மியான்மர் - தாய்லாந்தை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 1000-ஆக உயர்வு
"மியான்மரில் நேற்று மதியம் யாரும் எதிர்ப்பார்காத விதமாக மிகப் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

மியான்மர் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 1000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டின் ராணுவ அரசு தெரிவித்துள்ளார்.
மியான்மரில் பல்வேறு பகுதிகளில் உள்ள அடுக்குமாடி கட்டடங்கள் சரசரவென அப்பளம் போல் நொறுங்கிய காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மியான்மரில் 7.7 ரிக்டர் அளவிலான மிகப் பயங்கர நிலநடுக்கம் பதிவான நிலையில் மண்டாலே பகுதியில் 6.4 ரிக்டர் அளவில் பின்னதிர்வு ஏற்பட்டது. மேலும் இதன் தொடர்ச்சியாகத் தாய்லாந்து மற்றும் சீனாவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது.
கடந்த 100 ஆண்டுகளில் மியான்மர் எதிர்கொண்ட மிகப் பயங்கர நிலநடுக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் மியான்மரின் முக்கிய கட்டடங்கள், பாலங்கள், அணை மற்றும் சாலைகள் சேதமடைந்த நிலையில் இதுவரை 1000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆபத்தான நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டின் ராணுவ அரசின் தலைவர் மின் ஆங் ஹ்லைங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அவர், "மியான்மரில் நேற்று மதியம் யாரும் எதிர்ப்பார்காத விதமாக மிகப் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நாட்டின் தலைநகரான நேபிடாவில் உள்ள முக்கிய நினைவுச் சின்னங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. அதில் மா சோ யானே மடாலயம் மற்றும் மற்ற மாளிகைகள் இடிந்து விழுந்துள்ளன. இது தொடர்பான வீடியோ காட்சிகள் பார்ப்பவர்களைப் பதைபதைக்க வைக்கிறது.
மேலும் இந்த பகுதியில் உள்ள அணை ஒன்று உடைந்ததால், நேபிடாவ்வின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தென்மேற்கு மியான்மரின் சாகைங் பகுதியில் 90 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மண்டாலே - யாங்கோனை பகுதிகளை இணைக்கும் மேம்பாலமானது கடுமையாக தேமடைந்துள்ளது. தொடர்ந்து மியான்மர் அரசாங்கம் தலைநகர் நேபிடாவ் மற்றும் மண்டாலே உள்ளிட்ட ஆறு மாநிலங்களுக்கு அவசரகால நிலையை அறிவித்துள்ளது” என்றார்.
அதே போல் மியான்மரின் அண்டை நாடான தாய்லாந்தில் நிலநடுக்க உணரப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பேசிய தாய்லாந்து பாதுகாப்புத்துறை அமைச்சர் பும்தம் வெச்சாயாசாய், “அமெரிக்கப் புவியியல் ஆய்வு மற்றும் ஜெர்மனியின் புவி அறிவியல் மையத்தின் அறிக்கைகளின் படி தாய்லாந்தில் பூமிக்கடியில் சுமார் 10 கிலோ மீட்டர் (6.2 மைல்) அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகள் சேதமடைந்துள்ளன.
பாங்காக்கின் சதுசாக் சந்தைக்கு அருகில், கட்டுமானப் பணியில் இருந்த 33 மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததை அடுத்து அந்த கட்டடத்தில் இருந்த அவசர கால எச்சரிக்கை ஒலித் தானாக ஒலிக்க தொடங்கியது. பின் அதை அணைக்க முடியாததால் பாங்காக்க முழுவதும் ஒலித்தபடி இருந்தது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த சம்பவத்தில் பாங்காக்கில் 3 பேர் உயிரிழந்த நிலையில் 90 பேர் இடிபாடுக்குள் சிக்கித் தவித்து வருகின்றனர். நேற்று (மார்ச் 28) இரவு நிலவரப்படி 7 பேர் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன” என்றார். இதுகுறித்து தகவல் வெளியிட்ட சீன ஊடகங்கள், சீனாவின் வடகிழக்கு எல்லையில் உள்ள யுன்னான், சிச்சுவான் மற்றும் மங்ஷி மாகாணங்களில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவித்துள்ளன.

மத்திய மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சாலைகள் சேதம் (AFP