பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா, மாமனிதர் என்ற தமிழீழத்தின் அதியுயர் தேசிய விருது வழங்கி மதிப்பளிப்பு!
தமிழீழ மண்ணின் பெருமையையும்,தமிழ் மக்களின் வாழ்வியலையும், மாவீரர்களின் தியாகங்களையும் தனது கம்பீரக் குரலால் ஆர்ப்பரித்தவர்.
பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா அவர்களின் இனப்பற்றிற்கும் விடுதலைப்பற்றிற்கும் மதிப்பளித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் பணிமனை மாமனிதர் என்ற தமிழீழத்தின் அதியுயர் தேசிய விருது வழங்கி கௌரவிப்பு,
சுயநலம் கருதாது நேர்மையுடனும் ,நெஞ்சுறுதியுடனும் எமது சுதந்திரப்போராட்டத்திற்கு அரும்பணி ஆற்றிய கலைஞர் தேனிசை செல்லப்பா அவர்களை நாம் இழந்து விட்டோம்.
தமிழினம் பெருமைப்படும்படியாக கலையுலகில் பெரும் சாதனைகளைப் புரிந்த இந்த கலைமாமணியை இழந்து தமிழர் தேசம் சோகக்கடலில் மூழ்கிக்கிடக்கிறது.
திரு.தேனிசை செல்லப்பா ஒரு சிறந்த கலைப்படைப்பாளி.இவரிடம் கலைகளுக்கே உரித்தான உள்ளம் இருந்தது,வற்றாத கலையுணர்வு இருந்தது,கட்டுக்கடங்காத கற்பனை வளம் இருந்தது, கலைக்கு அணிசெய்கின்ற நிறைந்த அறிவு இருந்தது. தமிழ் மீது அளவு கடந்த பற்றும் பாசமும் இருந்தது .தமிழ் மண்ணின் விடுதலைக்கு பங்காற்றவேண்டும் என்ற உயரிய குறிக்கோள் இருந்தது.சுயமான ஆளுமை இருந்தது.இவை எல்லாம் ஒன்று கலந்த மனிதம் இருந்தது.இந்த அழகான மனித மாண்பு அனைவரையும் அவரை நோக்கிக் கவர்ந்து கொண்டது. தனது கலைப் படைப்புகள் ஊடாக மக்களிடையே போராட்ட விழிப்புணர்வையும்.ஒடுக்கு முறைக்கு எதிரான கொதிப்புணர்வையும் தூண்டிவிட்டார்.
சிங்கள அரச பயங்கரவாதம் எமது தாயக மண்ணிலே நிகழ்த்திய கொடுமைகளையும், கொடூரங்களையும் அதன் ஆழ அகலங்களையும் தனது இனிய குரலால் பதிவுசெய்தார்.
சுதந்திரப்போராட்டங்களுக்கு உந்துசக்தியாக ஊக்கசக்தியாக அமைவது தேசப்பற்று.இந்த தேசப்பற்று இவரிடம் நிறையவே இருந்தது.
கடல்கள் தாண்டி தாயகத்திற்கு வெளியே தூரதேசத்திலே ஒருவர் எத்தனை பெரும் பணியை தேச விடுதலைக்கு ஆற்ற முடியுமோ அதைத்தான் இவர் பாரத மண்ணில் இருந்து புரிந்தார்.
தமிழீழ மண்ணின் பெருமையையும்,தமிழ் மக்களின் வாழ்வியலையும், மாவீரர்களின் தியாகங்களையும் இவரது அழகிய குரலால் ஆர்ப்பரித்தவர்.அவர் பாடிய தமிழீழப் பாடல்கள் மூலம் வரலாற்றில் என்றும் வாழ்பவர்.தமிழ் மக்களுக்கு இவரது இழப்பு மாபெரும் துயர நிகழ்வு.
பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா அவர்களின் இனப்பற்றிற்கும் விடுதலைப்பற்றிற்கும் மதிப்பளித்து அவரது நற்பணியை கௌரவிக்கும் முகமாக ‘மாமனிதர்’என்ற அதியுயர் தேசிய விருதை அவருக்கு வழங்குவதில் பெருமையடைகின்றோம்.
அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எமது அன்பான ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
உன்னத இலட்சியத்திற்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களைச் சாவு அழித்துவிடுவதில்லை. சரித்திர நாயகர்களாக எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்கள் என்றும் வாழ்வார்கள்.


