங்கையர்களாகவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கருதுகின்றது.
எனவே புலம்பெயர் இலங்கையர்கள் என்ற வகையில் அவர்களுக்கு இலங்கைக்கு வருவதற்கு எந்த தடையும் இல்லை. இலங்கையை கட்டியெழும்பும் பணியில் அவர்களை பங்கேற்குமாறு அழைக்கின்றோம்.