200 புலனாய்வுப் பிரிவினரை களமிறக்கி நாட்டில் பேரழிவை ஏற்படுத்தத் திட்டமா?
.
இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 200 அதிகாரிகளை களமிறக்கி 12 ஆம் திகதிக்கு பின்னர் நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் திட்டம் இருப்பதாக வெளியான செய்திகள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பிரதானி கடந்த புதன்கிழமை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ புலனாய்வுப் பிரிவின் தலைவர் பிரிகேடியர் சந்திக மஹதந்திலவினால் கடந்த புதன்கிழமை காலை இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த செய்தியை வெளியிட்டுள்ள இந்த யூடியூப் சேனல் அரசியல் தேவைகளின் அடிப்படையில் தவறான தகவல்களை பரப்பி இராணுவத்தினரின் மன உறுதியையும் செயல்திறனையும் குலைக்க பயன்படுத்தப்பட்டுள்ளதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் சேவையை விட்டு விலகி வெளிநாட்டில் இருந்து யூடியூப் சேனலை நடத்தி வரும் அஜித் தர்மபால என்ற நபரால் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்துவதற்காக இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பிரதானியால் இருநூறு புலனாய்வுப் பிரிவினர் கொழும்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தவறான செய்திகளால் தனக்கும் தனது குடும்பத்தின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் அரசியல் காரணங்களுக்காக நாட்டில் அமைதியின்மையை உருவாக்கி புலனாய்வு அமைப்புகள் மீது தேவையற்ற பழியை சுமத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு புலனாய்வுப் பிரிவின் பிரதானி குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவித்துள்ளார்.