இன்னும் 100 நாட்களில் புதிய ஜனாதிபதி: தேர்தலை ஒத்திவைக்கும் சாத்தியமில்லை என்கிறது ஐக்கிய மக்கள் சக்தி
.
அத்துடன், இன்னும் 100 நாட்களில் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பம் மக்களுக்கு கிடைக்கும் எனவும் அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குநேற்று கருத்துரைக்கையிலே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், தொடர்ந்து கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க ;
”நாட்டில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது மற்றும் நாட்டு மக்களுக்கு பொறுப்புக்கூறக்கூடிய ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை அமைப்பதற்கான நல்லதொரு சந்தர்ப்பம் ஜனாதிபதி தேர்தலாகும்.
ஜனாதிபதித் தேர்தலை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எந்தவொரு காரணத்திற்காகவும் பிற்போடவோ அல்லது நடத்தாதிருக்கவோ முடியாது.
தேர்தல் தொடர்பில் நாடு முழுவதும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. சிலர் ஜனாதிபதிக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்கின்றனர். சிலர் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்காக சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என்கின்றனர்.
இருப்பினும், இந்த நாட்டு மக்கள் வாக்குப் பலத்தை பயன்படுத்தும் உரிமையினை எந்த காரணம் கொண்டும் பறித்தெடுப்பதற்கு நாம் இடமளிக்கப்போவதில்லை என்பதை நாம் அனைவருக்கும் கூறிக்கொள்கின்றோம்.
நாட்டு மக்களின் வாக்கின் மூலம், மக்களின் விருப்பத்திற்கமைய மக்கள் தெரிவுசெய்யும் ஜனாதிபதியை விடுத்து, அவர்களின் விருப்பத்திற்காக நாட்காளியில் அமர்ந்திருக்கும் வகையில் சட்டத்தினை திருத்தியமைப்பதற்கு எந்தவகையிலும் அனுமதி இல்லை என்பதை நாம் தெளிவாகக் கூறிக்கொள்கின்றோம்” எனத் தெரிவித்துள்ளார்.